தொடர்கள்
கவர் ஸ்டோரி
விஜய் போய் சிவா வருது டும் டும் டும் டும் .... லைட் பாய்

20241015215121187.jpeg

ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் 500 கோடி வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரியல் ஆர்மி மேன் தமிழர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அமரன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எல்லோரையும் ஏகத்துக்கு விமர்சனம் செய்யும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பரந்த மனத்துடன் பாராட்டியிருக்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்தவுடன் நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஆகியோரையும் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்புகளும் வராமல் இல்லை.

அமரன் திரைப்படத்தில் தேர்தலின் போது நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் சி ஆர் பி எஃப் வீரர்கள் படுகொலை செய்யப்படுவது வேதனையும் அதிர்ச்சியும் அளிப்பதாக படக்குழுவுக்கு தமிழ்நாடு முன்னாள் சிஆர்பிஎப் நலன் அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது பற்றியெல்லாம் எந்த கருத்தும் சொல்லாமல் சிவகார்த்திகேயன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் இப்போது பேசும் பொருள் சினிமா வேண்டாம் என்று அரசியலுக்குப் போய்விட்ட விஜய் இடத்தை பிடிப்பது தான் சிவகார்த்திகேயன் வியூகம் என்கிறார்கள்.

சிவகார்த்திகேயனைப் பற்றியும் சர்ச்சை வந்தது பிரபல இசையமைப்பாளர் மனைவியுடன் அவரை தொடர்பு படுத்தி கிசுகிசுக்கள் வந்த போது அதைப்பற்றி கருத்துக்கள் ஏதும் சொல்லாமல் கடந்து போனார் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சிவகார்த்திகேயன்.

விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பாரா என்ற கேள்விக்கு தமிழ் சினிமா உலகத்தில் விசாரித்தபோது யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாது.

சிவாஜி இடத்தை யார் பிடித்தார்கள். தயாரிப்பாளர்களின் தங்க சுரங்கமான எம் ஜி ஆர் இடத்தை யார் நிரப்பினார்கள்.

இளையராஜாவுக்காக படங்கள் ஓடிய காலம் எல்லாம் உண்டு.

நடிகர்களைக் கடந்து இளையராஜாவுக்கு மிகப்பெரிய கட்டவுட் வைத்து பத்திரிகைகளில் இசைஞானியின் இளையராஜா படம் என்று விளம்பரம் செய்த காலமெல்லாம் உண்டு.

பயணங்கள் முடிவதில்லை மோகனுக்காக அல்லது சிறந்த திரைக்கதைக்காக அல்லது சிறந்த இசைக்காக அல்லது இவை மூன்றும் ரசிகர்களுக்கு பிடித்து போய் ஆனந்த் தியேட்டரில் அந்தப் படம் 100 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தது.

இப்போது ரஜினி படமே 25 நாட்கள் கடந்து போவதே அதிசயமாக இருக்கிறது.

இப்போதெல்லாம் எந்த நடிகரின் திரைப்படம் 50 நாட்கள் 100 நாட்கள் என்று திரையிடப்படுகிறது.

இப்போது திரையரங்குகள் அதிகமாகிவிட்டது இது தவிர ஓ டி டி தளம் என்று திரைப்படங்கள் அதிக காட்சிகள் வெளியிடப்படுவதால் பத்து நாள் 15 நாட்களில் அந்தப் படங்களின் ஆயுள் முடிந்து விடுகிறது.

அஜித் தானுண்டு தன் சினிமா உண்டு என்று எந்த சர்ச்சையிலும் கலந்து கொள்ளாமல் இருப்பவர். தனுஷ் சிறந்த நடிகர் என்றாலும் தமிழ் சினிமாவில் அவருக்கென்று இன்னொரு முகம் உண்டு அது அவருக்கு எதிரான எதிர் விளைவுகளை பலமுறை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேசமயம் சிவகார்த்திகேயன் பற்றி விஜய் மிக ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது குழந்தைகளுக்கு இவரை ரொம்பவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டார்.

அவர் இந்த கருத்து சொல்லி பத்து ஆண்டுகளுக்கு ஆகிவிட்டது. இப்போது அந்த குழந்தைகள் இளைஞர்களாக இருப்பார்கள் இப்போதும் அவர்களுக்கும் சிவகார்த்திகேயனை பிடித்து இருக்கலாம்.

கடைசியாக வந்த விஜயின் கோட் படத்தில் ஒரு வசனம் வரும். உங்களுக்கு ஏதோ முக்கியமான வேலையா போறீங்க. நான் இங்க பாத்துக்கறேன் என்பார் சிவா. அது தான் வெங்கட் பிரபு வைத்த குறியீடு.

இனி சினிமாவுக்கு விஜய்க்கு பதிலாக, சிவகார்த்திகேயன் தான் என்ற குறியீடு. அது விஜய்க்கு தெரியாமலா வைத்திருப்பார்கள் ??

விஜய் இடத்தை சிவா பிடிப்பாரா ? பிடித்து விடுவார் போலத்தான் பேசுகிறார்கள். இருந்தாலும், இந்த கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் காத்திருப்போம்.

பி.கு:

அட்டைப்படத்தில் சாய்பல்லவிக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம். இப்படி கேட்க தோணலாம். எடிட்டோரியலில் கண்ணாழ்வார் ஒரே அடம். சாய் பல்லவி படம் தான் போட வேண்டும் என்று. ஹூம் என்ன காரணம் சொல்வது ??. கடைசியாக ரிலீசான படத்தில் சிவாவுடன் நடித்தது சாய்பல்லவி தானே ?? அதான்......