தொடர்கள்
கதை
வெட்டியாவா நான் இருக்கேன்? -முனைவர் என். பத்ரி

20250108083051121.jpg

அப்பொழுது மணி காலை 7 இருக்கும். நான் எங்க வீட்டு ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். எங்க அப்பா சுகுமார் என்கிட்ட வந்தார். வந்து,’பாபு,வெட்டியாத் தானே இருக்க.போய் நியூஸ் பேப்பர் வாங்கிட்டு வா’ன்னு சொல்லி ஒரு பத்து ரூபாய் நோட்டை என்னுடைய கையில் திணித்தார்.

நான் என்ஜினியரிங் டிகிரிய முடிச்சுட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு 25 வயசு வாலிபன். என்னுடைய அண்ணன் ஒரு வங்கியில் வேலை பார்க்கிறார். அப்பா ஒரு ஸ்கூல் டீச்சர். அண்ணனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது.அடுத்த தெருவில் தனிக் குடித்தனம் இருக்காரு.

அப்பா ஸ்கூல் போயிட்டா நானும், என்னோட அம்மாவும்தான் வீட்டுல இருப்போம். அப்பப்போ இன்டர்வியூக்கு போகும் நான், அம்மா சொல்லும் வேலையெல்லாம் செய்வேன். தினமும் மெயிலையும், போஸ்ட் மேனையும் அப்பாயின்மென்ட் ஆர்டருக்காக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இண்டர்வியூக்கு போகுமிடங்களில் எல்லாம், ’ஹிந்தி தெரியுமா? இங்கிலீஷ் தெரியுமா?’ன்னு கேக்கிறாங்கா. ’எனக்குத்தானே தெரியும். எனக்கு தமிழே தகராறு’ன்னு.’இனிமே எப்போ இங்கிலீஷும் ஹிந்தியும் கத்துட்டு நான் வேலைக்கு போகப் போறேனோ?ஒன்னுமே புரியல?’

இந்த நினைவில் மூழ்கியிருந்த என்னை அப்பாவின் அதட்டல்தான் நிஜ உலகுக்கு கொண்டு வந்தது.

அழாத குறையாக அடுத்த தெருவுக்குப் போய், நியூஸ் பேப்பர வாங்கி வந்து அப்பாவிடம் கொடுத்தேன். அப்பத்தான் தெரிஞ்சது. அவர் கேட்டது தமிழ் பேப்பர்ன்னு. நான்தான் ’எம்ப்ளாய்மெண்ட் ஆப்பர்சுனிட்டி பார்க்காலாம்’ன்னு இங்கிலீஷ் பேப்பர வாங்கிட்டு வந்தேன். அதற்கு ஒரு திட்டு அப்பாகிட்ட கிட்டேந்து. அத முழுசா வாங்கிட்டு திரும்பப் போயி, அவர் சொன்ன தமிழ் பேப்பர வாங்கி வந்து கொடுத்தேன்.

அதுக்குள்ள மணி 9 ஆயிடுத்து. அப்பா ஸ்கூலுக்கு போக நேரமாயிடுச்சு.பேப்பர படிக்காம,என்ன முறைச்சுட்டு போனாரு.’ஏதோ வந்த வேலையையெல்லாம், நான்தான் வேண்டாம்’னு சொல்றாப் போல.

நான் டிவி பார்ப்பதை தொடர்ந்தேன்.அம்மா போட்ட காலை உணவை சாப்பிட்டேன்.கொஞ்ச நேரமாச்சு. அம்மா வந்தாங்க.’ வெட்டியாத்தானே இருக்க. போய் ரேஷன் வாங்கிட்டு வா’ன்னாங்க. நான் போய் ரேஷன்ல பொருள எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தேன்.

கொஞ்ச நேரத்துல எங்க அண்ணன் போன் பண்ணாரு. அவர் பங்குக்கு ’வெட்டியாத்தானே இருக்க.போய் அண்ணி கிட்டே ஒரு செக்கு இருக்கு. வாங்கி பேங்க்ல என் அக்கவுண்ட்ல போட்டுட்டு வா’ ன்னு சொன்னாரு.அந்த செக்கை, அண்ணியிடமிருந்து வாங்கிக் கொண்டு, பேங்குக்கு போனேன். ரொம்ப கூட்டமா இருந்தது. ஒரு வழியா செக்க போட்டுட்டு வீட்டுக்கு திரும்பினேன்.

மணி 1 இருக்கும். நல்ல வெயில்ல வந்த நான்,’உள்ளே போய் கொஞ்சம் படுக்கலாம்’னு நெனச்சேன்.அம்மா வந்தாங்க. ‘வெட்டியாத்தானே இருக்க. இந்த அரிசியை ரவையாய் உடைச்சிட்டு வா. நைட்டு உப்புமா பண்ணணும்,’ன்னு சொன்னாங்க.அம்மா சொன்ன வேலைய செஞ்சு முடிச்சேங்க.

மணி 3 இருக்கும்.அண்ணிக்கு வியர்த்தது போல இருக்கு.அவங்ககிட்டேந்து ஃபோன் வந்தது.பாபு ’வெட்டியாத் தானே இருக்கீங்க? அண்ணனோட பைக் ரிப்பேர்.சரி பண்ணி வைக்கச் சொல்லி இருக்காரு. வந்துட்டு எடுத்துட்டு போங்க’ன்னாங்க.

அங்கப் போனேன். வண்டிய ரிப்பேருக்கு தள்ளிட்டு போயி, ஒரு வழியா ரிப்பேர் பண்ணி அவங்க வீட்டில விட்டுவிட்டு வந்தேன்.’ரிப்பேர் காச அண்ணன் தருவார்’ன்னு சொல்லிட்டாங்க. கையிலிருந்த காசும் காலி.

மணி 5 இருக்கும். அப்பா ஸ்கூல்ல இருந்து வந்து இருந்தார்.’நான் வரும்போது பால் வாங்க மறந்துட்டேன். வெட்டியாத்தானே இருக்க. போய் பால் வாங்கிட்டு வா’ன்னங்க. ’சரி’ ன்னு போனேன். பால் வாங்கி வந்தேன்.

மாலை 6 மணி இருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும் என் தங்கை ரேவதி வந்தாள். அண்ணா, ’வெட்டியாத்தானே இருக்க. இந்த நோட்டுக்கெல்லாம் அட்டை போட்டு கொடு’ என்றாள். இருபது நோட்டு இருக்கும். எல்லாவற்றுக்கும் அட்டை போட 11 மணி ஆயிடுச்சு. எல்லாரும் படுக்க போயிட்டாங்க.

இப்ப சொல்லுங்க.’நான் இன்னிக்கு முழுக்க வெட்டியாவா இருந்தேன்? இப்படி சொல்லி, சொல்லியே என்ன வெட்டியாவாகவே இருக்க வெச்சுடுவாங்களோ?’ ன்னு எனக்கு பயமா இருக்கு. உங்க வீட்டுல யாராச்சும் என்ன மாதிரி இருந்தா அவங்கள அப்படி சொல்லிடாதீங்க,ப்ளீஸ்.’

குறைஞ்ச சம்பளமா இருந்தாக் கூட. வேலைக்கு சீக்கிரம் வேலைக்கு போயிடனும்’ன்னு நினைத்துக் கொண்டே மொட்டை மாடிக்கு படுக்கப் போயிட்டேன்.