இன்றைக்கு இரண்டில் ஒன்று பார்த்திட வேண்டியதுதான், வரட்டும் பக்கத்து வீட்டு மாதவன் சார், நேரடியாக அவரிடமே கேட்டு விட வேண்டும் என தனக்குள் கர்ஜித்தபடி இருந்தான் பள்ளியிலிருந்து திரும்பிய ஆசிரியர் ஜான்.
புதிதாக வீடுகட்டி குடித்தனம் வந்தவர் ஜான். மனைவி ரோஸி இருவரும் வேறு வேறு பள்ளியில் ஆசிரியராக வேலைப் பார்ப்பவர்கள் பொறுமை இன்றி தவித்த ஜான், மாதவன் வீட்டிற்கே வந்துசார் வந்து விட்டாரா? என அவர் மனைவியிடம் கேட்ட போது, ரோஸியுடன் வண்டியில் வந்திறங்கினார் உடன் வேலைப் பார்க்கும் ஆசிரியர் மாதவன். சரியாப் போச்சு, அவர்கள் சொன்னது சரிதான் போல என புலம்பியவாறு சலம்பிக் கொண்டிருந்தார் ஜான்.
வண்டியை விட்டு இறங்கிய ரோஸி வாங்க வீட்டிற்கு என ஜானை அழைக்கவும் மறுத்து நான் சார்கிட்டே பேசனும், நீ போ என விரட்டாத குறையாக அவளை அனுப்பனார்.
சார், அவர்கள் சொன்னபோது கூட நான் நம்பலை, ஆனா இப்போ வந்து இறங்கினீங்க பாருங்க இரண்டு பேரும் வண்டியிலே ஊர்ஜிதமாகிட்டு என்றான்.
என்ன ஊர்ஜிதமாகிட்டு ? என்றவர் ஏன் வெளியே நின்றுக்கொண்டு உள்ளே வாருங்கள் என அழைத்து அமர வைத்தார்.
எல்லோரும் தப்பாக பேசிக்கிறாங்க, உங்கள் இரண்டு பேரையும் பற்றி என்றார் ஜான்.
எல்லோருமா ? சந்தேகம் உங்ளுக்கா ? என கேட்டார் மாதவன்.
எனக்கும்தான் என்றார் ஜான்.
ஜான்.., சந்தேகம் என்பது கொரோனா வைரஸ் மாதிரி, வந்தது என்றால் அது பரவி விடும். ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது நல்லது இதைப் பற்றி ரோஸியிடம் நீங்கள் பேசினீர்களா ? கேட்டார்.
இல்லை என்றதும் நல்லது, என்னிடமே நேரில் கேட்டது உங்கள் பெரிய மனசையும், நல்ல எண்ணத்தையும் காட்டுகிறது.
ஜான் நான் சொல்லப் போவதை நீங்கள் சரியாகப் புரிந்துக்கொண்டு வினையாற்றினால் இந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் வெளி வரலாம், அதற்கு முதலில் நீங்கள் என்னை முழுவதுமாக நம்ப வேண்டும் சரியா என்றார்.
சார் நான் உங்களை நம்பினேன், இப்பவும் நம்புகிறேன் சார் என்றார் ஜான்.
முதலில் ரோஸி எனக்கு மகள் போன்றவள், எனக்கும் அவளை விட இரண்டு வயதே குறைந்த திருமணமான பெண் இருக்கின்றாள்.
இரண்டு, வண்டியில் ரோஸியை ஏற்றி வந்தது உங்களுக்கு உறுத்தினால், அது இன்றும் நேற்றும் பள்ளி இருக்கும் ஊரிலிருந்து வரும் பேரூந்து இரண்டு நாட்களாக ஓட வில்லை, ஆதலால் வரும்போது என்னுடன் அழைத்து வந்தேன்.
வண்டியில் ஏறி, பார்வையில் தப்பாக தெரியும்படி நாங்கள் தெருவில் வந்தது குற்றமா ? இல்லை தெரு முக்கில் இறங்கி நடந்து வந்தால் அது சரியா ? குற்றம் எங்கள் மனத்தில் இல்லை உங்கள் பார்வையில்தான் உள்ளது என்றார். அப்போது காபியுடன் வந்த மாதவன் சாரின் மனைவி ராதிகா,
சார், ரோஸியுடன் உங்களுக்கு திருமணமாகி இரண்டு வருடமாகிறது அதற்குள்ளே உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வரலாமா ?
காதல் திருமணம்தானே உங்களுடையது, உண்மையான காதலில் சந்தேகம் வரலாமா ? எனக் கேட்டவள் என் பெண் மாதிரி அவள் அம்மாவாக கருதி சில விஷயங்களை என்னிடம் கூறி இருக்கின்றாள் உங்கள் மீதுள்ள எங்களது அக்கறையில் நான் கூறுகிறேன்,
அவளும் உங்களைப்போல மானிடப் பிறவிதான், திருமணம் விரைவில் நடந்து விட்டாலும் வயது குறைவு, உங்களுக்கு இருப்பது போலவே எதிர்கால கனவுகளும், வாழ்க்கை குறித்த கற்பனைகளும் அவளுக்கும் இருக்கும் என்பதை நீங்கள் முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்.
ஒரு மனைவியாக,ஆசிரியராக,ஒரு சமையல்காரியாக,அவதாரம் பல எடுத்து பணிகளுக்கு இடையிலும் தன் கடமையைச் செய்கிறாள் அதில் நீங்கள் குறைக் காணலாமா ? மேலும் அவளும் படித்து இருக்கிறாள், பணியிலும் இருக்கின்றாள்.
அவள் வீட்டில் இருந்தபோது அவளது தாய்,தந்தை,சகோதர,
சகோதரிகளின் அன்பில் கட்டாயம் நனைந்திருப்பாள், அவர்களை யெல்லாம் விட்டுவிட்டு தனது அடையாளத்தை மூட்டைக் கட்டி வைத்து விட்டு உங்கள் வாழ்க்கையில் மனைவியாகப் பிரவேசித்து இருக்கிறாள். அவளுக்கு நீங்கள் கொடுப்பது இந்த சந்தேகப் பரிசா ? என் கணவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதுபோல் உங்கள் மனைவியைப் பற்றி நன்கு புரிந்துக்கொள்ளுங்கள்.
சந்தேகத்திற்கு மனத்தில் இடம் கொடுத்தால் பூதம் புத்தியில் வந்து அமர்ந்துக்கொள்ளும் என்பார்கள். எண்ணங்கள் சிதற,வார்த்தைகள் தடுமாறும் தீய செயல்கள் பழக்கமாகி அதுவே வழக்கமாகி உங்கள் வாழ்க்கையே சின்னா பின்னமாகிவிடும். மூலக் காரணமான சந்தேகப்புத்தியை முதலில் கழட்டி விடுங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்றாள்.
சந்தேகத்தை புரியவைத்து சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்த இருவருக்கும் நன்றி எனக் கூறி கிளம்பினான், போயிட்டு வாங்க மாப்பிள்ளை என்றனர் இருவரும் சந்தோஷமாக. நல்ல எண்ணம் தொற்றிய ஜான் மறுநாள்,
மாதவன் சார், இன்றும் பஸ் ஓடலையாம் எனக்கு வங்கியில் கொஞ்சம் வேலைகள் இருக்கு ரோஸியையும் நீங்களே அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்றார் .
Leave a comment
Upload