தொடர்கள்
அனுபவம்
ஒரு நல்ல செய்தி ஒரு கெட்ட செய்தி - மரியா சிவானந்தம்

2025031017060483.jpg

நாம் அனவைரும் பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தும் வகையில் ஒரு செய்தி காதில் விழுகிறது . ஆனால் நல்ல செய்தி தரும் மகிழ்ச்சியை விழுங்கும் அளவில் கெட்ட செய்தி ஒன்றும் தொடர்ந்து வருகிறது.

9.69 % பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் செய்தி வந்து அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI ) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் இது உச்ச பட்ச வளர்ச்சி ஆகும்.

தமிழகத்தின் இந்த வளர்ச்சிக்கு ,பெருகி வரும் தொழில்களும் வளர்ந்து வரும் பொருளாதாரமும் காரணம்.நகரங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் காணும் போது கிராமப்புறங்கள் இன்னும் பின்தங்கி இருப்பதைக் காண முடிகிறது. இலவச கல்வி, இலவச மருத்துவம், பிற இலவச வசதிகளைத் தந்து, கிராம மக்களைக் கை பிடித்து மேல் ஏற்றும் செயலை மாநில அரசு தொடர்ந்து செய்து வருவதை உணர முடிகிறது.

இந்த மகிழ்ச்சியை நாம் முழுமையாக அனுபவித்து முடிக்கும் முன்பே, அனைவரும் வெட்கித் தலைகுனியும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது

ஆரம்ப பள்ளி படிக்கும் மாணவன் ஒருவனை விளக்குமாற்றால் பள்ளியில் தாக்கியுள்ள இந்த சம்பவம் ஊடகங்களின் பேசு பொருளாகி விட்டது .

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த செங்குணம் என்ற சிற்றூரில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்த கொடுமையான சம்பவம் நடந்தேறி உள்ளது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளியில் சத்துணவு போடுபவர்களிடம் முட்டை கேட்டதற்காக , சத்துணவு தயாரிக்கும் பெண்மணியும், உதவியாளரும் துடைப்பக்கட்டையால் அடித்துள்ளனர்

20250310170647133.jpg

இப்பள்ளியில் 44 மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் அரசின் சத்துணவு திட்டத்தில் மதிய உணவு உண்பவர்கள். மதிய உணவின் போது வழக்கமாக கொடுக்கப்படும் முட்டை அன்று அவனுக்கு தரப்படவில்லை . எனவே அம்மாணவன் சமையல் அறைக்குச் சென்று, உள்ளே முட்டைகள் வைத்திருப்பதைப் பார்த்துள்ளான். 'முட்டையை வைத்துக் கொண்டே மாணவருக்கு தரவில்லை என்று சொல்லி விட்டு வகுப்பறைக்கு வந்து விட்டான்.

ஆத்திரம் அடைந்த சமையலர் லட்சுமி , உதவியாளர் முனியம்மா இருவரும் வகுப்பறைக்குச் சென்று அந்த மாணவனை,'ஏன் சமையலறைக்கு வந்தாய் ' என்று கேட்டு விளக்குமாறால் அடித்திருக்கிறார்கள். அதை அங்குள்ள மாணவன் ஒருவன் ஆசிரியையின் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட இந்த வெட்கக்கேடான சம்பவம் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.

இலவச கல்வியும் ,இலவச மதிய உணவும், இலவச புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் எளிய மக்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்வதையும் , பல லட்சம் மாணவர்கள் இதனால் பயன் பெற்று உயர் நிலையை அடைந்திருப்பதையும் தமிழகத்தில் பார்க்க முடியும். இவ்வகையில் கோடிக்கணக்கான நிதியை அரசு செலவிடுகையில், அதன் பயனாளிகள் சரியான முறையில் அனுபவிக்க இயலாமல் போவதும் , அதே காரணங்ககளுக்காக துன்புறுத்தப்படுவதும் பெரும் சோகம்.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு குறித்து பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. தினம் சேமிக்க வேண்டிய உணவு வகைகள், அளவு, தூய்மை போன்றவற்றுக்கு சமூக வளர்ச்சி துறையால் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மதிய உணவு பரிமாறும் முன்னர் , இரண்டு ஆசிரியர்கள் அவ்வுணவை சாப்பிட்டு பார்த்து, விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதையும், உணவு உண்ணும் மாணவர் எண்ணிக்கையுடன் பதிவேட்டில் பதிக்க வேண்டும்.

இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும் , முட்டை கேட்ட பாவத்திற்காக ஒரு சிறுவனைத் தாக்கியது மட்டமான செயல் . மாணவரைத் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் மீது பிஎன்எஸ் சட்டப் பிரிவு 131, சிறார் நீதி சட்டம் 2015 பிரிவு 75 ஆகியவற்றின்கீழ் போளூர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது .இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .இருவரும் பணி நீக்கம் செய்யப்பட , போளூர் வட்டார வளர்ச்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சம்பவத்தின் போது வகுப்பில் இருந்த வகுப்பு ஆசிரியை புளோரா என்பவர் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிராமப்புற அரசுப்பள்ளிகளில் சாதியமும், அதிகார மனோபாவமும் ஆட்சி செய்வதற்கான சான்று இந்த சம்பவம் . கிராமத்து மனிதர்கள் வெள்ளந்தியானவர்கள் ,இரக்கம் பொங்கி வழியும் ஆத்துமாக்கள் என்ற நம் பொது கருத்தை அடித்து நொறுக்குகிறது இந்த சம்பவம் . ஆங்காங்கே நடக்கும் அநியாயங்களுக்கு முடிவு கட்டும் ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.

இக்கட்டுரை முடிவதற்குள் கோவை அருகே , பூப்பெய்திய மாணவியை பள்ளி வகுப்பறைக்கு வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்த காணொளி வெளி வந்து சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டு இருக்கிறது.

கல்வி பெற்று முன்னோக்கிச் செல்ல வேண்டிய பெண்களை ஐம்பதாண்டுகள் பின்னோக்கி இழுப்பவர்கள் யாராக இருப்பினும் கண்டனத்துக்குரியவர் மட்டும் அல்ல தண்டனைக்கும் உரியவரே.

அரசுத் துறைகள் ஆவன செய்ய வேண்டும்.