கூட்டுப் புழுவாக இருந்து உருமாற்றம் அடையும் பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சியைப் போலவே புதிய வண்ணங்கள் அணிந்து சிறகடிக்கும் தன்மை வாய்ந்தவள் பெண்.
தாய் வீட்டில் செல்வச் சிறுமியாக, விளையாட்டுக் குழந்தையாக வலம் வருபவள் கணவன் வீடு சென்ற பின்னர் பொறுப்புள்ள இல்லத்தரசியாக மாறும் அதிசயம் இக்காலத்தில் மட்டுமல்ல , சங்க காலத்திலும் இருந்ததாம் .
அத்தகைய பெண் பற்றி பாடுகிறார் போதனார் என்னும் புலவர்
அந்தத் தலைவி தலைவனுடன்' உடன் போக்கு ' சென்று விட்டவள் .
தலைவியின் தாயும் ,இல்லத்தில் உள்ளவர்களும் அவளைப் பற்றி மிகுந்த கவலையோடு இருக்கிறார்கள்.
சீரும் ,சிறப்புமாய் செல்வச் செழிப்பில் வளர்ந்த பெண்ணாயிற்றே , கணவன் வீட்டில் எப்படி வாழுகிறாளோ என்ற எண்ணத்தில் அவர்கள் கலங்கினார்கள்.
அப்போது அப்பெண்ணை வளர்த்த செவிலித்தாய் , "நான் சென்று மகளைப் பார்த்து, அவள் நலம் கேட்டு வருகிறேன் " என்று புறப்பட்டு சென்றாள் .
சில நாட்கள் பயணித்து ,அவள் தலைவியும் ,தலைவனும் வாழும் ஊருக்குச் சென்று அவள் இல்லத்தை அடைகிறாள் .தான் வளர்த்த சிறு பெண் கணவன் வீட்டில் இல்லறம் நடத்தும் பாங்கைக் கண்டு மனம் பூரிக்கிறாள் .
செல்வத்தில் வளர்ந்த பெண் , வறுமை மிக்க சூழலில் இருப்பதைக் காணும் போது அவள் மனம் பதைக்கிறது .
உணவுக்கே சிரமப்படும் அந்த இல்லத்தில் ,தன்னை பொருத்திக் கொண்டு நிறைவுடன் வாழும் வகையை இவள் எப்படி கற்றுக் கொண்டாள் என்று வியப்புறுகிறாள் .
அதே மனநிலையுடன் மீண்டு வருகிறாள் .
தலைவியைப் பெற்ற தாயிடம் தன் அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறாள்.
"இந்த வீட்டில் இருந்த போது உணவுண்ண மறுக்கும் விளையாட்டு போக்குடைய சிறுபெண் அவள் .
ஒளிவீசும் பொன்கலத்தில் , செய்த சுவை மிக்க பாலுணவை , கூந்தல் நரைத்த செவிலியர் தேன் சேர்த்து கலந்து வைப்பர். அந்த பொற்கிண்ணத்தை ஒரு கையில் ஏந்திக் கொண்டு , பூ போன்ற மென்மையான நுனி கொணட சிறுகோலை ஒங்கி , "இதை நீ உண்க " என்று அடித்தனர் .
தெளிந்த நீரில் விளைந்த வெண்முத்துப் பரல்களைக் கொண்ட பொற்சிலம்பு அணிந்த கால்கள் தாவி ஓட செவிலியர் அவளை விரட்டிக் கொண்டு செல்வர்.
முற்றமெங்கும் அவளது சிலம்பின் ஒலி எழும்ப அவள் ஓடுகையில் , பின் தொடர முடியாத செவிலியர் தவிக்க, முற்றத்துப் பந்தலின் கீழ் நின்று ,'நான் உண்ண மாட்டேன் "என்று குரல் கொடுத்து உணவை மறுக்கும் விளையாட்டுப் பெண்ணாக இருந்தவள் நம் மகள்.
ஆனால் ,இப்போதோ தான் மணந்துக் கொண்ட கணவனின் வறுமையான சூழலை புரிந்துக் கொண்டு ,தன் தந்தை வீட்டில் இருக்கும் வளமான உணவு வகைகளை நினைவில் கொள்ளாதவளாகி இருக்கிறாள் .
ஓடும் நீரில் இருக்கும் நுண்ணிய மணல் போல அவள் இடைவெளி விட்டு உணவு அருந்துகிறாள் .ஒருபொழுது உண்டும் மறு பொழுது உண்ணாமலும் இருக்கும் வலிமையைக் கொண்டு இருக்கிறாள்.
நம் வீட்டில் உணவுண்ணாமல் நம்மை அலைக்கழித்த அந்த விளையாட்டுப் பெண் இப்படி ஓர் அறிவையும் ,ஒழுக்கத்தையும் எப்படி கற்றுக் கொண்டாள்?" என்று வியப்புடன் கூறுகிறாள்
அந்த சங்ககால மங்கையின் மாண்பினைப் பாடும் அழகான பாடல் இதுவே
பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்தி
புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றென
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே
(நற்றிணை 110)
எக்காலத்திலும் பெண்கள் பெண்களே .
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (குறள் )
என்னும் குறள் வாழும் இத்தகைய பெண்களால் இம்மண்ணுக்குப் பெருமை . அவர்களைப் பாடுவதால் தமிழுக்குப் பெருமை
-தொடரும்
Leave a comment
Upload