தொடர்கள்
பொது
மனசே!  டேக் டைவர்ஷன் ப்ளீஸ்  6 – மோகன் ஜி

20250128174616286.jpg

ஏற்றம் தரும் மாற்றம்

அதிவேகமாக மாறி வருகின்ற உலகத்தில், நேற்றைய நிலைகளும் பயன்பாடுகளும் மாறியபடியே இருக்கின்றன. அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு சாதனங்கள், தொழில் போட்டி, புதுப்புது பொருட்கள்/ திட்டங்கள், நுகர்வாளர்களின் எதிர்பார்ப்புகள் என யாவுமே உச்சத்தை அடைந்திருக்கின்றன.

கடந்த 50 ஆண்டுகளில், பல துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நோக்குகையில் எவ்வளவு முன்னேற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணரலாம். இவையாவும் மாற்றத்தின் வைபவம் அன்றி வேறு என்ன?

மாற்றத்தைத் தவிர்க்க இயலாது. மாற்றத்தை முன்னமே அறுதியிடவும் இயலாது. மாற்றம் ஒன்றே மாறாததும்கூட!!

20250128174646753.jpg

மாற்றத்தின் அவசியத்தையும் குறிக்கோளையும் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றத்திற்கு உட்படாத கம்பளிப் பூச்சிகள் வண்ணத்துப்பூச்சிகளாக மாற வகையே இல்லை!

நாம் ஏன் மாற்றத்துக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்?

  • இருக்கும் நிலையிலேயே தொடர்ந்து வாழ;
  • காலாவதியாகிப் போன மரபுகளில் இருந்து மீள;
  • கடந்த காலத்து கசந்த அனுபவங்களிலிருந்தும் ரணங்களிலிருந்தும் மீண்டு வர;
  • இறந்த காலத்தின் சுமைகளிலிருந்து விடுபட;
  • எடுத்த பணி முடித்தபின் புதிய செயல்பாடுகளுக்காய் மாற்றிக்கொள்ள;
  • மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற;
  • நம் விழைவுகளையும் கனவுகளையும் மெய்ப்படச் செய்ய;
  • புற சூழலின் மாற்றத்துக்கு ஈடு கொடுக்க

என்று பல காரணிகள்.

தனி மனித வாழ்விலும் சமுதாயத்திலும் அலுவலகங்களிலும் மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தபடியே இருக்கின்றன.

20250128174722746.jpg

மாற்றம் இன்றியமையாதது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு மாற்றத்திற்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்கிறவர்களே வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் வெற்றி அடைகிறார்கள்.

நல்ல நோக்கங்களில் இருந்து, நன்மையை நோக்கிச் செல்லும் பயணத்தின் முதற்படிதான் இந்த மாற்றத்துக்குத் தயாராதல்!

மாற்றத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளாதவர்கள் தேங்கி நின்று விடுகிறார்கள்.

ஆதிகாலம் தொட்டு வாழ்ந்து வந்த உயிரினங்களில், டைனோசர்கள் காலமாற்றத்திற்கு உட்படாததால் அழிந்து போனதும், கரப்பான் பூச்சிகளோ மாற்றங்களை அனுசரித்து இன்னும் ஜீவித்திருப்பதும் மாற்றம் பற்றிய தெளிவினைக் கொடுப்பவை..

முதலில் தனி மனித வாழ்வில் மாற்றங்களின் இன்றியமையாமையை பார்க்கலாம்.

  • காளையாய்த் திரிந்து வந்தவன் திருமணத்தின்பின் எதிர்கொள்ளும் மாற்றம்;
  • வேலை மாறுதல் சுமத்தும் மாற்றம்;
  • பிள்ளைகள் பெறுதல் ஏற்படுத்தும் மாற்றம்;
  • மண முறிவு /உற்றாரின் இழப்பு / பணி ஓய்வு / உடல்நிலை/ கடும் செலவினம் போன்றவை ஏற்படுத்தும் மாற்றங்கள்.

