பிப்ரவரி 26 ந்தேதி அதிகாலை நேரம்… இந்திய வான்வெளி பகுதியிலிருந்து சீறிப் பாயந்து சென்ற 12 இந்திய விமான படையை சேர்ந்த மிராஜ் 2000 போர்விமானங்கள் பாகிஸ்தான் பாலகோட் ஜெய்ஷே முகமது தீவிரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ எடைகொண்ட குண்டுகளை போட்டு இலக்குகளை தாக்கியது! மிராஜ் 2000 போர் விமானங்கள் பிரெஞ்ச் நாட்டின் டாசல்ட் ஏவியேஷன் தயாரிப்பாகும். தற்போது இந்த நிறுவனம்தான் ரபேல் போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை போர் விமானத்தில் இருந்த 80 சதவீத குண்டுகளை, பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இலக்குகள் மீது குறிபார்த்து தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் தன் நாட்டு வான் எல்லையில் இந்திய போர்விமானங்கள் அத்துமீறி நுழைந்து தன் நாட்டின் ஒரு பகுதியில் உள்ள காடுகளில் உள்ள மரங்களை விமானம் மூலம் குண்டு வீசி, சேதாரம் செய்துவிட்டது என்று ஒப்பாரி வைத்தது. பாகிஸ்தான் எப்படியும் தன் நாட்டில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் முகாம் மீது போர்விமானங்கள் குண்டு வீசவில்லை என்ற மறுப்பினை எப்படியும் உலக நாடுகள் முன் வைக்கும் என்று இந்திய விமான படை பாகிஸ்தானில் தீவிரவாதி முகாம்கள் மீது தான் தாக்கிய பகுதியினை, 12 பக்கம் ஆவணங்களாக மாற்றி, உயதர செயற்கைகோள் படங்களாகவும் ரேடாரின் துல்லிய பதிவுகளையும் மத்திய அரசிற்கு சமர்பித்துள்ளதாக டெல்லி வட்டார தகவல் தெரிவிக்கிறது.
பாகிஸ்தான் பாலகோட்டில் இந்திய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளோ அல்லது பொதுமக்களோ பலியானர்களா என்ற சரியான விவரம் தெரியவில்லை என உலக மீடியாக்கள் சந்தேகம் தெரிவித்தன. இந்திய விமானப்படை 'தீவிரவாதி முகாம்களை தாக்கிய விவரங்கள் இராணுவ ரகசியங்கள் என்பதால் இப்போதைக்கு இதனை வெளிப்படையாக சொல்லமுடியாது. மத்திய அரசு சரியான நேரத்தில், பாகிஸ்தான் பாலகோட்டில் நடத்தப்பட்ட இந்திய விமான படை குண்டு வீச்சு தாக்குதலில் எத்தனை தீவிரவாதிகள் இறந்தனர் என்ற விவரம் வெளியிடப்படும். பாலகோட் தாக்குதல் நடந்தப்பட்ட போது 300 செல்போன்கள் உயிர்ப்புடன் இருந்தன' என இந்திய விமானப்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"இந்திய விமானப்படை பயன்படுத்திய மிராஜ் 2000 போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டுகள், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தின் மேற்கூரையை பிய்த்துக்கொண்டு உள்ளே சென்று வெடித்து மிகப்பெரிய அளவிலான உயிர்பலியை ஏற்படுத்தி இருக்கும். பாலகோட் துல்லிய தாக்குதலில் விமானத்திலிருந்து விசப்பட்ட குண்டுகள் இஸ்ரேல் நாட்டில் தயாரான ஸ்பைஸ் 2000 துல்லிய குண்டுகள். அவை போர் காலங்களில் பயன்படுத்தப்பட்டால் துல்லியமாக எதிரி இலக்கினை தாக்கி அழிக்கும் திறன் பெற்றதாகும். இந்திய போர் விமானங்களில் இருந்து 80 சதவீத குண்டுகள் தங்கள் இலக்கினை தாக்கி அழித்துள்ளது. மீதி 20 சதவீத குண்டுகள் தாக்குதலின் போது எதிரி இலக்கின் அருகில் சிறிய மாறுபாட்டில் விழந்து வெடித்து எதிரி கட்டிடங்களுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவித்து இருக்கும்" என்கிறார் நமது விமானப்படை அதிகாரி.
பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 சேர்ந்த 12 விமானங்கள் துல்லியமாக தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்திய போது, தீவிரவாதிகள் அனைவரும் உறக்க நிலையில் இருந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் விமானப்படை மற்றும் இராணுவத்தின் கண்களில் மண்ணை தூவிய இந்திய விமானப்படை பாகிஸ்தான் செயற்கைகோள்களுக்கு டிமிக்கி கொடுத்து, துல்லிய தாக்குதல் நடத்தியது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எதிரி நாட்டின் புலனாய்வு துறையினருக்கு தெரியாமல் ரகசியம் காத்து தாக்கியதுதான் ஹைலைட்!
இந்திய போர் விமானங்கள் பாலகோட் தீவிரவாதி முகாம் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலை, இந்தியாவின் ராணுவத்திற்கு உதவி புரிய அனுப்பட்ட இஸ்ரோவின் 8 செயற்கோளில் ஒன்று துல்லிய தாக்குதலை நடைபெறுவதற்கு முன்பும் தாக்குதல் நடைப்பெற்ற பின்னும் புகைப்படம் எடுத்து வெளியிடப்பட்டுள்ளது. பாலகோட் துல்லிய தாக்குதல் இந்திய விமானப்படை நடத்திய போது, தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் வானில் மேக மூட்டமாக இருந்தது. இந்தியாவின் நுண்ணறிவு ரிசாட்-2 (RISAT2) செயற்கைகோள் மேகங்களை ஊடுருவி தாக்குதல் நடைபெற்ற பாலகோட் தீவிரவாதி பதுங்கிய இடம் குண்டுவீச்சில் சிதைந்த கட்டிடங்களை துல்லியமாக படம்பிடித்து இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
பாலகோட் தீவிரவாதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதல் புகைபடங்களை வெளியிட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் சில 'அப்படி ஒரு தாக்குதல் நடத்தப்படவேயில்லை' என கூறுகிறது.
இந்நிலையில் "பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி தீவிரவாதிகளின் இலக்கினை தாக்கி அழித்து தீவிரவாதிகளை கொன்ற விவரங்கள் இந்திய ராணுவ ரகசியம் என்பதால் நாங்கள் சமர்ப்பித்த புகைப்படங்களும் அறிக்கையும் மத்திய அரசு வெளியிடும் போதுதான் விமானப்படையின் துல்லிய தாக்குதலும் எதிரிகளுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் விவரங்களும் தெரியும். பால்கோட் துல்லிய தாக்குதல் விவரங்களை பிரதமர் மோடி விரைவில் வெளியிடுவார்" என்கிறார் மத்திய அரசின் செய்தி பிரிவு அதிகாரி ஒருவர்.
Leave a comment
Upload