தொடர்கள்
பொது
பேட் கேர்ள்-ஒரு பார்வை - சத்யபாமா ஒப்பிலி

20250108081049336.jpg

ஒரு பேராசிரியையின் பார்வையில்.....

வெள்ளித்திரையை சார்ந்தவர்களை கூத்தாடிகள் என்று சொன்னாலும், அவர்களை மிகமிக முக்கியமானவர்களாகத்தான் கருதுகிறோம் என்று தோன்றுகிறது. சமுதாயத்தை மனதில் கொண்டே அவர்கள் படம் எடுக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாகத்தான் இருக்கிறது. நானே அப்படித்தான் எழுதியிருக்கிறேன் ஜெயிலர் வந்த பின்னும், புஷ்பா வந்த பின்னும்.

இப்போது பேட் கேர்ள் பற்றிய பரபரப்பை பார்க்கும் போது, சினிமாத்துறையில் மேல் நம் எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று புரிகிறது. படம் வெளி வரும் முன்னரே அதைப் பற்றிய சர்ச்சை கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இதைப் போன்ற படங்களால் கலாச்சாரம் சீரழிந்து விடுகிறது என்று கூறும்போது ஆமோதித்து கடந்து போகத் தோன்றவில்லை. ஏதோ ஒரு நெருடல் அந்தப் பார்வையை முழுவதுமாக அங்கீகரிக்கத் தடை போடுகிறது. ஒரு நாற்பது வருடங்களுக்கு முன் அடிக்கிற கை தான் அணைக்கும் என்ற செய்தி பெண்களுக்காக சொல்லப்பட்டது. அதை ஆமோதித்துக் கொண்டாடினோம். கொஞ்சம் கடந்து வந்து கற்பழித்தவனையே திருமணம் செய்து வைத்தால் அந்த பெண்ணுக்கு நியாயம் வழங்கப் பட்டதாக அனைவரும் அங்கீகரித்தோம், பின்னர் அடிமைப் படுத்தும் கணவனை கடந்து வெளியே வருபவளை புதுமைப் பெண்ணாகப் பார்த்தோம்.

இன்னும் அங்கேயே தான் நின்று கொண்டிருக்கிறோம். சிந்தனை மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. கேள்விகள் நிறைய கேட்கப் படுகின்றன. நாற்பது வயதைக் கடந்தவர்கள் அனைவரும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறோம் என்று தான் தோன்றுகிறது. உலகத்தின் அத்தனை படிமங்களையும் கை அடக்கத்தில் கொண்டு வந்து தற்கால இளைஞர்களுக்கு கொடுத்தவர்கள் நாம். அவர்கள் நிறைய பார்க்கிறார்கள் அதனால் நிறைய கேட்கிறார்கள். பத்துவருடங்களுக்கு மேலே ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறேன். ஒவ்வொரு வருடமும் பல மாணவிகளை கடந்து வருகிறேன்.

ஒவ்வொரு வருடமும் பல பாடங்களை கற்றும் வருகிறேன். கட்டுப் பாடுகளுக்கு உட்பட்டு, கோட்பாடுகளை ஏற்று அமைதியாக நன்றாகக் படித்து முடித்து வெளியேறும் குழந்தைகளும் உண்டு. ஏகப்பட்ட கேள்விகளை மனதில் கொண்டு, மனம் எதையும் ஏற்காமல், உலகத்தின் பன்முகங்களை ஆராய்ந்து, வாதாடி, வருந்தி, சிந்தனையாளர்களாய் வெளி வரும் குழைந்தைகளும் உண்டு, எதைப் பற்றியும் கவலைப் படாமல், வயது சொல்லும் வழியில் சென்று பிடிவாதமாக இருக்கும் குழந்தைகளையும் கடந்து வந்திருக்கிறேன், வந்து கொண்டு இருக்கிறேன். அனைவரும் சேர்ந்தது தான் இந்த சமூகம். இவர்கள் யாருமே பேட் கேர்ள் அல்ல.

தேடல்கள் மீற, தடைகளையும் மீறுகிறார்கள். நம் தலைமுறையினர் தொழில் நுட்பத்தால் நிறைய ஜன்னல்களை திறந்து விட்டிருக்கிறோம். பல வித சிந்தனைகளுக்கு அறிமுகம் ஆகிறார்கள். கோட்பாடுகள் கட்டுப்பாடுகளாகத் தெரிகிறது. அதனால் தான் பத்தினியும், தாய்மையும், அவர்களுக்கு ஒரு பாரமாகத் தெரிகிறது. இது சிந்தனையின் மாற்றம். மாறுபட்ட தர்மம். இதை நாம் ஓப்புக்கொள்கிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். இந்த கருத்தை முன் வைப்பவர் சமூகத்தின் கறுப்பாடுகள் என்னும் சிந்தனை வரவேற்கத்தக்கதாக இல்லை என்பது என் கருத்து.

எத்தனையோ சங்கிலிகளை முறிக்க வேண்டி இருக்கிறது, முறிக்க முறிக்க வேறு இடத்தில் பின்னப்படுகிறோம். எல்லாவற்றிலும் வேகத்தையும் மாற்றத்தையும் எதிர் பார்க்கும் இந்த இளைய சமூகம் இதனிலும் எதிர் பார்க்கிறது. தங்கள் தாயைப் பார்த்து, உறவுகளை பார்த்து சுதந்திரம் என்னும் வார்த்தையை தங்களுக்குள் வரையறுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனுபவத்தையே பாடமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். வர்ஷா சொல்லும் உலகம் கிடையாது என்று நம்பினால் நாம் ஒரு 30 வருடம் பின் தங்கி இருக்கிறோம். அந்த உலகத்திற்குள் சென்று புரிந்து கொண்டால், நிறைய 'தவறுகளை" தடுக்கலாம். அதை விட்டுவிட்டு இதைப் பற்றி பேசியதாலேயே கலாச்சார கேடு கொண்டு வருகிறார்கள் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாக தெரியவில்லை. அமரனில், முகுந்த் வரதராஜனின் ஜாதியை சொல்லாமல் இருப்பது முழுக்க, முழுக்க அரசியல். அது எந்த அளவிற்கு தவறோ, அதே தவறு ஒரு ஜாதியை மையமாக வைத்ததினாலேயே, ட்ரைலரிலேயே ஒரு படத்தை சாடுவது.

சினிமாவில் ஏற்றத்தாழ்வுகளை மிகைப்படுத்தி காட்டுவது தான் வழக்கம். குறிப்பிட்ட சமூகத்தில் இருந்து வருவதால் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்த இப்படி யோசித்திருக்கலாம்.

எல்லையை மீறினால், சமூகத்திற்கு பதில் சொல்லும் கட்டாயம் திரை உலகத்திற்கு உண்டு. அதே நேரம், படம் பார்க்கும் நமக்கும் எதற்காக கவலைப் படவேண்டும் என்ற தெளிவு வர வேண்டும். பேசியதற்காகவே சில விஷயங்களை நிராகரித்தால், உண்மை நிலையை அறிந்து கொள்ளாமலே போக நேரிடலாம். அது இன்னும் ஆபத்தானது.