ஆன்மீகம்
காரடையான் நோன்பு விரதம்..காரண காரியம்! - ஆரூர் சுந்தரசேகர்.

20190208124050814.jpg

காரடையான் நோன்புதான் பெண்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்விரதம் சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கௌரி விரதம் என்று பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.


சௌமாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் வழிவழியாக அனுஷ்டிக்கும் இந்த விரதம் எவ்வாறு வந்தது என்பதைப்பற்றி பார்ப்போம்.


மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் புராண காலம் தொட்டு தமிழகத்தில் காரடையான் நோன்பு விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற வெளிநாட்டு நாடுகளில் வாழும் இந்தியர்களும் இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள்.


தமிழகத்தில் காரடையான் நோன்பு விரதம் இருப்பதைபோல், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களிலும் சுமங்கலி பெண்கள் நோன்பிருக்கும் நாள் ‘கர்வா சவுத்’ எனப்படுகிறது.


கர்வா சவுத் விரதமன்று பெண்கள் உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இரவு சல்லடையில் தீபம் ஏற்றி நிலவு பார்த்து, பின்னர் கணவனை அச்சல்லடை வழியாக பார்ப்பார்கள். இதனால் அவர்களுடைய மாங்கல்ய பலம் கூடும் என்பது அவர்களின் நம்பிக்கை.


ஒரு முறை பார்வதி தேவி கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினார். பரமேஸ்வரனின் கண்கள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் இருண்டது. தான் செய்த தவறுக்கு வருந்திய பார்வதி தேவி காஞ்சியில் காமாட்சியாக அவதரித்து, அங்குள்ள ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் திருவிளையாடலால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது, சிவலிங்கம் கரைந்து போகாமல் இருப்பதற்கு விரதத்தை மேற்கொண்டார். அதனைக் கண்டு மனம் மகிழ்ந்து எம்பெருமான் அன்னை காமாட்சியை மணந்து கொண்டார் என்கிறது புராணம்.


காமாட்சி அம்மன் பின்பற்றிய விரத முறையை சாவித்திரி, தன் கணவர் சத்யவான் ஆயுள் நீடிக்க வேண்டி இருந்த நோன்பே இந்த காரடையான் நோன்பு.

சத்யவான் சாவித்ரி கதை:

அஸ்வபதி என்ற மன்னனின் மகள் சாவித்திரி, ஒரு சமயம் காட்டுக்கு சென்ற போது, எதிரிகளால் நாடு இழந்து அங்கு வசித்து வந்த திரியுமத்சேனன் என்ற பார்வையற்ற மன்னரின் மகனான சத்யவானை சந்தித்தாள். சொத்து, சுகங்கள் அனைத்தையும் இழந்ததால் காட்டில் விறகு வெட்டி வாழ்ந்து வந்தான் சத்யவான். அவன் பெற்றோருக்கு செய்த பணிவிடை சாவித்திரியின் உள்ளத்தைக் கவர்ந்தது.

அவள் சத்தியவானை மணமுடிக்க விரும்பினாள். இந்த நிலையில் தேவரிஷி நாரதர் சாவித்ரியிடம் வந்து, “அம்மா.. நீ நெடுங்காலம் சௌபாக்யவதியாய் சகல லக்ஷ்மிகரமும் பொருந்திய வாழ்வு வாழ வேண்டியவள். இந்த சத்யவானுக்கு ஆயுள் பலம் கிடையாது. இன்னும் ஓராண்டில் அவன் இறந்து விடுவான் எனவே, இவனைத் தவிர்த்துவிட்டு வேறு ஒரு நல்ல கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்” என்று கூறினார். சாவித்ரியோ தன் தந்தையிடம் சத்யவானையே மணக்கப் போவதாக மன்றாடினாள். அவள் விரும்பிய சத்யவானையே மணக்க சாவித்ரியின் தந்தையும் சம்மதித்தார். திருமணம் முடிந்து இருவரும் காட்டிலேயே வாழ்ந்து வந்தனர். இல்லற வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். கணவனின் நீண்ட ஆயுளுக்காக காட்டிலேயே விரதம் இருக்க ஆரம்பித்தாள். நாரதர் குறிப்பிட்ட நாள் வந்தது. கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி நோன்பிருந்த அவள் தனது விரதத்தை முடித்திருந்த தினம் அன்று மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கின்ற நேரம்.

ஏழ்மையான நிலையிலும், மங்களகரமான அந்த நேரத்தில் சாவித்ரி, தனக்கு கிடைத்த நெல்லிருந்து அரிசியைப் பொடியாக்கி, அதில் காராமணியும் சேர்த்து அடை போல் தட்டி வெண்ணையுடன் நைவேத்தியம் செய்தாள். பின் மஞ்சள் சரடினை சுமங்கலியாக இருக்க பிரார்த்தித்து அணிந்து கொண்டாள். சத்யவானின் ஆயுள் முடியும் நேரம் வந்தது. திடீரென அவன் தலை வலிக்கிறது என்று கூறி கீழே விழுந்தான். அவனை சாவித்திரி தாங்கிப் பிடித்து, தனது மடியில் சாய்த்துக் கொண்டாள். அப்போது எமதர்மன் பாசக்கயிற்றினை வீசி அவனது உயிரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். சாவித்திரியும் எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார்.

