தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை - 3 - மூத்த பத்திரிகையாளர் ஆர்.நடராஜன் சமுதாயவீதியில் ஞானரதம் !

2025001108430487.jpg

அவனது செய்தி வளையத்திலிருந்து சோக சம்பவங்கள் இடைவெளி கொடுத்து சற்றே விலகி நிற்க, சில சுவாரஸ்யமான நிகழ்வுகளும் நடந்தன. அவற்றில் ஒன்று அவன் எழுதிய பெட்டிச்செய்தி, ஒரு வாசகரின் நகைச்சுவையுடன், விபரீத அர்த்தத்தையும் கொடுத்தது.

சுமார் 47 வருடங்களுக்கு முன்பு பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் கல்வியாளர் எஸ்.வி.சிட்டிபாபு. பொது அரங்கில் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், பத்துவித புதிய யோசனைகள் சொல்லப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று ‘கருவுற்றிருக்கும் பெண்களுக்கு, மெடர்னிட்டி லீவு கொடுப்பது போல், பிரசவத்தை அடுத்து, ஆண்களுக்கு ‘பெடர்னிட்டி லீவு’ கொடுக்க வேண்டும் என்பது. இந்த ‘பெடர்னிட்டி லீவு’ பற்றிய செய்தியை அவன் சுவாரஸ்யமான பெட்டிச் செய்தியாக எழுதினான். ‘பெடர்னிட்டி லீவு’ என்பதுதான் அதன் தலைப்பு.

அதாவது குழந்தை பிறந்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு தாய்க்கு உதவியாக இருக்க தந்தைக்கும் லீவு தரவேண்டும் என்பதே அந்த சிபாரிசு. இந்தச் செய்தியை படித்துப்பார்த்த அனந்தபூர் வாசகர், எஸ்.டி.திருமலாராவ் இப்படி கடிதம் எழுதியிருந்தார், ‘‘இது ஆண்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல. மனைவிமார்கள் கணவன்களை பழிவாங்கும் சூழ்ச்சி. ‘இதைச் செய், அதைச்செய்’ என்று சொல்லி உயிரை வாங்கிவிடுவார்கள். இதைவிட எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அலுவலக வேலை மேலானது.’’

தன் செய்திக்கு, இப்படி ஒரு வாசகரின் கிண்டல் கடிதம் வெளிவந்தது குறித்து அவன் பெரிதும் மகிழ்ந்தான். ஏனென்றால் அவன் ஹிண்டுவில் நுழைந்ததே வாசகர்கள் கடிதம் சம்பந்தமான ஆராய்ச்சிக்காகத்தான். சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் வெளிவந்த வாசகர் கடிதங்களை மையமாக வைத்து அந்தக்காலகட்ட சமூக வரலாற்றை எழுதுவதே அவனது டாக்டர் பட்டத்திற்கான ஆராய்ச்சி திட்டம். அது தொடர்பாக ஹிண்டு நிர்வாக ஆசிரியர் ஜி.கஸ்தூரிக்கு ஒரு கடிதம் எழுதினான். அப்போது அவன், ராமேஸ்வரம் தேவஸ்தான கலைக்கல்லூரியில் முதல்வராகவும், ஆங்கிலப் பேராசிரியராகவும் இருந்தான். அவனை சென்னைக்கு அழைத்த ஜி.கஸ்தூரி, ‘‘எங்கள் நூலகத்தில் பழைய பேப்பர்களை பார்க்கலாம், குறிப்புகளை எடுத்துக் கொள்ளலாம், உங்களுக்கு பத்திரிகை துறையில் நுழைய ஆர்வம் இருக்கிறதா-?’’ என்று கேட்டார்.

அவன் ‘ஆம்’ என்று சொன்னவுடன், ஹிண்டுவில் உழைக்கும் பத்திரிகையாளராக நியமித்தார். ஒருமாத கால ‘டெஸ்க்’ பயிற்சிக்கு பிறகு அவன், ரிப்போர்ட்டிங் செக்ஷனுக்கு அனுப்பப்பட்டான். எனவே தன் செய்தியை ஒட்டி அதே ஹிண்டுவில் ஒரு வாசகர் கடிதம் வெளியானது குறித்து பெருமைப்பட்டான்.

