தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 35 "தாரகை தந்த பல்பு" - மோகன் ஜி

20241015200834356.jpeg

வங்கி மேலாளர்கள் கண்டிப்பாக ஒரு முறையேனும் கிராமப்புறக்கிளையில் பணியாற்றினால்தான் மேற்கொண்டு பதவி உயர்வு என்று ஒரு விதியை நான் பணிபுரிந்த வங்கி பல ஆண்டுகளுக்கு முன் விதித்திருந்தது.
எனக்கும் கிராமப்புறங்களில் வேலை செய்யும் ஆர்வம் இருந்ததால் உடனே ‘உள்ளேன் ஐயா’ என்று கையைத் தூக்கி விட்டேன். ஒரு பெரிய கிளையை நிர்வகித்து வந்தவன், ஆந்திரா- ஒரிசா எல்லையில் இருந்த ஒரு கிளைக்கு மாற்றலானேன்.

அதுவோ கிராமத்திலும் கிராமம்… படு கிராமம்! அந்த கிளையின் அனுபவங்கள் அலாதியானவை. முப்பது ஆண்டுகள் கடந்தும் நினைக்க இனிப்பவை.

எந்தப் பட்டிணம் போனால் என்ன? எந்த கிராமத்துக்கு போனால் தானென்ன ?நமக்கான பல்புகள் காத்திருக்கத் தானே செய்யும்?

என் கிளையில் ராஜாராவ் என்ற கடைநிலை ஊழியர் இருந்தார். மிகவும் அப்பாவி. பணிவு மிக்கவர் தான். ஆனாலும் சக ஊழியர்கள் அவரைக் கேலி செய்தபடி இருந்ததைப் பார்த்தேன். ‘அப்படி செய்வது தவறல்லவா?’ என்றேன்.
“சார்! இப்பதானே வந்திருக்கிறீர்கள்? நம்மாளு செய்யும் வேலையைப் பார்த்து, ஆளை விட்டால் போதும் என்று மாற்றல் கேட்பீர்கள்” என்றார்.

கம்ப்யூட்டர் வங்கிக் கிளைகளில் புழக்கத்தில் வராத காலம். வங்கிக் கணக்குகளை லெட்ஜர்கள் பேரேடுகள் போன்றவற்றில் தான் பதிவு செய்து வந்தோம்.
நான் ராஜா ராவிடம் நகைக் கடன் லெட்ஜரைக் கொண்டு வருமாறு கேட்டேன். சற்று நேரத்தில் கைக்கொள்ளாமல் 15 லெட்ஜர்களை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு வந்து நின்றார்.
‘எதற்கு இத்தனை?’ என்று புரியாமல் கேட்டேன்.
“ உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள் சார்! என்றார் அசட்டு சிரிப்புடன். கேஷியர் இடைமறித்தார்.

“மேனேஜர் சார்! நான் நேற்று உங்களுக்கு சொல்லவில்லையா? இந்த ஆளுக்கு எதுவும் தெரியாது. அவர் மனதில் எந்த லெட்ஜர் பெயரும் தங்காது. அதனால் உதடு தேய்வதற்கு உள்ளங்கால் தேயலாமே என்று அவரவர்க்கு தேவையானதை நாங்களே எடுத்துக் கொள்வோம் என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
கேஷியர் மேலும் தொடர்ந்தார். ”ராஜா ராவ் தங்கி இருக்கும் ரூமுக்குப் போனால், சுவரே தெரியாமல் சினிமா நடிகைகளின் புகைப்படங்களாக ஒட்டி வைத்திருப்பார். எந்த நடிகைக்கு எப்போ கல்யாணம் ஆச்சு?எத்தனை குழந்தைகள்? அவர்களின் முதல் படம் என்ன? தற்போது நடிக்கும் படம் என்ன? என்ற நுணுக்கமான விவரங்களெல்லாம் ராஜாராவுக்கு அத்துப்படி! ஆனால் எந்த லெட்ஜர் எது என்றுதான் அவருக்குத் தெரியாது!விசித்திரமான ஆளு சார் “ என்று மூச்சிரைக்க சொல்லி முடித்தார்.

ராஜா ராவிடம் நான் ஒரு வாரம் மல்லாடிய பின் , அவருடைய நடிகையர் அபிமானம் நினைவுக்கு வந்தது. அடிக்கடி தேவைப்படும் இருபதுலெட்ஜர்களைப் பட்டியலிட்டேன். ஒவ்வொரு லெட்ஜர் பெயரின் எதிரேயும் ஒரு நடிகையின் பெயரை எழுதி வைத்தேன்.

