தமிழ்நாட்டில், நாமக்கல் நகரின் மையத்தில் மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே 18 அடி உயரத்தில் ஒற்றைக் கல்லினால் ஆன ஆஞ்சநேயர் வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் நரசிம்மரைத் திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையானது. அவரது திருமேனி, பீடத்திலிருந்து 22 அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது. இங்கு மார்கழி மாதம் மூலம் நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் மிகச் சிறப்பாக ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஸ்தல புராணம்:
இராமாயண காலத்தில், இராம இராவண யுத்தத்தில் இந்திரஜித் ஏவிய பிரமாஸ்திரம் தாக்கி மயக்கமான லட்சுமணன் உயிரைக் காக்க இமயத்தில் இருந்து சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்துவந்தார். இலட்சுமணன் உயிர் பெற்று எழுந்தவுடன், மலையை அதே இடத்திலேயே வைத்துவிட்டுத் திரும்பும் போது அங்கிருந்து ஒரு பெரிய சாளக்கிராமத்தைப் பெயர்த்து எடுத்துவந்தார். வரும் நேரத்தில் சூரியன் உதயமானபடியால், வான்வழியாக வந்துகொண்டிருந்த ஆஞ்சநேயர், தமது கையில் இருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைத்துவிட்டு சந்தியாவந்தனத்தை முடித்தார். மீண்டும் வந்து சாளக்கிராமத்தைத் தூக்க முயற்சித்தார். ஆனால் அதைத் தூக்க அவரால் முடியவில்லை. "இராமனுக்குச் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து முடித்துவிட்டு பிறகு வந்து என்னை எடுத்துச் செல்" என்றொரு வான் ஒலி கேட்க, ஆஞ்சநேயரும் சாளக்கிராமத்தை அங்கேயே விட்டு விட்டுக் கிளம்பினார். அவர் விட்டுச் சென்ற அந்த கல் நரசிம்ம மூர்த்தியாக வளர்ந்து நிற்க அவருக்கு எதிரே ஆஞ்சநேயர் நரசிம்ம மூர்த்தியை வணங்கியவாறு பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.
ஸ்தல அமைப்பு:
நரசிம்மர் - நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக் கோயிலில் தட்டையான நுழைவாயில் கோபுரம் உள்ளது. இங்குள்ள 18 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயரின் சிலை 5-ஆம் நூற்றாண்டில் இருந்து இருப்பதாக நம்பப்படுகிறது. கருவறைக்கு மேலே கோபுரம் கிடையாது. ஆஞ்சநேயர் கோயிலின் முன்பகுதியில் விநாயகருக்குத் தனி சந்நிதி உள்ளது. வெட்ட வெளியில் மழை, வெயில் பட எதிரில் உள்ள நரசிம்மரைத் திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சநேயர் இடுப்பில் வாளுடனும், சாலிகிராமத்தால் ஆன மாலையும் அணிந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இச்சந்நிதியின் பக்கவாட்டு சுவர்களிலுள்ள அஷ்டபுஜ நரசிம்மர், வைகுண்ட பெருமாள், வராகர், மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பங்கள் உள்ளன. நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள், ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் முதலியன செய்வதற்கு உயரமான இரும்பு ஏணி உள்ளது.
ஸ்தல சிறப்புகள்:
நாமக்கல் நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே சாளக்கிராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்குத் தனிக்கோயில் இருக்கிறது. 18 அடி உயரமுள்ள இவர், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார். இந்த கோயில் இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்றது. புராண காலத்தில் இந்த ஊருக்கு ஸ்ரீசைலஷேத்ரம் என்று அழைக்கப்பட்டது.
திருவிழாக்கள்:
இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் மாதத்தில் முதல் ஞாயிற்றுக் கிழமைகள், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. சந்தனக்காப்பு, வெண்ணெய் காப்பு செய்யப்படுகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி, நவராத்திரி விழா, நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ணர் ஜெயந்தி, ஆடி வெள்ளி, ஆவணி அவிட்டம், புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகள், யுகாதி பண்டிகை, திருக்கார்த்திகை தீபம் மற்றும் பங்குனித் தேர்த்திருவிழா 15 நாட்கள் நடைபெறும். பங்குனி மாதம் வரும் ஹஸ்த நட்சத்திரத்தில் மூன்று திருத்தேர்கள் திருவீதி உலா வருவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஒரு லட்சத்து எட்டு வடை மாலை:
ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளினை அனுமன் ஜெயந்தி விழாவாக விமர்சிக்கக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் வருகிற டிசம்பர்- 30 (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
அனுமன் ஜெயந்திக்காக 1,00,008 வடை தயாரிப்பதற்காக 2500 கிலோ உளுத்தம் பருப்பு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, சீரகம் 35 கிலோ, 125 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. வடை தயாரிக்கும் பணி சென்ற டிசம்பர் -24 செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி... 4 நாட்கள் இரவு பகல் என 24 மணி நேரமும் தொடர்ந்து நடைபெறுகிறது. பிறகு வடை மாலை கோர்க்கும் பணி நடைபெறும். இந்த பணியில் 40 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடை மாலையுடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்பு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அந்த வடை பிரசாதமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காலை 11 மணிக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுத் தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இவரைத் தரிசனம் செய்ய வெளி மாநிலம் மற்றும் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
குழந்தைகள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் அவர்களுக்கு அறிவு, வீரம், தைரியம், வலிமை, பயமின்மை, ஞாபகசக்தி, சுறுசுறுப்பு, விடா முயற்சி, நல்ல ஒழுக்கம், அடக்கம், நேர்மை, நோயின்மை, தேர்ச்சி பெறுதல், உண்மை பேசுதல், நாவன்மை, புகழ், நற்பண்புகள் ஆகியவற்றை வழங்குகிறார். மேலும் திருமணத்தடை விலகும், குழந்தை பாக்கியம் கிட்டும்.
பொதுவாகச் சனியால் பீடிக்கப்பட்டோர் சனிதோஷம் , ஏழரைச் சனி, ஜென்மச்சனி, கண்டச்சனி என அவதிப்படுபவர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபடலாம். ஆஞ்சநேயருக்கு நேர்த்திக்கடனாக வடை மாலை சாற்றுவது வழக்கம், மேலும் துளசி மாலை, சந்தனக் காப்பு, வெண்ணெய் காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி, வஸ்திரங்கள் சாத்திச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
நாமக்கல்லிலிருந்து தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை வழியாகச் செல்லலாம்.தேசிய நெடுஞ்சாலை வழியாக 50 கி.மீ தொலைவில் சேலமும் 45 கி.மீ தொலைவில் கரூரும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இருந்து நாமக்கல்லுக்கு பேருந்து வசதி உள்ளது.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு ஆட்டோ வசதியும், டவுன் பஸ் வசதியும் உள்ளது.
சேலம்-கரூர் செல்லும் பாதையில் நாமக்கல்லில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. வெளிநாட்டுப் பக்தர்கள் திருச்சி அல்லது கோவை விமான நிலையங்களில் இருந்து இறங்கி காரில் நாமக்கல் வரலாம்.
நலம் தரும் நாமக்கல் ஆஞ்சநேயரைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
Leave a comment
Upload