தொடர்கள்
அனுபவம்
ஜெர்மனி பயண அனுபவம் 2. - மலையேறலாம் வாங்க - ராம்

20241016092921180.jpeg

நூரம்பர்க் நகரம்

ஹிட்லர் போரைப் பிரகடனப் படுத்திய ஊர்.

உள்ளூர்காரர்களுக்கு ஹிட்லரை பிடிக்குமா என்ற கேள்விக்கு யாரும் தெளிவாக பதில் சொல்வதில்லை.

அதன் பின்னே இருக்கும் அரசியல் அல்லது பின்விளைவுகளாக இருக்கலாம்.

ஹிட்லர் குறித்தும் நூரம்பர்க் குறித்தும் மிக சிறப்பாகவே ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

கார்த்திக்கு தெரிந்த வரலாற்றை இங்கே.. பகிர்ந்து கொள்கிறார்......

இனி ஜெர்மனியின் உயரமான இடம் ஜுக்ஸ்பிட்சே.

அதற்கு முன்பு முகுண்டார்ஃப் என்ற இடத்தில் ஒரு குட்டி மலையேற்றம். கட்டுரை தலைப்பு வந்துருச்சா ???

கீழே அடிவாரத்திற்கு சென்றதும் மேலோ ஒரு மினி பஸ் அளவு கேபிள் கார் செல்கிறது.

விலை அதிகமில்லை ஒரு ஆளுக்கு 72 யூரோ. நம்மூர் காசுக்கு 7500 ரூபாய். சென்னையிலிருந்து டெல்லி வரை சென்று விடலாம். ஆனால் இது மலைக்கு மேலே 2600 மீட்டருக்கு மேல் செல்லும் கேபிள் பஸ் ஆச்சே...

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். உடனே அங்கிருக்கும் பெண் இந்த நிமிடம் மலையுச்சியில் நீங்கள் பார்க்கும் காட்சி இது என்று காண்பித்தார். கீழே பச்சை பசேல் என்ற புல்வெளியில் நாங்கள் நின்றிருக்க, மேலே அவர் சிசிடிவியில் காண்பித்த பனிமலை அநியாயத்திற்கு வசீகரித்தது. உடனே கேபிள் பஸ் பயணம்.

20241016095101203.jpeg

ஜுக்ஸ்பிட்சே என்ற அந்த பனிமலை மேலே உயர உயர செல்ல செல்ல வெள்ளை வெளேரென்று மேகக் கூட்டத்திற்குள் நுழைந்து விட்டது போலவே இருந்தது.

அந்தக் குளிரும் அந்தக் காட்சியும் அடேங்கப்பா......

ஊசிஊசியாக குத்திய அந்த குளிர் சத்தியமாக சுகமாக இருந்தது.

மேலும் அங்கே நடந்து மேலே சென்று சறுக்குவது போல ஒரு சின்ன பிஸாஸ்டிக் சறுக்கு வண்டி வைத்திருந்தார்கள்.

ஆசை தீர மூன்று முறை சறுக்கினோம். ஆனால் பனியில் உட்கார்ந்து வந்தாலும் 'பின்விளைவுகள்' இல்லாமல் இல்லை. எவனோ நம்மூர் இன்ஜினியர் பிடபுள்யூடியில் வேலை பார்த்திருப்பான் போல ஆங்காங்கே டம் டம் என்ற சின்ன சின்ன பள்ளத்தில் பிளாஸ்டிக் வண்டி கடக்கும் போது வலித்தது.

ஆனால் சிறுகுழந்தையாக அந்த பனிமலையில் ஒவ்வொருவரும் மாறும் போது.. சறுக்கும் போது பேரானந்தம்.

நிஜமாகவே பனிச் சறுக்கு தெரிந்தவர்கள், இது போன்ற ஆல்ப்ஸ் மலைகளின் ஆபத்தான சரிவுகளில் அனாயசமாக சறுக்கும் போது, அதிர்ஷ்டசாலிகள்.

20241016095608740.jpeg

நம்மை மாதிரி சுற்றுலா பயணிகளுக்கு இந்த ஒரு மணி நேர இரண்டு மணி நேர சாகசம் போதுமானது.

அங்கிருந்து சுவிசர்லாந்தில் வால்ட் என்ற இடத்திற்கு சென்று தங்கினோம்.

கார்த்தி ரசனை மிக்கவர். இப்படி பெரிய பெரிய ஹோட்டலாக தேடமால், ஒரு குடும்பமாக பாரம்பரியமாக நடத்தும் விடுதியை தேர்ந்தெடுத்து புக் செய்திருந்தார்.

20241016095819686.jpeg

அங்கே ரொம்ப சிம்பிளாக ஒரு குடும்பம் அந்த ஹோட்டலை நிர்வகிக்கிறது. மலையுச்சியில் ஆளரவமில்லாத இடத்தில் இருந்த அந்த ஹோட்டலே அட்டகாசம்.

அவர்கள் சுடச்சுட அந்த இரவில் பசியில் கொடுத்த ஒரு உள்ளூர் உணவு....

