தொடர்கள்
தொடர்கள்
நயத்தகு நற்றிணை -9 -மரியா சிவானந்தம்

2024925175013878.jpeg

தினைப்புனத்தில் காவல் காத்துக் கொண்டு இருக்கிறாள் தலைவி .

தானியத்தை தின்ன வரும் கிளிகளை , குருவிகளை, மைனாக்களை கவண் கொண்டு துரத்திக் கொண்டு இருக்கிறாள் .

கைகளில் கவண் இருந்தாலும் ,அவள் கண்களில், நெஞ்சில் நிறைந்திருப்பது அவளது காதலன் .

பிரிந்து சென்ற காதலன் நினைவு அவளை வாட்டுகிறது .

அவள் உள்ளத்தின் தவிப்பை யாரிடம் பகிர்ந்துக் கொள்ள முடியும் ?

தனிமையில் இருப்பவள் அங்குள்ள கிளியிடம் பேசுகிறாள் .

"உனக்கு வேண்டிய அளவுக்கு இங்கு விளையும் கதிர்களைத் தின்றுக் கொள்..

ஆனால் என் வேண்டுகோளை நிறைவேற்று" என்று தன் தலைவனிடம் தூது செல்ல சொல்கிறாள்.

"என் உள்ளத்துயரை மலை நாட்டில் உள்ள அவரிடம் போய் சொல்லு" என்று வேண்டுகிறாள் .

அவள் கூறுகிறாள் .

" இங்கு வளைந்திருக்கும் திணைக்கதிர்களை கொய்ய வந்துள்ள பச்சைக் கிளியே ,

நீ இங்கு கதிர்களைக் கொய்வதால் நான் உன்னை விரட்டி விடுவேன் என்று அஞ்சாதே .

நீ விரும்பும் வரை கதிர்களை உண்ணலாம் .

உன் தேவையை நீ பூர்த்தி செய்துக் கொண்ட பின்பு , என் தேவையை நிறைவேற்ற ,உன்னைத் தொழுது வேண்டுகிறேன்.

என் தேவை இதுதான்.

பலாமரங்கள் மிகுந்து தொங்கும் , சாரலை உடைய என் தலைவரின் நாட்டுக்கு நீ உன் உறவினரைக் காண செல்வாய் அல்லவா ?

அப்போது என் தலைவரையும் நீ பார்த்து வர வேண்டும் .

அவனிடம் என் நிலையை சொல்ல வேண்டும் .

இம்மலைநாட்டின் தினைப் புனத்தில் தனியே காவல் காத்துக் கொண்டு உன் தலைவி காத்திருக்கிறாள் "என்று மறவாமல் சொல் " என்கிறாள்

அந்த நற்றிணைப் பாடல் இதுவே .

கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளி
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு
நின் குறை முடித்த பின்றை என் குறை
செய்தல் வேண்டுமால் கை தொழுது இரப்பல்
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு
நின் கிளை மருங்கின் சேறிஆயின்
அம் மலை கிழவோற்கு உரைமதி இம் மலைக்
கானக் குறவர் மட மகள்
ஏனல் காவல் ஆயினள் எனவே

நற்றிணை 102

செம்பியனார் என்னும் சங்கப்புலவர் எழுதிய இந்த இனிய பாடல் ஒரு அழகான "தத்தை விடு தூது " பாடல் . இன்னும் ஒரு நல்ல பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.

தொடரும்