இத்தகு சூழல்கள் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் எதிர்கொண்டே ஆக வேண்டியவை.

  • தேவையான மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுதல்;
  • அவசியமான ஆதரவை துணை கொள்ளுதல்;
  • மாற்றத்தை நடைமுறைப்படுத்துதல்:
  • அதற்குத் தேவையான செயல்திறனை அடைதல் ஆகியவை இலக்கை அடைய உதவும்.

இதில் அதிமுக்கியமான எதிர்மறை மனப்போக்கு, மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத பிடிவாதம் தான்.

நாம் செய்யும் தொழில், பயணம் செய்யும் பாதை, பழகும் விதங்கள், ஆற்றும் எதிர்வினைகள் போன்ற அனைத்தும் நாட்பட நாட்பட ஒரே போக்கில் அமைந்து விடும்.

எளிதில் மாற்றத்தை ஏற்காத மனநிலையே இதனால் உண்டாகிறது. குறிப்பாக, இன்றைய சூழலில் இந்த சொகுசு மனநிலை (Comfort Zone) சற்று அபாயகரமானது தான். இதிலிருந்து மீள்தல் அவசியமான ஒன்று.

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்பது மூத்தோர் சொல் அல்லவா?

புதியதோர் உலகம் செய்ய பழைய உலகத்தைப் பட்டி பார்த்துதான் ஆக வேண்டும்! எந்த மாற்றமும் முதலில் நம்மில் இருந்தே தொடங்க வேண்டும்.

பெரும்பாலும் நம்மால் புதிய மாறுதல்களுக்கு ஈடுகொடுக்க முடிவதில்லை. தேவை கருதி, அவசியமான மாற்றத்திற்குகூட நாம் மாற சிரமப் படுகிறோம். இதற்கான காரணங்களைக் கொஞ்சம் ஆராயலாம்.

  • நம் நம்பிக்கைகள் கொள்கைகள் மற்றும் பாரம்பரியம் என்று நாம் நினைப்பது;
  • வழக்கமான நடைமுறையினின்று மாறுதல் எதுவும் தேவையில்லை என்ற எதிர்மறை மனப்போக்கு;
  • மாற்றங்களுக்கு மூடிக்கொண்டு விட்ட மனக்கதவுகள்;
  • பழக்கமில்லாத புதிய நடைமுறை பற்றிய பயம்;
  • வழமையின் மாறுதலால் தோல்வி அடைவோமோ என்ற கவலை;
  • மாற்றம் வெற்றியே தந்தாலும், அதைத் தக்க வைத்துக் கொள்வது பற்றிய அச்சம்;
  • ‘புதிதாக முதலில் இருந்து தொடங்க வேண்டுமே!’ எனும் குழப்பம்;
  • பழக்கப்பட்ட ஒன்றையே செய்வதன் அனுகூலம் தரும் மயக்கம்;
  • மாற்றத்திற்கேற்ப புதிதாக முறைகளை கற்றலில் உள்ள விருப்பமின்மை;
  • எதிலும் ஆர்வம் இன்மை

மேற்கண்ட அச்சங்களுக்கு தீர்வு என்ன தெரியுமா?

நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொண்டு முன்னேறுதலும், வருவதை வந்தபடி எதிர்கொள்வோம் எனும் தன்னம்பிக்கையும் தான்.

துணிவே துணை என்று மாற்றத்தை எதிர்கொள்ளும் தெளிவு அவசியத் தேவை.

எதிர்பாராத திருப்பங்களையும் ஆரம்ப நஷ்டங்களையும்கூட தாங்கும் மனவலிமையோடு மாற்றத்துக்காக நம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

புதிய சூழலுக்கான தகுந்த திட்டமிடலும், அதன்படி செயல்படுதலும், தக்க சூழலை உருவாக்கிக் கொள்வதும் வெற்றிக்கு வழி வகுக்கும்.

நிறுவனங்களிலோ, மாறிவிட்ட சூழலைப் புரிதலுடன் ஏற்றுக்கொள்ள உடன் பணி புரிபவர்களை, உற்சாகப்படுத்த வேண்டியது அவசியம்.

