சில மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்குப் போன போது அங்கே வந்த பெரியவர் ஒருவர் "அண்ணே கிழிஞ்சு போன நோட்டு இருக்கா என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம் மற்றும் அதிசயம் எல்லோரும் கிழியாத ரூபாய் நோட்டு தானே கேட்பார்கள். இவர் கிழிந்து போன ரூபாய் நோட்டு கேட்கிறாரே என்று ஆச்சரியத்துடன் கேட்டபோது கடைக்காரர் நமது வாடிக்கையாளர்கள் சில சமயம் கிழிந்த நோட்டை தந்து விடுவார்கள். நமது ரெகுலர் கஸ்டமர் என்பதால் நாங்கள் அவர்களிடம் வாதாடாமல் அதை வாங்கிக் கொள்வோம். அதேசமயம் நாம் ஏதாவது கிழிந்த நோட்டை தந்தால் அண்ணே இந்த நோட்டு வேற நோட்டு தாருங்கள் என்று கேட்டு வாங்கி கொள்வார்கள் என்று அவர் விளக்கம் சொல்ல, நான் உடனே அந்த கிழிந்த நோட்டுகளை கேட்டவரிடம் "இந்த நோட்டை வாங்கி என்ன செய்வீர்கள் ? என்று கேட்டேன். 100 ரூபாய் என்றால் 90 ரூபாய் தருவேன் இப்படி கிழிந்து போன ரூபாய் நோட்டுகளை சேகரித்து வங்கியில் கொண்டு போய் கொடுத்து முழு பணத்தையும் வாங்கிக்கொள்வேன். ஆயிரம் ரூபாய் என்றால் நான் 900 ரூபாய் தருவேன் எனக்கு 100 ரூபாய் கிடைக்கும். கடைகள், வீடுகள், கோயில்களில் போய் இந்த கிழிந்த நோட்டுகளை சேகரிப்பது என் வேலை என் தொழில் என்றவர், இதேபோல் நிறைய பேர் செய்கிறார்கள் என்றார். கோயில்களில் கூடவா கிழிந்த நோட்டு இருக்கும் என்று நான் கேட்டபோது பக்தர்கள் கிழிந்த நோட்டை சில சமயம் உண்டியல் போட்டுவிட்டு அவர்கள் மாற்றி கொள்ளட்டும் என்று போய் விடுவார்கள் அந்த நோட்டுகளை அதே கமிஷனுக்கு நான் வாங்கி மாற்றிக் கொள்வேன். 2000 ரூபாய் நோட்டு கூட நான் வாங்கிக் கொள்வேன் என்றார். 2000 ரூபாய் நோட்டு தான் செல்லாது என்று சொல்லிவிட்டார்களே அதை வாங்கி நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். செல்லாது என்பது உண்மைதான் அந்த நோட்டை ரிசர்வ் வங்கிக்கு பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். அந்த நோட்டில் உள்ள எண் இவற்றைக் குறிப்பிட்டு அந்த நோட்டை ஜெராக்ஸ் எடுத்து ஒரு கடிதம் இணைத்து அனுப்ப வேண்டும் அந்தக் கடிதத்தின் இதை மாற்றி தாருங்கள் என்று எழுதி நாம் கையெழுத்துப் போட்டு இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட முக்கியம் நமது வங்கிக் கணக்கு விவரத்தை அந்த கடிதத்தில் தெரிவித்து இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு நாம் வங்கி கணக்கில் அந்த 2000 ரூபாயை வரவு வைத்து விடுவார்கள் என்றார். 2000 ரூபாய்க்கு நீங்கள் எவ்வளவு கமிஷன் வாங்குகிறீர்கள் 2000 ரூபாய் என்றால் 1500 ரூபாய் தருவேன் 500 ரூபாய் எனக்கு என்றார். அவர் மேலும் தந்த விளக்கம் தான் சூப்பர் நம் ஆட்களுக்கு வங்கிகளில் சென்று கிழிந்த நோட்டை மாற்றிக்கொள்ள தெரியாது அல்லது அவ்வளவு தூரம் போக வேண்டுமா என்று யோசிப்பார்கள். அவர்களது அறியாமை அவர்களது சோம்பேறித்தனம் தான் எனது முதலீடு மாதத்துக்கு இதன் மூலம் எனக்கு முப்பதாயிரம் ரூபாய் வருமானம். என்ன கொஞ்சம் அலைய வேண்டும் என்றார். உழைத்துப் பிழைப்பதற்கு நிறைய வழிகள் இருக்கிறது என்பது மட்டும் எனக்கு புரிந்தது.
Leave a comment
Upload