நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப், கமலா ஹாரிஸை வீழ்த்தி வெற்றிவாகை சூடியிருக்கிறார்.
இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவியிருந்திருந்தாலும் கமலா வெற்றி அடையவே சிறிது கூடுதல் வாய்ப்பு இருந்த நிலையில் எலான் மஸ்க், ட்ரம்புடன் பிரச்சாரம் மேற்கொண்டதன் முதல், ட்ரம்ப்புக்காக மில்லியன் கணக்கில் டாலர்களை இறைத்தது வரை களத்தில் புகுந்து விளையாடியதில் ட்ரம்ப் வெற்றிப்பெற்று விட்டார்.
எலான் மஸ்க் தான் எங்கள் குல தெய்வம் என்ற அளவுக்கு ட்ரம்ப்பின் ஆதரவாளர்களே எலானுக்காக முழக்கம் இட்டு வருகிறார்கள்.
எலான்மஸ்க் அப்படி என்ன ட்ரம்புடன் அவ்வளவு நெருக்கம் என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
நான்கு வருடங்களுக்கு முன்னர் வரை எலான் மஸ்க், ஜோ பிடனுக்கு ஆதரவாளர். அதற்கு முன்பான தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக நின்ற ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவித்தவர்.
சொல்லப்போனால் 2017 ல் சுற்றுச்சூழல் மற்றும் குடியேறிகளுக்கான ட்ரம்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தவர் தான் எலான்.
எலான் மஸ்க் 2022ல் டிவிட்டரை வாங்கும் முடிவிலிருந்து அப்போது பின்வாங்கிய நேரத்தில் ட்ரம்ப் “ எலான் ஒரு முட்டாள். என்னை 2016 தேர்தலில் ஆதரிப்பேன் என்று சொல்லி ஏமாத்திய பொய்யன்” என மோசமாக பேச, பதிலுக்கு எலான் “ ட்ரம்ப் ஓய்வு எடுக்கும் நேரம் வந்தாச்சு. பேசாம வீட்டுக்கு போய் ஓய்வெடுங்க !” என ட்ரம்ப்பை அசிங்கப்படுத்தினார்.
அப்படி அடித்துக்கொண்டவர்கள் இப்போது இப்படி சேர்ந்துக்கொண்டார்களே!
அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா! என சொன்னாலும் இதில் ஒரு முக்கியமான விஷயம் ட்ரம்ப் தான் அரசியல்வாதி. எலான் இல்லை.. அவர் ஒரு திறமையான தொழிலதிபர்..
உலகிலேயே நம்பர் 1 பணக்காரர். அரசியல்வாதி அரசியல் செய்யலாம். பெரும் செல்வந்தரான தொழிலதிபர்கள் அரசியல் செய்வது மக்களுக்கு சரியானதா? இல்லை ஆபத்தானதா? என கணிப்பது கடினம்.
மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிவிட்டு தான் மறு வேலை என கங்கணம் கட்டிக்கொண்டு கடும் உழைப்போடு பில்லியன் டாலர்களை செலவழித்துக்கொண்டு இருக்கிறார் எலான்.
அக்டோபர் 13 அன்று ஸ்பேஸ்ஷிப் ராக்கெட்டை விண்வெளி வரை வழியனுப்பிவிட்டு திரும்ப வந்த சூப்பர்ஹெவி முதல் நிலை பூஸ்டர், வானத்தில் எறிந்த பந்து திரும்பவும் கையில் விழுந்தது போல், லாவகமாக ஏவுகணை கோபுரத்தின் கைகளில் மீண்டும் அழகாக வந்தமர்ந்த காட்சியை கண்டு உலகமே அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனது.
சொன்னது போலவே இந்த மனிதன் ஒரு நாள் நிச்சயமாக செவ்வாய் கிரகத்து நிலத்தை பட்டா போட்டுவிடுவார் என அமெரிக்கர்கள் மத்தியில் எலானுடைய செல்வாக்கு உயர்ந்து,அவர் ஆதரிக்கும் ட்ரம்ப்புக்கு கூடுதல் ஓட்டு கிடைக்க சாதகமானது.
எலான் மஸ்க் என்றால் சும்மா இல்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்தது. தொழில் முறையில் வெற்றிகரமாக வலம் வரும் எலான் , தனிப்பட்ட வாழ்க்கையில்
திருமணம் என்கிற பந்தத்தில் நம்பிக்கை இல்லாமல், அவரின் காதல் வாழ்க்கையில் முன்னாள் மனைவிகள் மூவர், ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹெர்ட், கனடியன் பாடகி கிரிம்ஸ் போன்ற ஏகப்பட்ட தோழிகள் வரிசையாக தொடர மனிதர்.. "வாழ்கிறார்".
எலான் இந்த தேர்தலுக்காக ட்ரம்ப் கட்சிக்கு மொத்தம் $ 132 மில்லியன் நன்கொடை வழங்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தனது X தளத்தில் தொடர்ந்து ட்ரம்புக்கு ஆதரவாக கடும் பிரச்சாரம் செய்து வந்தார்.
அந்த மாதிரி பிரச்சாரத்துக்கு 24 மில்லியன் டாலர் செலவாகும். அதை கூட எலான் இலவசமாக செய்தார். அதுமட்டுமில்லாமல் தனது X தளத்தில் ஜனநாயகக்கட்சியின் அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸின் சித்தரிக்கப்பட்ட வீடியோ ஒன்றை விளம்பரப்படுத்தினார்.