நன்றாக வேக வைத்த ஆப்பிளை மாஷ் செய்து சுடச் சுட பாஸ்தாவுடன் கொடுத்தார்கள். நாங்கள் இருந்த பசியில் அது விருந்து போல இருந்தது. நீங்கள் வேண்டுமானால் முயற்சித்து பார்க்கலாம். பாஸ்தா மற்றும் வேக வைத்த ஆப்பிளை கொஞ்சம் குழைவாக....

நன்றாக இல்லையென்றால் உங்களுக்கு நாக்கு சரியில்லை என்று அர்த்தம்.

அடுத்த நாள் நண்பர் அனுவிடம் கேட்டு சில டான்ஸ் மூவ்மெண்டுகள் கற்றுக் கொண்டு ஒரு ரீல் செய்யலாம் என்று அதில் கொஞ்சம் நேரம் செலவழித்ததும் மறக்க முடியாத அனுபவம்.

அடுத்ததாக சாண்டிஸ் என்ற சுவிசர்லாந்து ஆல்ப்ஸ் மலை.

அங்கேயும் ஒரு படா சைஸ் மினி பஸ் கேபிள் கார்.

இங்கே பனிச் சறுக்க இடம் இல்லை. இருந்தாலும் பள்ளியில் படித்த சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் கால் பதிக்கையில் ஒரு பூரிப்பு.

அங்கும் மலையேற்றம் இருக்கிறது. கீழேயிருந்து சுமார் 2600 மீட்டர் ஏறி வரும் அளவு பனிமலையில் வழி இருக்கிறது.

வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் எப்படியும் 12 முதல் 16 மணி நேரம் வரை கூட ஆகக் கூடும். அதற்கான தயார் நிலையில் இல்லாததால் அதையெல்லாம் முயற்சிக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை.

இருந்தாலும் அந்த பனி மலையில் கொஞ்சமாவது நடக்காவிட்டால் ஜென்மம் சாபல்யம் ஆகாதே.

அங்கு படிகள் இருந்தன. ஆனால் முழுக்க ஐஸ். அதில் இறங்கி மலையில் கால் வைத்தால் வழுக்கி விழ வாய்ப்பு இருக்கிறது. என்ன செய்ய ??

கார்த்தியிடம் சொல்லி கொஞ்சம் அதை உடைத்து தள்ள உபகரணங்கள் ஏற்பாடு செய்து நாங்களே ஐஸ்கட்டிகளை உடைத்து நகர்த்தி, அந்த படிகளில் இறங்கி சென்று பனி மலையில் நடந்த பின் தான் ஒரு திருப்தி.

இரண்டு ஆல்ப்ஸ் மலையுச்சிகளிலும் சுடச் சுட காபி குடிக்கும் வசதி இருக்கிறது. அது அந்த மைனஸ் குளிரில் ஒரு வரம்.

இறுதியாக கார்மிஷ் என்ற இடத்தில் ஆஸ்திரியாவில் தங்கினோம்.

அடுத்த நாள் 21 கி.மீ மராத்தான். கான்ஸ்டான்ஸ் என்ற ஏரியைச் சுற்றி ஒரு ஓட்டம்.

மிதமான குளிரில், மெதுவாகத்தான் ஓட முடிந்தது. இந்த மராத்தான்கள் நாம் ஜெயிப்பதற்காக இல்லை. கலந்து கொள்வதற்காக மட்டுமே..

20241016101233323.jpeg

முதல் பரிசு வாங்குவதற்கு ஓடுபவர்கள் ஒரு ரகம். அடுத்த ஜென்மத்தில் முயற்சிக்கலாம். அதையெல்லாம் கற்பனை செய்து கூட பார்க்காமல் கலந்து கொண்டு மூன்று மணி நேரத்தில் முடிப்பதே போதும் என்றால் ஒரு தனி அனுபவம். ஃபினிஷ் லைனை கடக்கும் போது வரும் கிக் அலாதியானது.

கொஞ்சம் பயிற்சி வேண்டும். இல்லையெனில் பதினெட்டாவது கிலோ மீட்டரில் கால்களில் கொறக்களி கொண்டு போகும். போனது. ஒரு ஜெர்மன் பெரியவர் பிராவோ பிராவோ என்று தண்ணீர் கொடுத்து தட்டிக் கொடுத்தார்.

இன்னும் மூன்று கிலோ மீட்டர் இந்த காலோடு ஓட முடியாது என்று நினைக்கையில் எனக்கு முன்னே ஒருவர் இருகுச்சிகளை வைத்துக் கொண்டு பக்கவாட்டில் சரிந்து சரிந்து நடந்து கொண்டிருந்தார். அவர் டீசர்ட்டின் பின்னே இப்படி எழுதியிருந்தது.

வாழ்நாள் முழுவதும் நடக்க முடியாத பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் நபர். மாற்றுத் திறனாளி.

கண்கள் கலங்கியது. மீண்டும் மெதுவாக துவங்கியது ஓட்டம்.

ஒவ்வொரு நாளிலும் நமக்காக ஒரு பாடம் ஒளிந்திருக்கிறது.!!!