சென்னையில் இருந்து மாற்றல் பெற்று தென்னாற்காடு மாவட்ட நிருபராக அவன் 1978ஆம் வருடம் மே மாதம் இரண்டாம் வாரத்தில் பொறுப்பேற்றான். நெய்வேலி வாழ்க்கை அவனுக்கு தனிப்பட்ட முறையில் இதமாகவே இருந்தது. சுமார் அரை ஏக்கர் நிலத்தில் மரங்களுடன் கூடிய ஒரு பெரிய வீடு. அகன்ற, சுத்தமான சாலைகள். மெத்தப் படித்தவர்களின் சகவாசம். மரியாதை கொடுத்த நெய்வேலி நிர்வாகம். சென்னையில் திருவல்லிக்கேணியில் பெரியதெருவில் பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு தங்கும் விடுதியில் சிறு அறையில் வசித்து வந்தவனுக்கு வசிப்பிடம் பெரிய மாறுதல் தான். ஆனால் அவன் நெய்வேலியில் இருந்து காலையில் புறப்பட்டு, கூட்டில் அடையும் பறவை போல் இரவில் தான் வீடு வந்து சேர்வான்.
நெய்வேலியில் இருந்து கடலூர் 50 கி.மீ. வேறு திசையில் சிதம்பரம் 50 கி.மீ. அதே போல் விழுப்புரம் 50கி.மீ. எல்லாம் வெவ்வேறு திசைகளில். அந்த மாவட்டத்தின் வெவ்வேறு ஊர்கள் பற்றியும் அவன் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. மாவட்டத்தின் வரைபடம் (Map) எங்காவது கிடைக்குமா? என்று தேடினான். நல்ல வேளையாக மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தவர், வேறு யாருமல்ல, எம்.நடராஜன். சசிகலாவின் கணவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவனுடன் படித்தவர். ஒரே விடுதியில் தங்கியவர்கள். பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் சக உறுப்பினர்கள். எட்டு வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் சந்தித்தார்கள், நட்பு தொடர்ந்தது. நடராஜன் அவனிடம் மாவட்டத்தின் முக்கிய ஊர்கள் பற்றிய தகவல்கள் சொல்லி ஒரு பழைய வரைபடத்தைத் தந்தார். அது பயனுடையதாக இருந்தது. எங்கே, எப்படிச் செல்லாம் என்பதை வழிகாட்டுவதைப் போல் அமைந்தது அது.
நெய்வேலியின் சற்றே சாவகாசமாக இருந்த தினங்களில் தன் தொழிலைப்பற்றி யோசித்துப் பார்த்தான். தொடக்கத்தில் கல்லூரியில் இங்கிலீஸ் டியூட்டர், படிப்பு பி.ஏ. மட்டுமே. இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சம்பளத்தில் மிச்சம் பிடித்த பணத்தை வைத்துக் கொண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் ஆங்கில இலக்கிய எம்.ஏ. படிப்பு. பிறகு விரிவுரையாளர், பேராசிரியர், முதல்வர் என்றபடி ஏழு கல்லூரிகளில் 11 வருட கல்லூரி வாழ்க்கை.
குடும்பத்தினரும், நண்பர்களும், ‘ஓரிடத்தில் இல்லாமல் ஊர் ஊராக சுற்றுகிறாயே?’ என்றார்கள். அப்போது அவன் சொன்னான், ‘கல்லூரி ஆசிரியராக தொடக்கத்தில் சில வகுப்பறைகள், முதல்வரானதும் கல்லூரி, இப்போது நிருபரானதும் ஒரு மாவட்டம் என் எல்லை’ என்றான். உறவினர்கள் அதை ஒப்புக் கொள்ளவிட்டாலும், அவன் தன் தொழில் எல்லை விரிவுபட்டதற்கு மகிழ்ந்தான்.
விதி அவனை ஏழு ஆண்டு கால நிருபர் வாழ்க்கையை நெய்வேலியிலேயே கழிக்க விடவில்லை. 5வருடங்களுக்குப் பிறகு கடலூருக்கு ஜாகை மாறினான். அதற்கான அனுமதியை செய்தி ஆசிரியரிடம் கோரியபோது, ‘ஏன் மாற விரும்புகிறாய்?’ என்று அவர் கேட்டார். அவன் சொன்னான், ‘Neyveli is a place of power generation & not news generation.’
அவன் அப்படிச் சொன்னதற்கு காரணம் இருந்தது. மாவட்டத்தின் பகுதிநேர தமிழ் நிருபர்கள் எல்லோரும் கடலூரில் தான் இருந்தார்கள். நெய்வேலியில் இருந்து நினைத்தபோது அவர்களை தொடர்பு கொள்ள முடிந்ததில்லை. காரணம் நேரடித் தொலைபேசி வசதியில்லை. தொலைபேசி இணைப்பகம் மூலம் தான் இன்னொரு எண்ணுடனும் பேச முடியும். விரைவாகச் செயல்படும் இயல்பு கொண்ட அவனுக்கு தகவல் தொடர்பின் தாமதம் ஒரு தடையாகவே இருந்தது.
