அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், 538க்கு 312 என்று அதிகமான வாக்குகளைப் பெற்று டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வருகிறார்.
இதோ இந்த போட்டோ ட்ரம்ப் தேர்தல் கூட்டத்தில் காதில் குண்டடி பட்டபோது எடுத்த படம்.
அமெரிக்க அரசியல் மற்றும் உலகெங்கிலும் அதன் தாக்கங்கள் பற்றி கவலைப்படாத ஒரு சாமானியனுக்கு, இது ஒரு சாதாரண தேர்தலாகத்தான் தோன்றும்.
இந்த தேர்தலில், 'டிரம்ப் வென்றார்' என்று சொல்வதற்கும் அல்லது 'கமலா தோற்றார்' என்று சொல்வதற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது, ஏனெனில் இது இரண்டு நபர்களுக்கு இடையில் நடந்த தேர்தல் அல்ல. அவர்கள் நிலைப்பாடு என்ன, எந்த மாதிரியான கொள்கைகளை பிரதானப் படுத்துகிறார்கள் என்பது அந்த இரு நபர்களை விட மிகப் பெரியது.
பிரதான ஊடகங்கள் மூலமாக நீங்கள் ட்ரம்ப் பற்றிய கருத்தை உருவாக்கினால், அவரை ஒரு பெண் வெறுப்பாளர், கற்பழிப்பாளர், குற்றவாளி, இரண்டு முறை குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல்வாதி, என்றுதான் கருதுவீர்கள். நிச்சயமாக நாம் விரும்பும்படியான நபர் அல்ல.
ஆனாலும் பெரும்பாலானோர் அவருக்கு வாக்களித்தனர். ஏன் அப்படி? அமெரிக்கர்களால் நல்லதையும் கெட்டதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லையா? சற்று நிதானித்து யோசியுங்கள்.
அமெரிக்க மக்கள் இரண்டில் சிறந்த ஒன்றை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மனிதர்கள் இயற்கையாகவே, கெட்டதை விட நல்லதைத் தேர்ந்தெடுக்கும் மனநிலை உள்ளவர்கள்தான்.
அப்படியானால், தோல்வியடைந்த கமலா, ட்ரம்பை விட மோசமாக இருந்தாரா என்ன? அதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.
டிரம்ப் ஒரு சாதாரண தொழிலதிபர். மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்த தொழிலதிபர். அவரது ஆதரவாளர்கள் கூறுவது போல், அவர் ஒரு தேசபக்தர். ஒரு உண்மையான தேசபக்தர் ஒரு நாடு இன்று எப்படி இருக்கிறது என்பதையும், மேலும் வலுவடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிவார். ஒரு நாட்டின் வெற்றியானது, அதன் மக்களின் பண்பாடுகள் மற்றும் அறிவுத்திறன் அடிப்படையில்தான் அமையும். அவர்களது நம்பிக்கையும் பாரம்பரியமும் அதற்கு வலிமை சேர்க்கின்றன. டிரம்பிடம் சில தனிப்பட்ட குறைபாடுகள் இருந்தபோதிலும், அமெரிக்க வாக்காளர்கள் அவரைத்தான் தேர்ந்தெடுத்தனர், என்றால் தோல்வியடைந்தவர் அதைவிட இன்னும் குறைவானவர் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். கமலாவை ஒரு பிரதிநிதியாக மட்டும்தான் பார்க்க வேண்டும். அவருடைய இடத்தில் வேறு யாராக இருந்தாலும் தோற்றிருப்பார்கள்.
வாக்காளர்களால் பெருமளவில் நிராகரிக்கப்பட்ட கமலா அப்படி எதை பிரதானப்படுத்தினார்? ஒருவேளை, அது அமெரிக்க சமூகத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக இருந்திருக்குமோ? நான் அப்படித்தான் நினைக்கிறேன்.
ஒரு சமூகம் வலுவடைகிறது என்றால் அதற்கு காரணம் அதன் கொள்கைகளும் நம்பிக்கையும்தான். தாராளமயம் என்ற பெயரில் ஒரு சமூகத்தில் வேற்று கருத்துகள் திணிக்கப்படும்போது, அது அந்த சமுதாயத்தை அழிவுப்பாதையை நோக்கித்தான் எடுத்துச்செல்லும். மக்களின் மனதில் ஒரு கலக்கத்தை உருவாக்கும். உலகம் முழுவதும் இப்போது தாராளமயம் என்ற பெயரில் ஒரு கொள்கை திணிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இடதுசாரி சித்தாந்தங்களின் பல்வேறு வகையான வெளிப்பாடுகளைத்தான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். மனித உரிமை என்ற போர்வையில், ஒருபால் சேர்க்கை, அனைவருக்கும் சமபங்கு போன்ற கொள்கைகள் விலைபோன ஊடகங்கள் மூலமாக மக்கள் மீது திணிக்கப்படுகிறது.
இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது உடனே சாப்பிடு, இல்லையெனில் ஒரு பூச்சாண்டி வந்து அதை எடுத்துச் செல்வான் என்று சொல்லி ஊட்டுவதை நான் பார்த்திருக்கிறேன். இளம் வயதில் நாம் பழகிய அந்த பய உணர்வு இன்றும் தொடர்கிறது என்று அறிந்த சக்திகள், ஊடகங்கள் உதவியுடன், ஒரு பூச்சாண்டியை முன்னிருத்துகிறார்கள்.
இப்படியாக அந்நிய கொள்கைகள், நாட்டுக்கு ஒரு பூச்சாண்டி என்ற போர்வையில் உலகெங்கும் மக்களை, ஒரு சமுதாயச் சிதைவை நோக்கி வழிநடத்துகிறார்கள். அதை முற்றிலுமாக நம்பும் மக்கள் மற்றும், விலைபோன ஊடகங்கள் உதவியுடன் ஆளும் வர்கத்தினர் தைரியமாகச் செயல்பட்டு வந்தனர். இப்போக்கு ஊழலுக்கும் வழிவகுத்தது.
அடித்தள மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றால், விரைவில் அதற்கான காலமும் வழியும் பிறக்கும். ஆனால், இதை ஆட்சியாளர்கள் உணரத் தவறிவிட்டார்கள். அப்படி ஒரு மாற்றத்திற்கான நேரம் வரும்போது, ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு கட்சியோ அதை வழிநடத்த முன்வருவார்கள். 2014லில், இந்தியா இத்தகைய மாற்றத்தை கண்டது. அந்த கட்சியையும் அதன் தலைவர்களையும், வலதுசாரிகள் மற்றும் தேசியவாதிகள் என்று அழைத்தனர். உலகெங்கிலுமே இத்தகைய மாற்றத்திற்கு வழிவகுத்தவர்களை வலதுசாரிகள் என்றுதான் அழைத்தார்கள்.
இப்படியான எழுச்சி இப்போது உலகம் முழுவதும் காணப்படுகிறது. ஐரோப்பாவில், இத்தாலி, பின்லாந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோஷியா மற்றும் செக் குடியரசு ஆகிய ஆறு நாடுகளில் கடுமையான வலதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்தில் உள்ளன. பிரான்சில், சந்தர்ப்பவாதிகளின் கூட்டணியால் இது தாமதமாகியுள்ளது. நெதர்லாந்தில், வலதுசாரிகள் பலம் பெற்றுவருகிறார்கள். தென் அமெரிக்காவில், அர்ஜென்டினாவில் வலதுசாரி அரசாங்கம் உள்ளது. பிரேசிலில், அவர்கள் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
சுதந்திர உலகின் முன்னணி நாடாகக் கருதப்பட்ட அமெரிக்கா, அத்தகைய மாற்றத்தை விரும்பியது. நாம் ஏமாற்றப்பட்டு வருகிறோம் என்பதை உணர்ந்தார்கள். நவீன சிங்கப்பூரின் தந்தையாக கருதப்படும், லீ குவான் யூ, ஒரு தலைமுறை மக்களை கடுமையான சட்டத்தை மதிக்கும் விதத்தில் வளர்த்தால், பின் வரும் தலைமுறைகளும் அந்த குணங்களை எளிதில் உள்வாங்கிக் கொள்வார்கள் என்பதை நிரூபித்தார். தாராளமயத்தை வலியுறுத்தும் சக்திகள், லீ குவான் யூவின் இந்த யுக்தியை எடுத்து வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தினார்கள்.
சமூகத்தையும் நாட்டையும் சீர்குலைப்பதற்காக மக்களை நிரந்தரமாக ஒரு குழப்பமான நிலையில் வைத்திருக்க முற்பட்டனர். ஓரளவு வெற்றியும் பெற்றனர் என்றே சொல்லலாம். அதுவே, அமெரிக்காவின் மாற்றத்திற்கும் வழிவகுத்தது.
நேரம் கனிந்து வந்த நிலையில், புத்திசாலியான தொழிலதிபர் டிரம்ப் இந்த வாய்ப்பை உணர்ந்து, அந்த தீய சக்திகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க தன்னை முன்வைத்தார். மக்களும் அவர் மீது நம்பிக்கை வைத்தனர்.
இந்த மாற்றம் எப்படி இருக்கிறது என்பதை காலம்தான் சொல்லும்.
பூரி கடற்கரையில் ட்ரம்ப் ஜெயிப்பிற்கு வாழ்த்துக்கள்
Leave a comment
Upload