போன வாரம் பேசியது போலவே இந்த வாரம் சிற்றிலக்கியங்களில் சிலவற்றை தொடை நயங்களுடன் பார்ப்போம். இன்று பள்ளு இலக்கியத்தில் இருந்து சில பாடல்களை பார்ப்போம். பொதுவாக பள்ளு இலக்கியத்தை பழந்தமிழ் நூல்கள் உழத்திப்பாட்டு என்று அழைக்கின்றனர். குறவஞ்சி இலக்கியம் பொதுவாக நாடக நடையில் உள்ளது. உழவின் மேன்மையை நமக்கு தெரிவித்து, அக்கால உழவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை ஊர் மற்றும் சமய குறிப்புடன் சேர்த்து நகைச்சுவையாக கூறுவதே பள்ளு ஆகும். நமக்கு பொதுவாக தெரிந்தது முக்கூடற் பள்ளு. நம்முடைய சிறிய வயதில் தமிழ் பாட புத்தகத்தில் பள்ளு இலக்கியத்தில் இருந்து சில பாடல்களை படித்திருப்போம். அதில் ஒன்றிரண்டை கீழே கொடுத்துள்ளேன். முக்கூடற்பள்ளு இலக்கியத்தை எழுதியவர் யார் என்று நமக்கு தெரியவில்லை. ஆனாலும் பள்ளு வகை இலக்கியத்திற்கு தலைசிறந்த ஒரு நூலாக முக்கூடற்பள்ளு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், தண்பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி, சித்ரா நதி என்று அழைக்கப்படும் சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் இடத்திற்கு வடக்கே உள்ள ஊர் முக்கூடல் (மூன்று ஆறுகள் கூடுகின்ற இடம் என்று பொருள்). இந்த ஆற்றின் வடக்கே உள்ள பகுதியை வடகரை ஆசூர் நாடு என்றும் தெற்கே உள்ள பகுதியை தென்கரை சீவல மங்கை (ஸ்ரீவல்லப மங்கை) என்றும் முற்காலத்தில் அழைக்கப்பட்டது. சீவலப்பேரி (ஸ்ரீவல்லப பேரேரி - பெரிய ஏரி என்றும் ஸ்ரீ வலம் வந்த பேரி என்றும்) பாண்டி என்ற படத்தில் கூட இந்த இடத்தையே பெயராக வைத்துள்ளார்கள். இதில் உள்ள ஶ்ரீவல்லப என்பது பாண்டிய மன்னனை குறிக்கக் கூடிய ஒரு சொல். இந்த இலக்கியத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் (பள்ளனின் மனைவிகள்) மூத்தவள் ஆசூர் வடகரை நாட்டை சேர்ந்த வைணவ சமயத்தை சார்ந்தவள். இளையவள் சீவல மங்கை தென்கரை நாட்டைச் சேர்ந்த சைவ சமயத்தை சார்ந்தவள். இவர்களின் கணவனான பள்ளன், முக்கூடல் அழகர் பெருமானின் சொத்துக்களான விவசாய நிலங்களில் விவசாயம் பார்ப்பவர். அழகரின் சிறந்த பக்தன். இதில் உள்ள மற்றொரு கதாபாத்திரம் அழகரின் விவசாய நிலங்களை கண்காணிக்கும் பண்ணைக்காரர். இந்த நால்வரை வைத்தே இந்த இலக்கியம் முழுவதுமாக நமக்கு கூறப்பட்டுள்ளது. மாடுகளின் வகைகள், ஏர் வகைகள், மீன் வகைகள், உழவு கருவிகள், மழைக்குறி போன்ற பல வகையான உணவு சம்பந்தப்பட்ட செய்திகளை இந்த இலக்கியத்தின் செய்யுள்களின் மூலமாக நம்மால் அறிய முடிகிறது. மாடுகளின் வகைகளை ஒரு படத்தில் சமுத்திரக்கனி கூறியிருப்பார். அந்த வகைகள் இந்த இலக்கியத்தில் இருந்தே எடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த இலக்கியத்தில் சில செய்யுள்கள் மற்றும் அவைகளின் தொடை நயங்களை பார்ப்போம்.
