தொடர்கள்
பாலசந்தரின் திரைநாயகிகள் - 8 - மரியா சிவானந்தம்

2019020718313933.jpg

சரிதா, சரிதா, சரிதா - 2

எதுகையும் மோனையும் இயைந்த மரபுக்கவிதைகள் வழக்கொழிந்து புதுக்கவிதைகள் புறப்பட துவங்கிய எண்பதுகளின் துவக்க காலம். மீரா, மு.மேத்தா, நா.காமராசன், அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன் இவர்களுடன் வைரமுத்து புதுக்கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் புரட்சியை ஏற்படுத்திய காலம் அது.. 1982-இல் வெளிவந்த அக்னி சாட்சி”யின் கதாநாயகி கண்ணம்மா”வை புதுக்கவிதை பாடும் நாயகியாக படைக்கிறார் இயக்குனர் சிகரம்.

20190207183459447.jpg

பூவிதழிலும் மென்மையான இதயம் கொண்டவள் கண்ணம்மா’. நடன இயக்குனரான அரவிந்தனை (சிவக்குமார்) காதலித்து மணக்கிறாள். அவள் அன்பிலும், கவிதைகளிலும் மனதைப் பறி கொடுக்கும் அரவிந்தன், அவளை மிகுந்த பரிவுடன் நடத்துகிறார். அழகும், மென்மையும், கவி உள்ளமும் கொண்ட கண்ணம்மா, உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவள் சில நேரங்களில் முரட்டுத்தனமாக, வெறி பிடித்தது போல நடந்து கொள்வதை பார்த்து அதிர்ந்து போகிறார் அரவிந்தன். மனோதத்துவ நிபுணர், “இளம் வயதில் கண்ணம்மா மனதில் ஆறாத காயம் ஏற்பட்டிருக்க கூடும், அந்த அழுத்தம் தூண்டப்படுகையில் அவர் வித்தியாசமாக மாறுகிறார்” என்று கண்ணம்மாவின் அசாதாரண நடத்தைக்கு விளக்கம் சொல்கிறார். அரவிந்தன், அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து, மிகுந்த கனிவுடன் அவளை பராமரித்து, குணப்படுத்தவும் செய்கிறார். ஆனால் குற்ற உணர்ச்சி கொண்ட கண்ணம்மா, பிரசவத்தில் மரிக்கிறார்.

கண்ணம்மாவாக, ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக சரிதா அபார நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இயல்பாக இருக்கும் போதும், கணவன் மேல் அபரிமித அன்பைக் கொட்டும் போதும்... நாணம் கலந்த சிரிப்புடன் கவிதை சொல்லும் போதும் அழகோ, அழகு. ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் போதும், அவர்களுக்கு அநீதி விளையும் போதும் அவர் உள் மனம் விழித்துக் கொள்ள ரௌத்திர முகம் காட்டுவார். மருண்ட விழிகளும், கோபம் கொண்ட முகமும் ஒரு மன நோயாளியைப் போல நடந்துக் கொள்ளும் போதும் பிரமாதமான நடிப்பை கொடுத்திருப்பார். படத்தில் ஆங்காங்கே வரும் குட்டி, குட்டி புதுக்கவிதைகள் அதி அற்புதமாக இருக்கும். வாலியின் பாடல்கள் படத்திற்கு உயிரோட்டத்தைத் தருகிறது. “கனா காணும் கண்கள் மெல்ல” ஒரு சுகமான பாடல்.

ஆனால் புரட்சிக் கருத்துகளைச் சொல்லும் ஒரு பெண் கவிஞரை இறுதியில் மன நோயாளியாக சித்தரித்தது இந்த படத்தின் குறையே என்று அக்கால கட்டத்தில் விமர்சிக்கப்பட்டது. (ஒரு வேளை ஆங்கிலேய கவிதாயிணி சில்வியா பிளாத்தின் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்குமோ?!)

20190207183925399.jpg

1984 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்அச்சமில்லை அச்சமில்லை’ திரைப்படம். கதாநாயகியை மையப்படுத்தி எடுத்த படம். அதில் தேன்மொழி” பாத்திரத்தில் சரிதா. கிராமத்தில் தன் தந்தையுடன் வாழும் எளிய பெண் தேன்மொழி. சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்ற லட்சியம் கொண்ட உலகநாதன் (ராஜேஷ் ) சுயநலமற்ற, நேர்மையான இளைஞன், காந்தியவாதி. தினமும் ஒரு பொன்மொழியை தன் வீட்டுச் சுவரில் எழுதுபவர். தேன்மொழிக்கும், உலகநாதனுக்கும் காதல் பிறக்கிறது. இருவரும் சேர்ந்து செய்யும் நற்செயல்கள், உலகநாதனுக்கு மக்கள் மத்தியில் நற்பெயரையும், செல்வாக்கையும் பெற்றுத் தருகிறது.

