அன்றாட செய்தித் தாள்களில் விபத்துகள் இல்லாமல் இருப்பதில்லை.
யாருக்கோ எங்கோ ஏற்படும் விபத்துகள் அனேகரை பாதிப்பதில்லை என்றாலும் ஒவ்வொரு விபத்துமே ஒரு படிப்பினை கொடுக்கக் கூடியவை.
சமீபத்தில் ஹாங்காங்கில் கடலடியிலே செல்லக் கூடிய ஒரு சுரங்கப்பாதையில் ஒரு மினி லாரி நின்று கொண்டிருக்க அதிலும் சும்மா நிற்கவில்லை டெய்ல் கேட் என்று சொல்லப்படும், அதன் பின் புறக் கதவை திறந்து வைத்துக் கொண்டு நின்றிருந்தது. ஹாங்காங்கில் மினி லாரிகளில் சரக்கு எடுத்துச் செல்ல நிறைய ஆட்கள் தேவைப்படுவதில்லை. அதன் பின்புறக் கதவு லிஃப்ட் போல கீழிறங்கும். பின்னர் ஒரு சக்கரம் வைக்கப்பட்ட பளு தூக்கும் வண்டியில் பெட்டிகளை வைத்து விட்டு அந்த லிஃப்ட் போல சமாச்சாரத்தில் ஏறி மினி லாரிக்குள் தள்ளி விடுவார்கள். அப்படிப் பட்ட கதவைத் தான் பாதியில் திறந்து வைத்து நின்றிருந்தது அந்த மினி லாரி.
சாலையில் அந்த லேனில் வந்த ஒரு மாடி பஸ் கொஞ்சமேனும் வேகத்தை குறைக்காமல் அதே வேகத்தில் வந்து மினி லாரியில் மோத அந்த டெயில் கேட் என்று சொல்லப்படும் கதவு ஒரு பிளேடு போல பஸ்ஸை துண்டாக வெட்டியது.
விபத்தின் காணொளி இங்கே. கோரமாக இருக்காது. இருப்பினும் இளகிய மனமுடையவர்கள் தவிர்த்து விடலாம்.
ஆனால் நீங்கள் வண்டி ஓட்டுபவராக இருப்பின் கொஞ்சம் மனதை இறுக்கிக் கொண்டு பார்த்து விடுங்கள். சாலையில் இனி கவனமாக ஓட்டுவதற்கு உதவும்.
இத்தனைக்கும் அந்த மினி லாரி அந்த இடத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நின்றது தான் அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மெத்தனத்திற்கு சுரங்கப் பாதையை நிர்வகிக்கும் நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பலரும் இல்லை மினி லாரி மீது தான் தவறு என்று ஒரு பகுதியும் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விபத்தின் விளைவால் இரண்டு உயிர்கள் போனது சோகம்.. பஸ் ஓட்டியவரும் மினி லாரியில் நின்று கொண்டிருந்தவரும் இறந்து போனார்கள்.
இறந்து போன பஸ் டிரைவரின் பெயர் சோ க்வாக் வா. அவரது மனைவி சொல்கையில் "என் கணவர் அவர் உடல் நலத்தை பாராது வேலை பார்த்தார். ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள். எங்களுக்கு மூன்று குழந்தைகள் ஒரு மகள் இரண்டு மகன்கள். எல்லோருமே 11 வயதிற்குள் தான். வழக்கமாக தினமும் அவரது இடைவெளி நேரத்தில் அழைத்துப் பேசுவார். குழந்தைகளைப் பற்றி அடிக்கடி விசாரிப்பது வழக்கம். சம்பவம் நடந்த அன்று போனே வரவில்லை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அவர் இறந்த செய்தி வந்தது. நொறுங்கிப் போனோம். அவரது 80 வயது தாயாரிடம் அவர் மறைவுச் செய்தி கூட இன்னமும் சொல்லவில்லை" என்று கதறுகிறார்.
ஒவ்வொரு விபத்திற்குப் பின்னும் ஒரு குடும்பம் நசுங்கிப் போகிறது.
நின்று கொண்டிருந்த வண்டியில் மோதி விபத்து நடப்பது இது புதிதல்ல. எல்லா நாடுகளிலும் ஊர்களிலும் நடந்திருப்பது தான்.
இதற்கு காரணம் ஒரே நேர்கோட்டில் பார்வையை செலுத்தி கண்ணசைக்காமல் ஓட்டுவது தான் என்கிறார்கள். ஏனெனில் அப்படி ஓட்டும் போது நிற்கும் வண்டிகள் நகர்வது போலவே தெரியுமாம்.
அதனால் தான் அவ்வப் போது பக்கவாட்டில் ஒரு சில விநாடிகள் பார்த்து விட்டு நேராக சாலையைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
Motion induced Blindness என்ற சமாச்சாரம் இருக்கிறது. வலைதளத்தில் தேடிப் பாருங்கள். விபத்து நடந்த பின் தேடுவது உசிதமல்ல. பாதுகாப்பு விஷயங்கள் அனைத்தும் முன் ஜாக்கிரதையாக பார்ப்பது தான் பலனளிக்கும். ஆபத்து நேரத்தில் கையேடுகள் உதவாது.
