தொடர்கள்
அனுபவம்
பள்ளி தலம் அனைத்தும் .... -மரியா சிவானந்தம்

20250106184755851.jpg

நாடு எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறது?

பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமி ஒருத்தி மூன்று ஆசிரியர்களால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டாள் என்ற செய்தியைக் கேள்விப் பட்டதில் இருந்து அனைவரும் கதி கலங்கிப் போய் இருக்கிறோம்.

என்ன மாதிரியான சமுதாயக் கட்டமைப்பில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று அதிர்ச்சி அடைகிறோம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் அருகே உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் நடந்துள்ள இந்த திடுக்கிடும் சம்பவம் , பெண் பெற்றவர்களை நிலை குலைய வைத்துள்ளது.

அப்பள்ளியில் படிக்கும் சிறுமி ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை என்பதால், காரணத்தைக் கண்டறிய அம்மாணவி படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியை அவள் வீட்டுக்குச் சென்றார். அப்போதுதான் மாணவி மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்துள்ளது. சற்றும் தாமதிக்காமல் தலைமை ஆசிரியை காவல்நிலையத்தில் புகார் தர, அம்மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தது காவல்துறை. இப்போது பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மனநல ஆலோசனையும் அளிக்கப்பட்டு வருகிறது.

கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது இது முதல் முறையில்லை .ஆனானப்பட்ட AIIMS ,அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி பயிற்றுவிக்கும் இடங்களில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்றால் அரசு நடத்தும் ஊராட்சி ஒன்றிய நடுத்தரப் பள்ளியிலும் அதே லட்சணம்தான்.

சில மாதங்களுக்கு முன் கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலியாக ஒரு என்சிசி கேம்ப் நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளித் தாளாளர் மற்றும் 11 பேரை கைது செய்தது நினைவில் இருக்கிறது. முடிவில்லாத சங்கிலித் தொடர் போல இது போன்ற சம்பவங்கள் நம் மண்ணில் நடந்துக் கொண்டே இருக்கின்றன.

இந்த ஆண்டின் துவக்கத்தில் பாலியல் குற்றங்களுக்கு எதிரான மசோதாக்கள் தமிழக சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது .Tamil Nadu Prohibition of Harassment of Women (Amendment) Bill, 2025. எனப்படும் இந்த மசோதாவில், பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு தரப்படும் தண்டனைகள் மற்றும் அபராதத்தின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

இக்குற்றவியல் சட்ட மசோதா வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிக்கு அளிக்கப்படும் பத்தாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனைய 14 ஆண்டுகளாக உயர்த்தி உள்ளது. குற்றவாளி காவல்துறையைச் சேர்ந்தவராக இருந்தால், தண்டனை இரட்டிப்பாக உயருகிறது.கொடுமைக்கு ஆளாகும் நபர் 12 வயதுக்கு குறைவானவராக இருந்தால் குறைந்த பட்ச தண்டனை ஆயுள் தண்டனை,அதிக பட்ச தண்டனை மரண தண்டனை.

சட்டத்தின் பிடி இறுக, இறுக குற்றங்கள் குறைய வேண்டியது இயல்பு. இங்கு மேலும் மேலும் இது போன்ற குற்றங்கள் மலிந்து வருகின்றன. இந்த சம்பவத்தில் கைதான ஆசிரியர்களின் பெயர்கள் , படங்களை மீடியாக்கள் வெளி விட்டுள்ளன. அவர்கள் 37, 48,57 வயதுள்ள ஆண்கள் ! மகள் வயது மட்டுமல்ல , பேத்தி வயதுள்ள குழந்தையை தங்கள் காம இச்சைக்கு பலியாக்கும் கொடூரம் அப்பள்ளியில் நடந்தேறி உள்ளது. இந்த செய்திகள் நம் உள்ளத்தில் ரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது.

இவற்றைப் பார்க்கும் போது நம் சமூக அமைப்பின் மேலேயே கோபம் வருகிறது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பும், பெண் உடலுக்கு உரிய மரியாதையும் தர முடியாத சமுதாயம் வேறன்ன பெரிதாக சாதிக்க போகிறது?

'கல்வி பெறுவதும், கல்வி கற்பிப்பதும் நமக்கு அடிப்படை பண்புகளைத் தரவில்லை எனில், அக்கல்வியால் என்ன பயன்?' என்ற கேள்வி எழுகிறது.ஒரு சில மோசமானவர்களால், ஆசிரிய சமுதாயமே தலைகுனியும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படும் போது, எவ்வித தயவு தாட்சண்யமின்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எவ்வித பின்னணி இருந்தாலும், நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெற்றோர்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

ஒரு மாதமாக ஒரு சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கான காரணத்தை அறிந்த பெற்றோர், அமைதியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? தலைமை ஆசிரியருக்கு முன்பே அவர்கள் காவல் துறையை நாடி புகார் கொடுத்திருக்க வேண்டும் அல்லவா?

அரசு பெண் மருத்துவர்கள் .அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்குச் சென்று பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அது பாடத்திட்டத்தின் ஒரு கட்டாயப் பகுதியாக இருக்க வேண்டும். குழந்தைகள் உரிமை ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

"பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்குவோம் ' கல்வி கற்பிக்கும் இடங்கள் கோவிலுக்கு நிகர். இது போன்ற செயல்களால் அக்கோவில்களை அசுத்தப்படுத்தும் பதர்களை, களைந்து அப்புறப் படுத்த வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்வோம் .

.