அவன் அடுத்து எழுதிய ஒரு செய்தி, ஒருவார காலத்திற்கு பல வாசகர்களின் கடிதங்களை ஈர்த்தது. பள்ளி விழாக்கள், கல்லூரி விழாக்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் என்று பல நிகழ்விடங்களுக்கு சென்று செய்திகள் எழுதி வந்தான் அவன். அவற்றில் ஒன்றை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

அப்போது டெல்லியில் ஜனதா கட்சியின் ஆட்சி, மத்திய மந்திரியாக இருந்த ஜெகஜீவன்ராம் சென்னைக்கு வந்திருந்தார். இப்போது காட்சி ஊடகங்கள் ஒரு அரசியல் தலைவரை விமானக்கூடத்திலேயே மடக்கி பேட்டி காண்கின்றன. அச்சு ஊடகத்தாரும், செய்தியை விட்டுவிடக் கூடாது என்பதற்காக காட்சி ஊடகத்துடன் போட்டியிடுகிறார்கள். 50 வருடங்களுக்கு முன்பு அப்படி அல்ல. எந்தத் தலைவரும் சென்னை வந்ததும், ஒரு பத்திரிகையாளர் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். அங்கே நிருபர்கள் முன்னதாகவே வந்து அமர்ந்திருப்பார்கள். மூத்த பத்திரிகையாளர்கள், கேள்விக்கணைகளைத் தொடுப்பார்கள். இளைய பத்திரிகையாளர்களும், சில கேள்விகளைக் கேட்பார்கள். அவன் அப்போது ஒரு இளைய பத்திரிகையாளன். கையில் டேப்ரிக்கார்டர் கிடையாது, ஆனால் மாணவனாக இருந்தபோதே வகுப்பில் ஆசிரியர் சொன்னதையெல்லாம் அப்படியே மனதில் பதித்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. பத்திரிகையாளன் ஆனதும் கையில் இருந்த சிறு சுருக்கெழுத்து நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொள்ளும் பழக்கமும் வந்தது. அப்போது ஜெகஜீவன்ராம் சொன்ன வாசகங்களையெல்லாம், வார்த்தைப் பிசகாமல் எழுதி வைத்துக் கொண்டான்.

பத்திரிகையாளர் கூட்டம் ஒரு அறையில் நடைபெற்றது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை அப்படிச் சொல்வதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்காவிட்டாலும் கூட, ‘‘தேசம் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது’’ என்று அழுத்தமாகச் சொன்னார். காரணங்களைச் சொல்லவில்லை, உதாரணங்களைத் தரவில்லை.

இதில் பத்திரிகையாளர்கள் ஊகிக்க முடிந்த விஷயம், அப்போது பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் மீது அவருக்கு இருந்த காழ்ப்புணர்வு. மொரார்ஜிதேசாய் ஒரு பிராமணர். ஆனாலும் அவர் தெரிந்துகொள்ளாத, தெரிந்து கொண்டிருந்தும் வெளிக்காட்டாத ஒரு விஷயம், மொரார்ஜிதேசாய் பிராமணர் என்பதற்காக பிரதமர் ஆகவில்லை, இந்திரா காந்தி காலத்தில் துணைப்பிரதமராக இருந்தார். அதற்கு முன்பு குஜராத் முதல்வர், அவர் ஒரு மாஜி ஐ.சி.எஸ். அதிகாரி, எல்லாவற்றிற்கும் மேலாக அப்பழுக்கற்ற ஒழுக்கசீலர். நிர்வாக விஷயங்களில் மொரார்ஜிதேசாய் ஒரு கெடுபிடியான நபர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்தபோது, டில்லியில் நடைபெற்ற அகில இந்திய மாணவர் மாநாட்டில் மொரார்ஜிதேசாய் தலைமையில் மாணவர்கள் சார்பாக அவன் முதல் பேச்சாளனாக கலந்து கொண்டவன். பின்னர் சக மாணவர்களுடன் அவன் அவரைப் பேட்டி கண்டான். அப்போது அவன் புரிந்து கொண்டது, அவர் வாதங்களில் வல்லவர், பிறருடன் ஒத்துப் போகாதவர். அதனால்தானோ என்னவோ எல்லா அரசியல்வாதிகளும் மொரார்ஜிதேசாயை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டதேயில்லை.