முக்கூடற் பள்ளு
பாடியவர் : பெயர் தெரியவில்லை
பாடப்பட்டவர் : முக்கூடல் நகரில் வீற்றிருக்கும் தென்திருமாலிருஞ்சோலை கருமாணிக்கத் தேவர் பெருமான் (அழகர்)
பாடப்பட்டதன் நோக்கம் : அழகரின் பெருமையை எடுத்து இயங்குவது
பாடப்பட்ட பாடல்கள் : 172 (1 காப்பு, 1 கடவுள் வாழ்த்து, 170 பாடல்கள்)
கறைபட்டுள்ளது வெண்கலைத் திங்கள்
கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட்டுள்ளது விண்ணெழும் புள்ளு
திரிபட்டுள்ளது நெய்படும் தீபம்
குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி
குழைபட்டுள்ளது வல்லியம் கொம்பு
மறைபட்டுள்ளது அரும்பொருட் செய்யுள்
வளமை அரசூர் வடகரை நாடே
காயக் கண்டது சூரிய காந்தி
கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம்
மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய்க்குலைச் செந்நெல்
தணிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்
சீவல மங்கைத் தென்கரை நாடே
எதுகை தொடை :
கறைபட்டுள்ளது சிறைபட்டுள்ளது குறைபட்டுள்ளது மறைபட்டுள்ளது
காயக் மாயக் சாயக் தேயக்
மோனை தொடை :
கடம்பட்டுள்ளது கம்பத்து
திரிபட்டுள்ளது தீபம்
குறைபட்டுள்ளது கம்மியர்
குழைபட்டுள்ளது கொம்பு
காயக் கலங்கக்
மாயக் மறுகக்
காயக் கண்டது காந்தி
கலங்கக் கண்டது கண்டம்
சாயக் செந்நெல்
தணிப்பக் தாபதர்
இயைபுத் தொடை :
பட்டுள்ளது பட்டுள்ளது பட்டுள்ளது பட்டுள்ளது பட்டுள்ளது பட்டுள்ளது பட்டுள்ளது
கண்டது கண்டது கண்டது கண்டது கண்டது கண்டது கண்டது
வாரம் வெள்ளம்
மேலே உள்ளது போல சில பாடல்கள் பள்ளுவில் உள்ளது. இவற்றையும் குறவஞ்சியில் உள்ள சில பாடல்களையும் தழுவியே கர்ணன் படத்தில் வரும் நாணிச் சிவந்தன மாதலார் கண்கள் என்ற பாடல் எழுதப்பட்டுள்ளது.
எதுகை தொடை, மோனை தொடை மற்றும் இயைபுத் தொடை ஆகிய மூன்றையும் கீழே உள்ள செய்யுள்களில் போல்ட் (Bold) செய்து உள்ளேன்.
மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை
மிடைந்த பூகம் சுமந்து தன் காயை
சூதம் ஒன்றிச் சுமக்கக் கொடுக்கும்
சூதம் தன்கனி தூக்கும் பலாவில்
ஓதும் அந்த பலாக்கனி வாழை
உறுக்கவே சுமந்து ஒண்குலை சாய்க்கும்
மாதுளம் கொம்பு வாழை தாங்கும்
வளமை ஆசூர் வடகரை நாடே
பங்கயம் தலை நீட்டிக் குரம்பினில்
பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சட் கழுத்தைத்
தடவி மெள்ளத் தொடும் அந்த மஞ்சள்
அங்கு அசைந்திடும் காய்க்கதிர் செந்நெல்
அளாவி நிற்கும் அச்செந்நெலும் அப்பால்
செங்கரும்புக்குக் கைதரும் போல் வளர்
சீவல மங்கை தென்கரை நாடே
பொதுவாக இன்றைய 90களில் பிறந்த தலைமுறையினர் மேலே உள்ள செய்யுளை மனப்பாடப் பகுதியாக படித்து இருப்பார்கள்.
ஓடக் காண்பது பூம் புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
வருந்தக் காண்பது மின்னார் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக்கொத்து
தேடக் காண்பது நல்லறம் சீர்த்தி
திருக்குற்றாலத் தென் ஆரிய நாடே
மேலே உள்ளது போல சில பாடல்கள் குறவஞ்சியில் உள்ளது. இவற்றை தழுவியே கர்ணன் படத்தில் வரும் நாணிச் சிவந்தன மாதலார் கண்கள் என்ற பாடல் எழுதப்பட்டுள்ளது.