அவரிடம், 'நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும்', எனக் கேட்டாள். எமதர்மரும் அதற்குப் பதிலாக, வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரியும் புத்தி சாதுரியமாக எனது ‘வம்சம் தழைத்து வளரவேண்டும்’ என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரத்தினை கொடுத்து விட்டார்.

“உங்கள் வாக்கு பலிக்க என் கணவன் உயிர்பிழைக்க வேண்டும்” என்றாள் சாவித்ரி. அவளது பதி பக்தியையும் புத்தி சாதுர்யத்தையும் எண்ணி வியந்த எமதர்மன், சத்யவானுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.. நீண்ட ஆயுளுடன் வாழுமாறு அவர்களை வாழ்த்தினார். சாவித்திரியின் பக்தியும் அன்பும் கற்பும் எமனையும் வென்று தன் கணவனின் உயிரையும் காத்தது. காரடையான் நோன்பு அன்று சாவித்திரியின் கதையை கேட்பதும், படிப்பதும் விஷேசம்.


மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, திருமணமான பெண்கள் வழக்கமாக தாலிச் சரடினையும் மாசியில் மாற்றிக் கொள்வது மரபு. தங்களுடைய தாலிக்கயிறை மாசி மாதத்தில் மாற்றிக் கொண்டால், அவர்களது கணவனின் ஆயுள் நீடிக்கும் என்பது ஐதீகம்.

காரடையான் நோன்பு மேற்கொள்ளும் முறை:

இவ்விரத நாளன்று பெண்கள் நீராடி பூஜை அறையில் காமாட்சி அம்மன் படத்தினையோ, தேங்காய் வைத்த கலசத்தினையோ வைக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி, கோலம் போட வேண்டும். வீட்டில் உள்ள சுமங்கலிகள், பெண் குழந்தைகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் (இரட்டைப் படையில் போடுவது நல்லது, ஒற்றைப்படையில் இருந்தாலும் கூடுதலாக ஒன்றினை சாவித்ரியை நினைத்துப் போடலாம்) தனித்தனிக் கோலம் சிறிய அளவில் போடவேண்டும்.

கோலங்களுக்கு மேலே சிறு நுனி இலை வைக்க வேண்டும். பிறகு சுவாமி இலையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் சரடு (மஞ்சள் சரடில் பூ இதழ் நடுவில் கட்டியது) ஆகியவற்றை மேல்பகுதியில் வைத்து, இலையின் நடுவில் கார்காலத்தில் விளைந்த நெல்லிருந்து கிடைத்த அரிசி மற்றும் காராமணியைக் கொண்டு தயார் செய்த உப்பு மற்றும் வெல்ல அடைகளையும், உருகாத வெண்ணெயையும் வைக்க வேண்டும். மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, தூப, தீப ஆரத்திகள் காட்டிவிட்டு, அம்மனுக்குப் போட்டுள்ள இலையை நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன் பிறகு அவரவர் இலைகளை நீரால் சுற்றி நைவேத்தியம் செய்து மங்கள தீபாராதனை காட்ட வேண்டும். பிறகு வயதில் மூத்த சுமங்கலி, அம்மனை வேண்டிக் கொண்டு பின்வரும் மந்திரத்தை சொல்லி


தோரம் க்ரஹணாமி ஸூபகே
ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்


ஸூப்ரீதா பவ ஸர்வதா:
அதாவது, ‘கணவர் நீண்ட காலம் நோய்நொடியில்லாமல் வாழ்வதற்காக, நான் இந்தக் காரடையான் நோன்பு விரதத்தை மேற்கொள்கிறேன். காமாட்சி அன்னையே, நின்னருளால், சரடும் அணிந்து கொண்டேன். என் கணவரைக் காத்தருளும் தெய்வம் நீயம்மா. என்றும் காத்தருள்வாய் அன்னையே!’


அம்மனின் படத்திற்கு ஒரு சரடினை சாத்திவிட்டு, தான் ஒன்றை எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டு, பின் தன் குடும்ப இளைய பெண்களுக்குக் கட்டிவிட்டு, ஆசீர்வாதம் வழங்கவேண்டும். மஞ்சள் சரடு கட்டிக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.


"உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்."

இதன் பிறகு நைவேத்தியம் செய்த அடைகளை பிரசாதமாக சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.


மறுநாள் பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுத்து வலம் வந்து வணங்க வேண்டும். அப்படி வலம் வரும் சமயத்தில், ‘மலை ஏறிப் புல் மேய்ந்து மடு இறங்கி நீர் பருகும் கோமாதாவே, என் தாலி பாக்யம் என்றைக்கும் நிலைக்கும் வரம் எனக்குத் தா!’ என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

காரடையான் நோன்பின் பலன்:


இவ்விரதத்தை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் செய்வதால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து பாசமும் நேசமும், அன்யோன்னியமும் அதிகரிக்கும்.


பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமண வாழ்வு அமையும்.


காரடையான் நோன்பு மேற்கொண்டு சாவித்திரி எமதர்மனிடம் போராடி தனது கணவனின் உயிரினைத் திரும்பப் பெற்றதை போல் நாமும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இவ்விரத வழிபாட்டினை மேற்கொண்டு இன்புற்று வாழ்வோம். இந்த ஆண்டு (2019) மார்ச் மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடியற்காலையில் 05.26 மணிக்கு காரடையான் நோன்பை அனுஷ்டிக்க வேண்டும்