அதில் கமலா பேசுவது போல போலி குரலில் "நான்தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டேன், ஏனென்றால் நான் அமெரிக்காவின் பன்முகத்தன்மைக்குஎடுத்துக்காட்டாக விளங்குகிறேன்." என பேசும் வீடியோவை எலான் பகிர்ந்து "இதுஆச்சரியமாக இருக்கிறது" என்ற வாசகத்துடன் சிரிக்கும் ஈமோஜி ஒன்றைப்போட்டு அந்த வீடியோவை ஜூலை மாதம் மறுபதிவு செய்தார். வேடிக்கைக்காக போடப்பட்ட அந்த வீடியோ 136 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
சட்டவிரோத குடியேறிகளை பிடன் அரசு ஊக்குவித்து வருவதற்கான காரணமே அவர்களுக்கு போலி வாக்காளர் அட்டைகள் கொடுத்து தேர்தலில் ஓட்டு போட வைத்து, ஜனநாயககட்சியை வெற்றிப்பெற வைக்கப்போகிறார்கள் என்கிற செய்தி X தளத்தின் மூலம் ஊதி பெருசாக்கப்பட்டது.
அக்டோபரில் எலான் மஸ்க்கே அந்த செய்தியை பகிர்ந்து “இது தொடர்ந்தால் அமெரிக்காவில் ஜனநாயக அரசு தான் நிரந்தரமாக இருக்கும்.” என்றார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் “ சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்கர்களின் வளர்ப்பு நாய்,பூனைகளை பிடித்து தின்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டை முன் வைத்தபோது , எலான் மஸ்க், ஒரு பூனை தனது கையில் “ கமலா என்னை வெறுக்கிறார்” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை பிடித்துக்கொண்டு பாவமாக பார்ப்பது போல ஒரு மீமை பகிர்ந்து அமெரிக்கர்களின் உள்ளங்களை கலங்கடித்தார்.
இப்படி எலான், ட்ரம்பை தாங்கிப்பிடித்து தேர்தலில் ட்ரம்ப்பை வெற்றி அடையவும் வைத்துவிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே ட்ரம்ப் தான் வெற்றியடைந்தால் எலான் மஸ்க்கை தலைவராக கொண்டு அமெரிக்க அரசின் நிதி மற்றும் செயல்திறன் தணிக்கை குழு ஒன்றை ஏற்படுத்துவேன் என்று சொன்னார். சொன்னது போலவே தற்போது குழு உண்டாக்கியுள்ளார்.
ட்ரம்ப் ஆட்சியை பிடித்ததில் எலான் மஸ்க்குக்கு ஆதாயம் அதிகம் தான். எலானின் ஸ்பேஸ்எக்ஸ்நிறுவனத்திற்கு போட்டியாக ஜெஃப் பெசோஸால் நடத்தப்படும் ப்ளூ ஆரிஜின் போன்ற பிறநிறுவனங்கள் களத்தில் உள்ளன. இவற்றுடன் போட்டிப்போட்டு எளிதாக அரசிடமிருந்து ஒப்பந்தங்கள் பெற எலானுக்கே வாய்ப்புகள் அதிகம். டொனால்ட் டிரம்ப் புதைபடிவ எரிபொருளுக்கு ஆதரவாக இருந்தாலும் மின்சார காரான டெஸ்லா விவகாரங்களில் எலானுக்கு சாதகமாகவே செயல்படுவார் என நம்பப்படுகிறது.
மேலும் தொழிலாளர் உரிமைகள் மற்றும்தொழிலாளர் பாதுகாப்புகள் குறித்தான சில நீதிமன்ற வழக்குகளிலிருந்து எலான் விடுபடுவதுடன், எலான் விருப்பப்படி “தேசிய தொழிலாளர் நலன் வாரியம்”கலைந்து போகும் அபாயமும் உள்ளது.
டிரம்ப் நிர்வாகம் எலானுக்கு உண்மையிலேயே பலனளிக்கும் விதத்தில் செயல்படும் என ஆரூடம் கூறுகிறார்கள்.
இருந்தாலும், கூடவே நிழல் போல பயணித்திருந்தாலும் சிறிது காலத்திலேயே அந்த நபரிடம் வம்பு வளர்த்து அவரை ஓட வைக்கும் குணம் ட்ரம்ப்பிடம் உண்டு. எலானோ, இரு வருடங்கள் முன்பு வரை ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்து வந்தவர்தான். இப்படி ஏழாம் பொருத்தம் உள்ளவர்கள் ஒன்றாக இணைந்தது மட்டுமில்லாமல், புதிய அரசில் பொறுப்பு மிக்க பதவியை ஏற்கிறார் எலான் மஸ்க்.
ட்ரம்ப்புக்கு மிக நெருக்கமான அரசியல் உள்வட்ட குழுவில் அதிகாரப்பூர்வமாக எலான் இருப்பதும், அதன் மூலம் வருங்காலங்களில் உலக தலைவர்களோடான பேச்சு வார்த்தைகளின் போதும் எலான் அதில் பங்கேற்கவும், அரசின் அதீத முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கும் குழுவில் முக்கியஸ்தராகவும் விளங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையெல்லாம் நோக்கும் போது இப்போதைக்கு எலான் ட்ரம்ப்பை ஆதரிப்பது போல தோன்றினாலும், எதிர்காலத்தில் தானே அமெரிக்க அதிபராக வருவதற்கான திட்டங்கள் எலானிடம் இருக்கலாம்.
பூமியிலிருந்து நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் போக்குவரத்து ஏற்படுத்தி மனிதர்களை அங்கே குடியமர்த்த போகும் எலான் மஸ்க்குக்கு அமெரிக்க அதிபர் ஆவதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.
விண்வெளியை ஆள பிறந்தவர்க்கு அமெரிக்கா எம்மாத்திரம்?!..
Leave a comment
Upload