இது புரிவதற்கு இந்த படத்தை பாருங்கள். நடுவில் உள்ள புள்ளி அணைந்து அணைந்து மறையும். அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தீர்கள் எனில் பக்கவாட்டில் உள்ள புள்ளிகள் மறைந்து விடும். உண்மையில் அது மறைவதேயில்லை. அங்கேயே தான் இருக்கிறது. இது தான் MIB.
நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருக்கும் வண்டியில் மோதுவது இதனால் தான்.
ஒவ்வொரு விபத்தில் போவது அந்த உயிர் மட்டுமல்ல. அதற்குப் பின் ஒரு குடும்பம் இருக்கிறது. வருங்காலம் கலைத்துப் போடப் படுகிறது. இறந்தவரின் சாவு ஒரு நாள் தான். அன்றாடம் அந்தக் குடும்பம் செத்து செத்து பிழைக்கப் போகிறது. இதை நினைவில் கொள்ள வேண்டும்.
மற்றொரு விபத்து லாண்டாவ் தீவில் சென்ற வருடம் நடந்தது. ஒரு நொடியில் தூங்கிப் போன பஸ் டிரைவர் இதே போல ஒரு டிரக்கில் மோத 19 பேர் படுகாயமடைந்தனர்.
அவர் அப்போது தூங்கியதற்கு காரணம் அவரது கான்ஸர் பாதித்த மனைவிக்கு அருகிலிருந்து கவனித்துக் கொண்டதால் விளைந்த தூக்கமின்மையால். இந்த ஓட்டுனருக்கு 17 மாதங்கள் சிறைத்தண்டனை அளித்தது நீதி மன்றம். அப்படியே தீர்ப்பில் 'உங்கள் மனைவியை பார்த்துக் கொண்டது சரி, ஆனால் பஸ்ஸில் இருந்த பயணிகளை எப்படி மறக்கலாம்?' என்றும் கேட்டது. குற்றத்தை ஒப்புக் கொண்ட ஓட்டுனரிடம் நீதிபதி “எங்காவது நிறுத்தி கொஞ்சம் தூங்கி விட்டு தொடர்ந்து ஓட்டியிருக்கலாமே” என்றும் கேட்டிருக்கிறார் ! (அப்படி ஒரு பஸ் டிரைவர் செய்ய முடியுமா என்று தெரியவில்லை.)
நீதியும் விதியைப் போலவே சில வேளைகளில் விசித்திரமாக விளையாடுவதுண்டு.
மேற்சொன்ன சம்பவங்களுக்கு தொடர்பில்லாத இன்னொரு சம்பவம்.
ஹாங்காங்கில் ஒரு தெரு முனை. அதன் வழியே வந்த மினி பஸ் ஒன்று சடாரென திரும்ப அந்தப் பக்கம் பழைய அட்டைப் பெட்டிகள் சேகரித்துக் கொண்டு வண்டியை தள்ளிக் கொண்டு வந்த ஒரு வயதான பெண்மணியின் மீது மினி பஸ் ஏறி சம்பவ இடத்திலேயே இறந்து போகிறார்.
(இறந்து போன பாட்டி அல்ல )
இது நடந்தது. 2017. இந்த வாரம் தான் அந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.
வண்டி ஓட்டுனர் 63 வயதானவர். காலம் முழுவதும் டிரைவராகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் மினி பஸ் ஓட்டத் துவங்கியது சமீபத்தில் தான்.
அந்தக் காணொளியைப் பார்த்த நீதிபதி, "ஆமாம் நீங்கள் மினி பஸ்ஸை விதி முறைகள் மீறி கொஞ்சம் வேகமாகத்தான் ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறீர்கள். அந்த வயதான பாட்டி உருவத்தில் மிகச் சிறியதாக இருந்தது உங்களுக்கு தெரியாது போனது என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்" என்றார்.
இந்தக் குற்றத்தையும் அந்த மினி பஸ் டிரைவர் ஒப்புக் கொண்டு விட்டார். குற்ற உணர்வு இருப்பதாகவும் தெரிவித்தார்.
முதலில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை கொடுத்த நீதிபதி பிற்பாடு அதை நிறுத்தியும் வைத்துள்ளார். (Suspended Jail term) அதற்குப் பின் அவர் சொன்னது தான் கண்ணீர் வரவழைக்கும் செய்தி.
மினி பஸ் ஓட்டுனருக்கு இரண்டு பேத்திகள். அதில் ஒருவர் செரிபரல் பால்ஸி நோய்வாய்ப்பட்டவர். அவர்கள் இருவரையும் இந்த மினி பஸ் ஓட்டுனர் தான் காப்பாற்றுகிறார். அந்த மினி பஸ் டிரைவரின் குடும்பத்தின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்தார் நீதிபதி.
இது போல விபத்துக்கள் இரக்கமற்ற பெளதீக விதிகளால் ஏற்பட்டது என்பது நமக்குப் புரிகிறது. விதியின் மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கும் புரியும்.
ஆனால் அறியாத அந்த பிஞ்சுகளுக்கு இது எதுவுமே புரியப் போவதில்லை. ஒரு வேளை அந்த டிரைவர் சிறைக்குப் போக வேண்டியிருந்தால் அந்தக் குடும்பத்தின் கதி ?
விபத்து !!!
ராம்.
Leave a comment
Upload