தொடர்கள்
ஆசிரியர் பக்கம்
டெல்லி கணேஷ் ! ஒரு சகாப்தம் முடிவு பெற்றது. - ராம்

20241011150828498.jpeg

ஒரு மாமனிதன் இன்று நம்மிடையே இல்லை.

அதீத நேசமுடையவரின் இறுதி நாளில் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை காலம் அவரிடம் அழைத்து வந்து விடும் என்று சொல்வார்கள்.

ஒரே ஒரு நாள் பயணமாக சென்னை சென்று அன்றிரவு கிளம்ப வேண்டும் என்ற சூழலில் டெல்லி கணேஷ் அண்ணாவின் பேரிழப்பு செய்தி. பல பிரபலங்கள் ஹாங்காங் வந்திருந்தாலும் ஒரு சிலரே குடும்பத்தில் ஓருவர் போல ஆகி விடுவார்கள்.

டெல்லி கணேஷ் அப்படி ஒருவர். தொடர்ந்த ஒரு உறவு என்றால் அவர் தான். என்னதான் இரவு விமானம் இருந்தாலும், அங்கு கூட்டமாக இருக்கும் போகாமல் பார்க்கவே முடியாது என்று சொல்லப்பட்டாலும், எனக்கு மனது கேட்கவில்லை. அவருக்கு இறுதி மரியாதை செய்யா விட்டால் அவருடைய நட்புக்கு களங்கம் ஏற்படும், காலம் முழுவதும் அது உறுத்தும்.

அவரை அந்தக் கோலத்தில் பார்ப்பது ஏக வருத்தம் என்றாலும், நான் பார்க்காவிட்டால் அவரது ஆன்மாவுக்கு தெரியும்.

அசைவற்று கையில் ஆப்பிள் வாட்சுடன் படுத்திருந்த கோலத்தில் அவரைப் பார்க்கையில் கண்ணீர் பெருக்கெடுத்து வந்தது. மகன் மஹாவிற்கு அவரைப் பார்க்க வரும் ஏராளமான பேருக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருந்தது. அவரது மனைவியிடம் பேசிய போது 11.30 மணிக்கு தூக்கம் வருது நான் படுத்துக்கறேன் நீங்களெல்லாம் போய் தூங்குங்கோ என்றார். அடுத்த சில நிமிடங்களில் பிரிந்து விட்டார் என்றார். அனாயச மரணம். பெரிய மஹான்களுக்கு மட்டுமே இது வாய்க்கும்.

எப்பேர்ப்பட்ட மனிதர். அவர் நம் இல்லத்தில் வசித்த சில நாட்கள் மறக்க முடியாதவை. ஊடகத்தில் இருக்கிறேன் என்று தெரிந்தும் அவர் பாடிய பாடல்கள், பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யங்கள், நம்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று புரிகையில்....வலிக்கிறது.

அது மட்டுமல்ல பிரத்யேகமாக ஒரு பாட்டு வேறு பாடி அனுப்பினார். அந்த பாடல் இங்கே.. எத்தனை பிரபலங்கள் பழகியிருந்தாலும், யார் பிரிந்து போன பின் நினைவு வைத்து தொடர்பில் இருப்பார்கள். டெல்லி கணேஷ் இருந்தார். அவ்வப்போது செய்தி அனுப்பி, பேச மறப்பதில்லை.

ஒரு பிரபலம் தன்னுடன் பயணிக்கும் சாமான்ய மனிதரை எப்படி நினைவு வைத்து நட்பில் தொடர்கிறார் என்ற ஒரு உதாரணத்திற்குத் தான் இந்த பாடல் பதிவு.

ஒரு முறை சென்னைக்கு சென்று மதுரை செல்ல வேண்டி விமான நிலயத்திற்கு செல்லும் போது தன் குடும்பத்துடன் வந்து சில நிமிடங்களே இருந்தாலும் வந்து பார்த்து விட்டு போன மாண்பு அவர் போல யாருக்கும் வராது.

குமுதத்தில் ஒரு தொடர் எழுதப் போறேன் நீர் ஹாங்காங்கில் வைத்த தலைப்பு டெல்லி தர்பார் அதைத்தான் வைக்கப் போறேன் உம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணித்து என்றார். யாருக்கு வரும் இந்த மனது.

சமீபத்தில் கூட ஐரோப்பாவில் இருந்த போது, ராம் ஹாங்காங்ல எடுத்துண்ட் அந்த போட்டோஸ் அனுப்ப மாட்டேங்கறீரே என்ன விஷயம் என்று இரண்டு மூன்று முறை அவர் அழைத்ததும், அவரது ஹாங்காங் படங்கள் அனைத்தும் அனுப்பியதும்......கொடுப்பினை. முகநூலில் எழுதப் போகிறேன் என்றார். எழுதியது போல தெரியவில்லை.

ஒரு நல்ல நடிகர், தேச பக்தர், இசை ரசிகர், எழுத்தாளர், குடும்பஸ்தர், அனைத்துக்கும் மேலே, ஆகச் சிறந்த மனிதர்....

இன்று இல்லை.... எல்லாம் முடிந்திருக்கும்.....

விகடகவியில் சில வாரங்களுக்கு முன் அட்டைப்படத்தில் அவரது சதாபிஷேக புகைப்படம் போட்டு அவரை கெளரவித்ததில் விகடகவிக்குத் தான் பெருமை.

விகடகவியின் கண்ணீர் அஞ்சலி..........