தொடர்கள்
கதை
இலவசம்  அது  பரவசம் – சிறுகதை – பா. அய்யாசாமி

20241015081901978.jpeg


ஏண்ணா ! கடைத் தெருவிற்குப் போனோமா, வந்தோமான்னு இல்லாமல் இத்தனை நாழி் எங்கேபோயிருந்தேள் ? யாராவது சிநேகிதனைப் பார்த்தேளா ?! இங்கே நான் கவலைப் படுவேன் எனத் தெரியாதா ? எனஊடினாள் ருக்கு.

என்ன கவலை உனக்கு ? நான் என்ன குழந்தையா காணமல்போறதுக்கு ? என பதில் உரைத்தார் அய்யாசாமி. எனக்கு அப்படிதானே ! எனக் கூறி அதிசயமாக வெட்கப்பட்டாள் ருக்கு.

பராவியில்லை, நல்ல மூடில் இருக்கா, சரியானநேரத்தில்தான் சினிமா டிக்கெட்டும் கொடுத்திருக்கான்என்றார் அய்யாசாமி.

என்ன சினிமா ? என்ன டிக்கெட் என கேட்டார் ருக்கு.

நம்ம ஸ்டோரிலே மளிகை பொருட்கள் வாங்கி வெளியேவந்ததும் ஒருவர் வந்து, ரூபாய் மூவாயிரத்திற்கு மேல்பொருட்கள் வாங்கியதால் கிப்டாக இரண்டு சினிமாடிக்கெட் கொடுத்தார்கள் என அய்யாசாமி சொன்னதும்,

அப்படியா ? என்ன படத்திற்கு என்ற ருக்குவிடம்..

"வந்தா ராஜாவாத்தான் வருவேன்" படம் என்றார்.

கூட்டமே இல்லையென கொடுத்திருக்கார் என்ற ருக்குவிடம்.. நம்ம ஊரு குழந்தையடி அது. என்ன செய்ய அதுக்கு நேரம் சரியில்லை, ஒரு நாள் பாரு பெரியஅளவிலே பேசப்படும் என சிம்பு மீது கரிசனம் காட்டினார்.


உங்கள் ஊர் பாசத்திற்கு ஒரு அளவே இல்லை போங்கோ என மெச்சியவள் எந்த ஷோ ? கேட்டாள் ருக்கு.

இரண்டாம் ஆட்டம், இரவு ஒன்பது மணிக்கு போனால்போதும் என்றார்.

இலவசமாக கிடைத்தது என்பதற்காக தூக்கத்தைகெடுத்துண்டு யாராவது போவாளா ? போங்கோ நான்வரலை என்றாள் ருக்கு.

நாம இப்படி போகாமல்இருந்து விடுவோம் என நினைத்துதான் அவன் அப்படி ஒரு ஆஃபரை வச்சுஇருக்கான் என்றார்.

அது என்ன ஆஃப்ர் ?


இன்றைய ஷோக்கு வந்தவர்களுக்கெல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு கூப்பன் தருவாளாம், அதை வைத்து நாம திருப்பிஅந்த ஸ்டோரில் சாமான் வாங்கிக்கலாம் என ஆஃபரையும் தெரிவித்தார்.

இதெல்லாம் அந்த கடைக்காரர் உங்ககிட்டே சொன்னாரா? என கேட்ட ருக்குவை பார்த்து..

ஆஹா ஆரம்பிச்சுட்டா, இல்லை, வாசலில் இரண்டு புராடெக்ட் மார்கெட்டிங்பணியாளர்கள் நின்றுக்கொண்டு இதைக் கொடுத்தனர்என்றார் அய்யாசாமி.

அப்போ நாம அவசியம் இந்த சினிமாவிற்குப் போகிறோம் எனத் தீர்மானமாக சொன்னாள் ருக்கு.

யாரிடமோ தான் சினிமாவிற்கு இரவுப் போகப்போவதைப்பற்றி ருக்கு சொல்லிக் கொண்டிருந்தாள்.ரம்யாகிருஷணனைப் பார்க்கும் ஆவலில் இருந்தார்அய்யாசாமி

படம் ஆரம்பித்து ஒரு மணி நேரமாகியிருக்கும், அரங்கில்அய்யாசாமியின் போன் ஒலிக்க எடுத்துப் பேசியவர்,

என்னது ? அப்படியா ?! இதோ வந்துட்டோம் என்றவர் ருக்குவிடம் தகவலைச் சொல்ல,

அதற்குள்ளே பிடிச்சுட்டாளா ?! தமிழ்நாடு போலீஸ்னாசும்மாவா ? என்றபடி வாங்கோ ஆத்திற்குப் போகலாம் எனகிளம்பினாள்.

அய்யாசாமிக்கு ரம்யா கிருஷ்ணனை பாதியில் விட்டுப் போகமனமில்லை இருந்தாலும் கிளம்பினார்.

வீட்டு வாசலில் போலீஸ், அவர்களை சுற்றித் தெருவாசிகள்என கூட்டம் கூடி இருக்க பதட்டமடைந்தார் அய்யாசாமி.

உங்கள் தகவலுக்கு நன்றி மேடம், ரொம்ப நாளா இந்தஇரண்டு பேரும் இதை செய்துகிட்டு இருக்காங்க, யாரும்முன் வந்து புகார் சொல்றதில்லை, திருட்டு நடந்து முடிந்தபின் வருத்தப்படுவாங்க, உங்கள் தகவலாளேதான் பிடிக்கநாங்களும் திட்டமிட்டோம் என்ற ஆய்வாளரிடம், அது எங்கள் கடமை சார் என்றாள் ருக்கு.

திருட்டு நடந்தால் இழப்பது பொருள் மட்டுமல்ல, அடையாளமும் மாறிவிடும், திருட்டு வீடு என்பார்கள், அதனால்தான் முன்னேயே தகவல் சொன்னேன்.
சரிங்க மேடம், ரொம்ப தேங்ஸ் நேரமாகிட்டு, நாங்கள்கிளம்புகிறோம், இன்னும் நாங்கள் சாப்பிடவே இல்லைஎன்றபடி கிளம்பினார் போலீஸார் இரண்டு திருடர்களுடன்.

அப்படியா, இருங்கோ சாப்பிட்டு போகலாம், உப்புமாதயார் செய்கிறேன் என்றதும், வேகவேகமாக மறுத்த போலிசார் உடனே கிளம்பினர்.

ருக்கு, உப்புமா என்றதும், தலை தெறிக்க ஏன் ஓடுகிறார்கள் என்ற அய்யாசாமியிடம் நாம காசு கொடுத்தால் அவர்கள் பொருள் தருகிறார்கள், இலவசமா ஏதோ ஒன்று நமக்கு தருகிறார்கள் என்றால் அவர்கள் அதை விடப் பெரிதாக ஒன்றை நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள் என்று தானே அர்த்தம். இது புரியாமல்படத்திற்கு நாக்கை தொங்கப் போட்டுண்டு போனால்இப்படித்தான் மொத்தமும் திருடு போகும் நிலை வரும் என்றாள் ருக்கு.

அப்போ போலீஸுக்கு தகவல் சொல்லிட்டுதான்சினிமாவிற்கு வந்தீயா ?! என்கிட்டே ஏன் சொல்லலை?

சொல்லியிருந்தால், நீங்க படத்திற்கே போக வேண்டாம்என சொல்லி இருப்பீர்கள், அப்புறம் அவர்களை எப்போ பிடிக்கிறது ? அதான் சொல்லலை என்றாள் ருக்கு.

ருக்கு உன் சமர்த்து யாருக்கு வரும் ? என மெச்சினார்.