பழைய வழிமுறைகள் ஏன் உதவாது என்பதை அவர்களுக்கு விளக்குங்கள்

தொலைநோக்குப் பார்வையோடு தேவையான வழிமுறைகளை வகுத்துக் கொள்ளுங்கள்.

புதிதாகச் செல்லவேண்டிய திசை, மாற்றத்துக்கான தேவை, தேவைப்படும் காலம் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான செயல்பாட்டு முறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.

அனைவரையும் ஈடுபடுத்தி சேர்ந்து பயணிக்க, வெற்றிகள் தாமாக அமையும்.

சிறுசிறு வெற்றிகளையும் கூட கொண்டாடி, உடன் பணிபுரிபவர்களை உற்சாகப்படுத்தி தன்னம்பிக்கை ஊட்டுங்கள்.

இந்த நிலையில், வெற்றிகள் தந்த வழிமுறைகளையும் தோல்விகளின் காரணங்களையும் ஆராய்ந்து, செயல்பாடுகளை மேம்படுத்தி இலக்கை நோக்கி நகருங்கள்.

மாறிய சூழலின் பணித் தேவைக்கேற்ற பயிற்சியை பணியாளர்கள் பெறும் வகை செய்யுங்கள்.

மாற்றம் பற்றிய தெளிவு, அதை எதிர்கொள்ளும் ஆர்வம், மாறுதலை செயல்படுத்தும் அறிவு, தேவையான திறன், மாறிவிட்ட சூழலில் இவற்றை தக்க வைக்கும் பொறுப்புணர்வு ஆகியவை நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் இருக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒரு சேர இயங்கும்போது இலக்குகள் எளிதாக அடையப்பெறும்.

எந்த மாற்றமும் எளிதானதல்ல. மாற்றத்துக்கான முதல் தேவை முன்பே சொன்னதுபோல் மனநிலையின் மாற்றம். நம் தோளில் அமர்ந்திருக்கும் தெரிந்த பேய் தெரியாத பேயை விட பரவாயில்லை என்ற மனநிலை சரியுமல்ல!

பழைய பாதைகள் பயணத்திற்கு சிறிதும் பயன்படாது போனபின் தான் புதிய பாதைகளை யோசிப்பது நம் வழக்கம் தானே?! காலத்தே மேற்கொண்ட மாற்றம் பொன்னானது.

மாற்றத்தை எதிர்கொள்ள, தலையாய பண்பாக விடாமுயற்சியைச் சொல்லலாம். பறவைகள் சிரமப்பட்டு கூடுகளை அமைக்கையில், அவற்றை மிருகங்களோ இயற்கையோ கலைத்துப் போடலாம். கட்டிய கூடு போனதற்காக பறவைகள் சோர்ந்து போவதில்லை. மாறாக, மீண்டும் மீண்டும் கூட்டை சீராக அமைத்துக் கொள்கின்றன.

எந்த மாற்றத்திலும் ஆரம்ப நிலை சங்கடங்களில் சோர்ந்து விடாமல் மீண்டும் எழுந்து நின்று சாதிக்க வேண்டும்.

மாறத் தலைப்பட்டபின் பின்னோக்கி பார்க்க வேண்டாம். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு அல்லவா ?

நாம் விரும்பும் மாற்றமாய் நாமே மாறுதல் வேண்டும்.

மாற்றத்தின் வளர்ச்சியிலே வான்முகடு தொட்டாலும், மறக்காமல் வேர்களை நினைவிருத்தல் வேண்டும்.

இதுவரை நம்மிடம் இல்லாத ஒன்றைப் பெற வேண்டுமானால், இதுவரை நாம் செய்யாத ஒன்றைச் செய்தாக வேண்டும் என்பதுதான் எத்தனை உண்மை?!

20250128174811475.jpg

ஏற்றம் தரும் மாற்றத்தை முழு மனதுடன் வரவேற்போம்!