ஆனால் அவர்கள் வாழ்க்கையில் அரசியல்’ விளையாட ஆரம்பிக்கிறது. உலகநாதனுக்கு பதவி ஆசை காட்டி அவரை அரசியலுக்கு இழுக்கிறார்கள். அது அவர் கண்ணை மறைக்க அவர் இலட்சியங்கள் காற்றில் பறக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவரது நல்ல இயல்புகள் விடை பெற, முழு அரசியல்வாதியாக, பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவராக மாறுகிறார். கணவனின் இந்த மாற்றம் தேன்மொழியால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இறுதிவரை அவரை திருத்த முயற்சிக்கிறார். உலகநாதனோ, ‘அரசியல் சூதாட்டத்தில் எல்லாம் சரியே’ என்று நியாயப்படுத்துகிறார். சுயலாபத்துக்காக சாதிக் கலவரத்தைத் தூண்ட கொலை வரை செல்கிறர். “அரசியல் கொலைகளில் அய்யோ பாவம் கிடையாது” என்று அதற்கும் விளக்கம் தருகிறார். இதையெல்லாம் பொறுக்க முடியாத தேன்மொழி அவரை கொலை செய்து ஜெயிலுக்குப் போகிறார். “காந்தி சிலையின் அடியில் சுதந்திரம் அழுது கொண்டிருக்கிறது” என்ற கார்டுடன் படம் முடிகிறது. “கணவனே ஆனாலும் அக்கிரமங்களைப் சகித்துக் கொள்ள முடியாது” என்று பொங்கி எழும் வேடத்தில் தேன்மொழியாக சரிதா சிறப்பான நடிப்பைத் தந்திருப்பார்.

ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்தை” என்ற நாட்டுப்புற பாணியில் அமைந்த பாடல் அப்போது மிகப் பிரபலம். இப்படத்தில் வரும் இன்னுமொரு பாத்திரம் அந்த அருவி”. கொட்டும் அருவியின் அழகுடன், இயற்கையான கிராமிய சூழலும் அமைந்த இப்படம் வெற்றியையும், விருதுகளையும் குவித்தது..

20190207184415886.jpg

ரெட்டை ஜடை அம்முலுவாக” கல்யாண அகதிகள் படத்தில் துடுக்குத்தனமும், நேர்மையும் நிறைத்த கதாபாத்திரத்தில் சரிதா நடித்திருப்பார். வரதட்சிணை பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். கதைப்படி, கல்யாண சந்தையில் பாதிக்கப்பட்ட ஆறு இளம் பெண்கள் தனித்து வாழ்வார்கள்... கல்யாண அகதிகள்” என்ற இசைக்குழுவை நடத்தி வருவார்கள். இவர்களுடன் அம்முலு இணைந்து கொள்வார். அம்முலு, ராபர்ட் என்ற கிறிஸ்தவ இளைஞனைக் காதலிக்கிறார். அக்காதல் திருமணம் வரை செல்லும் போது, கிறிஸ்தவராக மதம் மாற ராபர்ட்டும், பெற்றோர்களும் நிர்பந்திக்கிறார்கள். அதை மறுக்கும் அம்முலு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அப்போது வரும் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட செய்தி அவர் முடிவை மாற்றுகிறது. போர்த்திய தலைப்புடன் ஷோபனா ரவி தமிழில் இந்திரா கொல்லப்பட்ட செய்தியை வாசிக்கும் காட்சி, அந்நாளைய நினைவுகளை மீட்டுகிறது.

தன் மத நம்பிக்கையை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று துணிவுடன் முடிவெடுத்து, அந்த காதலில் இருந்து வெளியேறுகிறார். மீண்டும் தன் தோழிகளுடன் இணைந்து வாழ்க்கையைத் தொடர்கிறார். பாலசந்தர் இயக்கத்தில் மலர்ந்த இன்னுமொரு புதுமைப்படம் கல்யாண அகதிகள்”.

எங்க ஊர் கண்ணகி, 47 நாட்கள், புதுக்கவிதை ஆகிய படங்களும் பாலசந்தர் இயக்கத்தில் சரிதா நடித்து, இயக்குனருக்கும் இவருக்கும் பெருமை சேர்த்த படங்கள்.

தன் ஒப்பற்ற, இயல்பான நடிப்பால் உள்ளங் கவர்ந்த சரிதா தன் குரலின் வழியாக இன்னும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். பல கதாநாயகிகளுக்கு இன்றும் பின்னணி குரல் கொடுத்து வருகிறார் சரிதா. ரோஜா, ராதா, சுஷ்மிதா சென், சௌந்தர்யா, நக்மா, சிம்ரன், தபு என பல முன்னணி கதாநாயகிகளுக்கு இவர் குரல் அழகாக பொருந்துகிறது.

பாலசந்தரின் புதுமைப்பெண் பாத்திரங்களுக்கு திரை வடிவம் கொடுத்தவர் சரிதா. அவரின் திரை நாயகிகளில் தனித்துவமும், சிறந்த நடிப்பாற்றலும் கொண்டவர் என்றால் மிகையாகாது. தென்னிந்திய திரை வரலாற்றின் பக்கங்களில் சரிதாவுக்கென்று தனி அத்தியாயம் நிச்சயம் உண்டு.