“ இந்த டே புக் பாத்தியா ராஜா ராவ்? இதுதான் சாவித்திரி. இந்தப் பச்சை லெட்ஜர் இருக்கே.. இது ஜமுனா. இந்த விவசாய கடன் லெட்ஜர் தான் பத்மினி” என்று ஒவ்வொன்றாக அவருக்கு அறிமுகமும் செய்து வைத்தேன்.
ராஜா ராவின் கண்களில் பளீரிட்ட ஒளியைப் பார்க்க வேண்டுமே!
‘அலாகே சார்! அலாகே சார்!’ என்று நான் சொன்னதை உள்வாங்கிக் கொண்டார்.

அதற்குப்பின், நான் கேட்ட சினிமா தாரகையை பூப்போல தூக்கிக் கொண்டு வருவார். அதில் எனக்கென்ன பிரச்சனையென்றால், ஒவ்வொரு முறையும் அந்தப் பட்டியலில் எந்த லெட்ஜருக்கு எந்த நடிகை என்று சரிபார்த்துக் கேட்க வேண்டி இருந்தது! மற்ற ஊழியர்களும் அந்தப் பட்டியலை பிரதி எடுத்து வைத்துக்கொண்டு ராஜா ராவிடம் கேட்பார்கள். சமயத்தில் நாம் வங்கிக் கிளையில் இருக்கிறோமா இல்லை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் வரும்! அனைவரிடமும் ராஜா ராவைக் கேட்கும்போது காதோடு காதாக மெல்ல கேட்குமாறு சொன்னேன்.

சில நாட்களில், நான் ஒரு பெரிய வாடிக்கையாளரை பார்க்கப் போயிருந்தபோது, வங்கியின் பிராந்திய மேலதிகாரி கிளைக்கு வந்திருக்கிறார். வந்து டெபாசிட் எவ்வளவு? லாபம் எவ்வளவு? என்று எல்லாம் பார்த்துக் குறித்துக் கொண்டு சென்று விட்டார் என்று நான் திரும்பியவுடன் சொன்னார்கள்.

அதற்கு அடுத்த வாரம் காலாண்டு கணக்கு எல்லாம் முடித்திருந்தேன். மாலையில் பிராந்திய மேலதிகாரியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
“ஏமி மோகன் காரு? உங்க ஜெயமாலினி என்ன சொல்றாங்க?” என்று கேட்டார்.

“என்ன கேக்குறீங்க சார்? புரியவில்லையே!” என்றேன்.

“ அதான் மோகன்! உங்க கிளையின் டெபாசிட், மொத்த கடன்,லாபம் பற்றிய விவரம் கேட்டேன்” என்றார்

“ஆஹா ! கிளையின் மொத்த விபரம் பொதிந்த ஜெனரல் லெட்ஜர் பேலன்ஸ் (GLB) எனும் பேரேட்டிற்கு ஜெயமாலினி என்று பெயர் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது.
‘இவருக்கு எப்படி ஜெயமாலினி பற்றித் தெரியும்?’ என்று குழம்பினேன். அவர் கேட்ட கணக்கு விவரங்களை சொல்லிவிட்டு, ஏன் ஜெயமாலினி என்ற பெயர் வந்தது என்பதற்கு, ராஜாராவிடம் மேற்கொண்ட உபாயத்தை விளக்க ஆரம்பித்தேன் .

மேலதிகாரி இடைமறித்தார். “எனக்கு தெரியும் மோகன். அன்று உங்கள் கிளைக்கு வந்தபோது ஜி எல் பி பேரேட்டைக் கேட்டேன் உங்கள் ராஜா ராவோ கேஷியரிடம் ‘ஜெயமாலினியைத் தானே சார் கேட்கிறார்?’என்று கேட்டதும் காதில் விழுந்தது. கிளம்பும்போது கேஷியரிடம் ‘என்னய்யா இது? ஜெயமாலினி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டபோது, அவர்தான் எனக்கு உங்கள் நடிகைப் பட்டியலைப் பற்றி சொன்னார். ராஜாராவுக்கு நடிகைகளின் பெயரில் ஆர்வம் சரி! நீங்களானால் இருபது நடிகைகளின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து, பெயர் சூட்டிய ரசனையை நான் ரசிக்கிறேன்!” என்று வாய்விட்டு சிரித்தார்.
அடடா! இவரிடம் விளக்கிய விவரத்தை கேஷியர் என்னிடம் சொல்லியிருந்தால் சுதாரித்துக் கொண்டு, பல்பு வாங்கி இருக்க மாட்டேனே! என் ரசனையையும் ரசிக்கிறாராமே? சரிதான்!

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு என் கிளை நிலவரத்தின் விவரங்களை கேட்கும் போதெல்லாம், ‘ஜெயமாலினி மேடம் என்ன சொல்றாங்க?’ என்பார்.

பிறகு ராஜாராவும் தன் வேலையில் நன்கு தேறிவிட்டார். அவருடைய அபிமான தாரகைகளும் அவர் வீட்டுச் சுவருக்கே மீண்டுவிட்டார்கள்.

நல்ல கூத்து தான் போங்க!