சித்திரக் காலி வாளாண் சிறை மீட்டான் மணல்வாரி
செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா
முத்து விளங்கி மலை முண்டன் பொற்பாளை நெடு
மூக்கன் அரிக்கிராவி மூங்கிற் சம்பா
கத்தூரி வாணன் கடைக் கழுத்தன் இரங்கல் மீட்டான்
கல்லுண்டை பூம்பாளை பார்கடுக்கன் வெள்ளை
புத்தன் கருங்குறுவை புனுகுச் சம்பா
மேலே உள்ள பாடல் தமிழ்நாட்டில் அப்பொழுது புழக்கத்தில் இருந்த சில வகையான அரிசி வகைகளின் பெயர்களை கூறியுள்ளது. இவற்றுள் சிலவற்றை (சீரகச்சம்பா, கருங்குறுவை போன்றவை) இன்றளவும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை
குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன்
வடர்ப் புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக் கண்ணன்
மட்டைக் கொம்பன் கருப்பன் மஞ்சள் வாலன்
படப்புப் புடுங்கி கொட்டைப் பாக்கன் கருமறையன்
பசுக்காலன் அணிற்காலன் படலைக் கொம்பன்
விடர்த்தலைப் பூ நிறத்தான் வெள்ளைக் காளையும் இந்த
விதத்திலுண் டாயிரமே மெய்கா ணுண்டே.
மேலே உள்ள பாடல் தமிழ்நாட்டில் அப்பொழுது புழக்கத்தில் இருந்த சில வகையான மாட்டின் வகைகளின் பெயர்களை கூறியுள்ளது. இவற்றுள் சிலவற்றை (மேழை, மயிலை போன்றவை) இன்றளவும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். தொண்டன் படத்தில் சமுத்திரக்கனி கூறும் நாட்டு மாடு வகைகள் சில இந்த செய்யுளில் உள்ளது. இதுபோல இராமாயண கதையை வைத்து உழவு கருவிகளின் பெயர்களை மிகவும் அழகாக உழவர் எடுத்துரைக்கிறார். இது தவிர நீர் நிலைகளின் பெயர்களும் தனித்தனியாக வருகிறது.
இது போலவே பல பள்ளு செய்யுள்கள் நமது இலக்கியங்களில் பரவி கிடக்கிறது. அவற்றுள் சில இலக்கியங்களின் பெயர்களை மட்டும் கீழே கொடுத்துள்ளேன் :
அகத்தியர் பள்ளு
இரும்புல்லிப் பள்ளு
எட்டையபுரப் பள்ளு
கங்காநாயக்கர் பள்ளு
கஞ்சமி செட்டியார் பள்ளு
கட்டி மகிபன் பள்ளு
கண்ணுடையம்மன் பள்ளு
கதிரை மலைப் பள்ளு
குருகூர்ப் பள்ளு
கொடுமாளூர்ப் பள்ளு
கோட்டூர் பள்ளு
சண்பகராமன் பள்ளு
சிவசயிலப் பள்ளு
சிவசைல பள்ளு
சீர்காழிப் பள்ளு
செண்பகராமன் பள்ளு
சேரூர் ஜமீன் பள்ளு
ஞானப் பள்ளு
தஞ்சைப் பள்ளு
தண்டிகைக் கனகராயன் பள்ளு
திருச்செந்தில் பள்ளு
திருமலை முருகன் பள்ளு
திருமலைப் பள்ளு
திருவாரூர்ப் பள்ளு
திருவிடைமருதூர்ப் பள்ளு
தென்காசைப் பள்ளு
பள்ளுப் பிரபந்தம்
பறாளை விநாயகர் பள்ளு
புதுவைப் பள்ளு
பொய்கைப் பள்ளு
மாந்தைப் பள்ளு
முக்கூடற் பள்ளு
முருகன் பள்ளு
வையாபுரிப் பள்ளு
அடுத்த வாரம் வேறு ஒரு சிற்றிலக்கிய வகையை எடுத்து அதன் தொடைகளை விரிவாக பார்ப்போம்.
Leave a comment
Upload