மொரார்ஜியை மனதில் வைத்துக் கொண்டு பிராமண ஆதிக்கம் பற்றிப் பேசிய ஜெகஜீவன்ராம், நாட்டில் நிகழும் ஜாதிக்கலவரங்கள் பற்றியும் குறிப்பிட்டார். இவன் அலுவலகம் சென்றதும், ‘‘பிராமணர்கள்வசம் தேசம்’’ என்ற தலைப்பில் செய்தி எழுதிக் கொடுத்தான். அது அப்படியே பிரசுரம் ஆயிற்று.

அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் ஹிண்டு அலுவலகத்தில் வாசகர் கடிதங்கள் குவிந்தன. அதில் பிராமணர்களுக்கும், ஜாதிக் கலவரங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஹரிஜன சேவையில் ஈடுபட்டவர்கள் பிராமணர்கள் என்றபடியான கடிதங்கள் பிராமணர்கள் அல்லாதவர்களிடமிருந்தும் வந்திருந்தன.

அப்போதும் கூட ஜெகஜீவன்ராம் ஹிண்டுவில் வெளிவந்த செய்திக்கு மறுப்போ, எதிர்ப்போ, திருத்தமோ தெரிவிக்கவில்லை. அரசியல்வாதிகள் அப்படித்தான், போகிறபோக்கிலே ஏதாவது சொல்லிவிட்டுப் போவார்கள் என்பது பத்திரிகை உலகில் புதிதாக நுழைந்த அவனுக்குப் புரிந்தது. அரசியலில் ஜாதியின் பேதம் எவ்வளவு என்பதை அவன் புரிந்து கொண்ட முதல் சம்பவம் அதுதான். சென்னை வாசத்திற்குப் பிறகு, தென்னாற்காடு மாவட்டத்தில் ஹிண்டு நிருபராக சேர்ந்த அவன் எழுதிய முதல் பெரிய செய்தி விழுப்புரம் ஜாதிக் கலவரம்.

விழுப்புரத்தில் தினத்தந்தி நிருபர் விஜயன், ‘‘இதற்கு முன்பு நீங்கள் என்ன வேலை பார்த்தீர்கள்?’’ என்று அவனைக் கேட்டார்.

‘‘கல்லூரி முதல்வர்’’ என்று அவன் சொன்னதும், விஜயன் சொன்ன முதல் வார்த்தை ‘‘முட்டாள்.’’ பிறகு சொன்னார், ‘கல்லூரி முதல்வர் வேலையை விட்டு விட்டு நிருபராக வந்திருக்கிறாயே? நீ ஒரு முட்டாள்’’ என்றார்.

அப்படியல்ல, கல்லூரியில், பல்கலைக்கழகங்களில் கற்க முடியாததையெல்லாம், வீதிகளில் நிருபராக வலம் வந்தபோது கற்றுக் கொண்டவன் அவன்.

பாடப்புத்தகங்களும் நூலகங்களும் சொல்லிக் கொடுக்காததை, செய்தி சேகரிக்க வீதிகளில் சென்றபோது தெரிந்து கொண்டான். பின்னர் அவன் ஏற்றுக்கொண்ட பெரிய, பெரிய பொறுப்புகளுக்கு அப்போது பெற்ற வீதி வழி ஞானம் பெரிதும் துணை நின்றது. ஆக, நிருபர் பொறுப்பு அவனைப் பொறுத்தவரை சமுதாய வீதியில் ஒரு ஞானரதம்.