அது மட்டுமல்ல உளவுத்துறையிருடன் நேரடி சந்திப்பே தகவல்பெற உதவக் கூடியது. மாவட்ட உளவுத்துறை அதிகாரிகள் கடலூரில் தான் இருந்தார்கள். மத்திய உளவுத்துறை அதிகாரிகள், நெய்வேலி, கடலூர், சிதம்பரம் என்றபடி மூன்று ஊர்களில் இருந்தார்கள். அவனுக்கு மாவட்டத்தின் உளவுத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசாமல் சில முக்கிய செய்திகளை எழுத முடியாத நிலை. எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அதிகாரிகள் நிருபர்களுக்கு முக்கிய செய்திகளைச் சொன்னதில்லை. நேரில் சந்தித்தால் ஏதாவது தகவல் பெறமுடியும் என்ற நிலை. அதனால்தான் கடலூருக்கு தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டான்.
நெய்வேலியின் தூய்மை, தடையில்லாத மின்சாரம், தண்ணீர் ஆகியவை கடலூரில் கிடைக்கவில்லை. ஊரே தூசியும் தும்பட்டையுமாக இருந்தது. நெய்வேலியில் இருந்துவிட்டு கடலூருக்கு திரும்பியபோது அவனது மூன்று வயது மகள், ‘ஓட்டைக் கடவூர்’ என்று சொல்லிவிட்டாள். அந்தக் கடலூரில் தான் இரண்டு வருடங்கள் குடியிருந்தான். அங்கிருந்தபடியே சிதம்பரம், நெய்வேலி, விழுப்புரம் என்று சென்று வந்தான். எந்த நேரமும் செய்திக்கான தகவல் கிடைக்கும் என்பது தான் கடலூரில் அவனுக்கு கிடைத்த வசதி. அதுதான் அவன் தொழிக்கு முக்கியம். வாழ்க்கை சுகத்தைப் பார்த்தால் தொழிலை திறம்படச் செய்ய முடியாது.
மழை, வெள்ளம் புயல் என்றால் வேறு தொழிகளில் உள்ளவர்கள் வீட்டில் தங்கிவிடலாம். ஒரு நிருபர் அப்படி இருக்க முடியுமா? மழை வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பார்த்து எழுதியாக வேண்டும். ஏதோ ஒரு இடத்தில் கலவரம் நடக்கிறது என்றால் ஒதுங்கிச் செல்ல முடியுமா? கலவரம் நடக்கும் இடத்திற்கே சென்றாக வேண்டும். அந்தக் கால கட்டத்தில் வீட்டில் சாப்பிட்ட நாட்கள் வெகு குறைவு.
ஒரு முறை விருத்தாசலத்தில் மணிமுக்தா நதி பாலம் தொடங்கும் மூன்று சாலை சந்திப்பில் ஒரு பெரிய கலவரம். அதை அடக்குவதற்காக சார்ஜ் என்று சொல்லிவிட்டார் போலீஸ் அதிகாரி. கலவரம் செய்து கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டடிருந்தவர்கள் எல்லோரும், அங்குமிங்குமாக ஓடினார்கள். துப்பாக்கியை தூக்கிய போலீஸ்காரர்களுக்கு அந்த களேபரத்தில் நிருபர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. கூட்டத்தினர் இடையே அவனும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் தண்டபாணியும் இருந்தார்கள். ஒதுங்கிக் கொள்ள பதுங்கிக் கொள்ள இடமில்லை. மணிமுக்தா நதியில் அருகில் தண்ணீல் இல்லை. இருவரும் அந்த மணற்பரப்பில் குதிகால் பிடறியில்பட ஓடினார்கள். ஆற்றில் மறுகரையில் தான் தண்டபாணியின் வீடு இருந்தது. ஆற்றங்கரையில் இருந்து நேராக தெருவிற்குள் நுழைந்துவிடலாம். அப்படி அவன் அந்த கோலத்தில் நண்பருடன் அவன் வீட்டில் நுழைந்தபோது அரசாங்க வேலை பார்த்துக் கொண்டிந்த தண்டபாணியின் மனைவி கனகவல்லி, ‘உங்கள் நிருபர் வேலையே ஒரு தொல்லை, கலவரத்தின் நடுவேயா சென்று செய்தி சேகரிப்பது’ என்று கேட்டார்.
ஓடிய களைப்பு தீர இருவரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டபோது திருமதி.கனகவல்லி இருவருக்கும் காபி கொடுத்தார். அப்போது அவனையும் பார்த்துக் கேட்டார், ‘அண்ணா, கடலூரில் இருந்தபடியே இந்த செய்தியை சேகரித்திருக்கலாமே? இங்கு வந்தா ஆற்று மணலில் ஓடுவது?’ நான் நிச்சயம் உங்கள் மனையிடம் இதுபற்றி பேசப் போகிறேன். இப்படிப் பட்ட நிகழ்வுகளெல்லாம் நிருபர் வாழ்க்கையில் சகஜம்தான். இவன் கடலூர் திரும்புவதற்குள் விருத்தாசலத்தில் இருந்த கனகவல்லி அவன் மனைவியிடம் தகவல் சொல்லிவிட்டார்.
அப்போது அவன் மனைவி, ‘நம் மகளை ஒரு நிருபருக்கு திருமணம் செய்து கொடுக்க கூடாது. என்ன நிம்மதியில்லாத தொழில்’ என்று அலுத்துக் கொண்டாள். ஆனால் அவன் தொழிலில் சுமைகளுக்கு இடையே சுவையையும் கண்டான்.
Leave a comment
Upload