இந்த வாரம் முதல், தமிழின் ஐந்தாவது இலக்கணமாகிய அணி இலக்கணத்தை பார்ப்போம் என்று ஆரம்பித்தார் பரணிதரன். இந்த இலக்கண நயத்தை நாம் பார்ப்பதற்கு முன்னால், ஒரு சில தமிழ் சினிமா பாடல்களை முதலில் பார்ப்போம் என்ற பீடிகையுடன் மேலும் தொடர்ந்தார்.
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ ?
குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ ?
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக் குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
மேலே உள்ள பாடல் வரிகளில் தமிழகத்தின் மன்னர்களைப் பற்றியும், அவர்களின் சிறப்பினை பற்றியும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களின் சிறப்புகளை பற்றியும் கவிஞர் கூறி, அதை தமிழன்னை ஆகிய தமிழகத்திற்கு உருவகப்படுத்துகிறார். இந்தப் பாடலை கீழே வீடியோவாக கொடுத்திருக்கிறேன். அதையும் சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
வண்டியில வண்ண மயில் நீயும் போனா
சக்கரம்மா எம்மனசு சுத்துதடி
மந்தாரமல்லி மருக்கொழுந்து செண்பகமே
முனை முறியா பூவே எனை முறிச்சதேனடியோ
தங்க முகம் பார்க்க தினம் சூரியனும் வரலாம்
சங்கு கழுத்துக்கே பிறை சந்திரன தரலாம்
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
வெள்ளி நிலா மேகத்துல வாரது போல்
மல்லிகைப்பூ பந்தல் உட வந்தது யாரு
சிறுவோலையில உன் நினைப்ப எழுதி வச்சேன்
ஒரு எழுத்தறியாத காத்து வந்து இழுப்பது என்ன
குத்து விளக்கொளியே சிறு குட்டி நிலா ஒளியே
முத்து சுடர் ஒளியே ஒரு முத்தம் நீ தருவாயா
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல
மேலே உள்ள பாடல் வரிகளில் கவிஞர் பல்வேறு உருவகங்களையும், உவமைகளையும் கையாண்டு ஒரு பெண்ணைப் பற்றியும், அந்த பெண்ணின் பாட்டைப் பற்றியும், மற்ற குணாதிசயங்களையும் விவரிக்கிறார். இந்தப் பாடலை கீழே வீடியோவாக கொடுத்திருக்கிறேன். அதையும் சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.
கொஞ்ச நாள் பொறு தலைவா
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா
கண்ணிரண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா
காமாட்சி மீனாட்சி
என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ... என்னாடோ
எந்த ஊரோ... நானறியேன்
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டு பிடி
ராவோடு ராவாக அள்ளிவர நாங்க ரெடி
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
மேலே உள்ள இரண்டு பாடல்களிலும், ஒரு பெண்ணை பற்றி பாடும் பொழுது கவிஞர் அந்த பெண்ணை மிகவும் உயர்வாக பாடியுள்ளார். பொதுவாக உலக இயல்பில் இல்லாத சில விஷயங்களை இங்கே எடுத்துக் கூறியுள்ளார். இந்தப் பாடலை கீழே வீடியோவாக கொடுத்திருக்கிறேன். அதையும் சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.
அலைகளை அலைகளை பிடித்து கொண்டு…
கரைகளை அடைந்தவர் யாருமில்லை…
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு…
சௌக்கியம் அடைவது நியாயமில்லை…
ஜனனம் என்பது ஒரு கரைதான்…
மரணம் என்பது மறு கரைதான்…
இரண்டுக்கும் நடுவே ஓடுவது…
தலைவிதி என்னும் ஒரு நதிதான்…
மேலே உள்ள முதல் நான்கு பாடல் வரிகளில் கவிஞர் ஒரு விஷயத்தைக் கூறி, அதன் மூலமாக இன்னொரு விஷயத்தை நமக்கு மறைமுகமாக தெரியப்படுத்துகிறார். இந்தப் பாடலை கீழே வீடியோவாக கொடுத்திருக்கிறேன். அதையும் சொடுக்கி பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்து நான்கு வரிகளிலும் வாழ்க்கையில் இயல்பாக இருக்கக்கூடிய விஷயத்தை நமக்கு இயல்பாகவே கூறுகிறார். இதையேதான் வடமொழியில் ஆதிசங்கர பகவத்பாதர், பஜகோவிந்தம் என்ற பாடலில்,
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம் |
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயாsபாரே பாஹி முராரே
வாழ்க்கையில் இயல்பாக நடக்கக்கூடிய விஷயங்களை ஆதிசங்கரர் நமக்கெடுத்து கூறி, அவற்றிலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பாடலில் கூறுகிறார்.
வடமொழியில் அணி இலக்கணத்திற்கு, அலங்காரம் என்ற பெயர். தமிழில் கூட மாறன் அலங்காரம், தண்டியலங்காரம் போன்ற அணி இலக்கணத்தை பற்றி கூறும் பல நூல்கள் இந்த சொல்லை கையாண்டுள்ளனர்.
மேலே பார்த்த பாடல்களுக்கும் நாம் பார்க்க போகின்ற இலக்கணத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக வரும் வாரம் முதல் பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார் பரணிதரன்.
Leave a comment
Upload