இந்த புத்தாயிரம் ஆண்டு துவங்கி 25 ஆண்டுகள் பறந்து விட்டன.
2025ஆம் ஆண்டில் நாம் காலடி பதிக்கிறோம்.
2000 ஆண்டு பிறந்த கணத்தின் போது , கண்ணிமைக்காமல் கணினி முன் பதட்டத்துடன் நாம் காத்திருந்த தருணம் நினைவுக்கு வருகிறது .
.அப்போது நம்மை மிரட்டிய Y2K சிக்கலை ( Y2K Bug ) நாம் சமாளித்த விதம் நினைவுக்கு வருகிறது .
இணைய பயன்பாடு துவங்கிய காலம் அது . பிராட்பேண்ட் எனப்படும் அதிவேக இணைய தள பயன்பாடு அன்று இல்லை . 56 KBPS (!) வேகத்துடன் இயங்கும் டயல் அப் மோடம்கள் மட்டுமே இணையத்தொடர்பை மக்களுக்கு ஏற்படுத்தி தந்தன. வங்கிகள் , அரசு அலுவலகங்கள் , விமான நிலையங்கள் , பெரிய நிறுவனங்கள் போன்ற சேவை நிறுவனங்கள் தங்கள் இணைய பயன்பாட்டுக்கு ILL (Internet Leased Line) என்னும் தனியான டேட்டா சர்கியூட்களை வைத்திருந்தன . இவை கணினி வலையமைப் பின் வழியாக (Computer network ) உலகத்தொடர்பை ஏற்படுத்தி தந்தன
இந்நிலையில், 2000 ஆண்டு பிறக்கும் முன்பே ஒரு சிக்கலைக் கணினி நிபுணர்கள் அனுமானித்தார்கள். அன்று கணினி நிரல் (Programming ) எழுதியவர்கள் ஆண்டினைக் குறிப்பிட இரண்டு இலக்க எண்ணையே , பயன் படுத்தி இருந்தனர் . 4 இலக்கமாக இருந்தால் கம்ப்யூட்டர் மெமரி அதிகமாக பயன்படுத்த வேண்டும் 1999 ஆண்டு , கணினியில் 99 என்றே குறிக்கப்பட்டது. 2000 ஆண்டு பிறக்கும் போது , கணினியில் “00 ‘என்று ஆண்டு மாறும் போது, அது 1900 ஆண்டைக் குறிக்கும் சிக்கல் வரும் என்று அனுமானம் செய்தனர். இந்த சிக்கலை Y2K என்று பெயரிட்டு அழைத்தனர்.
அப்படி ஒரு நூறாண்டுக்கு முன்பாக தேதி குதித்தால் , எல்லா கம்ப்யூட்டர் தரவுகளும் அழித்துப் போகும். மென்பொருள் சிதைவு (software crash )மற்றும் வன்பொருள் (hardware ) தொல்லைகளும் நிகழ வாய்ப்பிருப்பதாக கணினி உலகமே பயந்து நடுங்கியது. ஆண்டினைக் குறிக்க இரண்டு இலக்கதுக்குப் பதிலாக நான்கு இலக்கமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது . எங்கும் Y2K என்பதே பேச்சாக இருந்தது .
இந்த சிக்கலை சரியான விதத்தில் கையாள அரசு ,தனியார் நிறுவனங்கள் கணினி விற்பன்னர்களை நாடி , நிரலில் மாற்றங்களைச் செய்தனர் . நெட்ஒர்க்கில் Y2K Compliant cards பொருத்தினார்கள். கம்ப்யூட்டர்கள் மேற்படுத்தப்பட்டு upgrade ஆகின . Network interface cards , மற்றும் RAM மாற்றப்பட்டு சிக்கலைச் சமாளிக்க தயார் செய்ய வேண்டி இருந்தது
Y2K காய்ச்சல் எல்லாருக்கும் அடித்தது .நான் தொலைபேசித்துறையில் பணியில் இருந்ததால் ,அந்த காய்ச்சல் என் போன்றவர்களுக்கு அதிகமாகவே இருந்தது . தில்லி மற்றும் சென்னை தலைமை அலுவலகங்களில் இருந்து வரும் ஆணைகளை அவ்வப்போது நிறையவேற்ற வேண்டி இருந்தது. அவ்வப்போது வரும் நிரல்களை (Patches ) ஏற்ற வேண்டி இருந்தது .முக்கியமான தரவுகள் , பேக்கப் (Back Up )எடுத்து சேமித்து வைத்தோம். ஒரு அவசரநிலை பிரகடன நேரத்துக்கு உரிய தயாரிப்பும் , முன் ஏற்பாடும் Y2K வை சமாளிக்க தேவைப்பட்டது .
2000 பிறக்கும் நேரம் . அன்று மாலையில் இருந்தே பதட்டமாக இருந்தது.அப்போது நான் இன்டர்நெட் , வேலூர் மையத்தின் (Internet Node) பொறுப்பாளர் . தொலைபேசி நிலையங்கள் முதல் , சர்வதேச அழைப்புகளை அனுப்பும் gatewayவரை எல்லா இடங்களிலும் எல்லா முக்கிய அதிகாரிகளும் இரவுப்பணிக்காக அழைக்கப்பட்டு இருந்தோம். ஒவ்வொருவரும் தம் துறையின் 'செர்வர்' முன்பு அமர்ந்து இருந்தோம்.
2000 ஆண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணி நேரம்.
நகத்தைக் கடித்துக் கொண்டு கண் கொட்டாமல் கணினித்திரையையே பார்த்துக் கொண்டு இருந்தோம்.
கணினியில் 11. 57,. 11.58. 11.59. மணித்துளிகள் கரைகின்றன
12.00 மணி ஆகிறது. கணினி மொழியில் தேதி 31/12/ 99 என்ற தேதி மறைந்து தேதி 1/1/2000 என்று தேதி பளிச்சிடுகிறது .ஒரு பெரிய பெருமூச்சைத் தொடர்ந்து , ஆனந்த கூச்சல் எல்லா இடங்களிலும் ஒலித்தது ."ஹப்பாடா, நம் கம்ப்யூட்டர்களை காப்பாற்றி விட்டோம்"என்று நிம்மதி ஆனோம் . உடனடியாக லோக்கல் , STD,ISD கால்கள் செய்து பார்த்து எல்லாமே சரியாக இயங்குகிறதா என்று சரி பார்த்தோம் .இன்டர்நெட்டில் "யாஹூ " "மெயில்' எல்லாம் கிடைத்தது .
இனி எல்லாம் சுகமே என்று ஆனந்த பெருமூச்சு விட்டோம் .
2000 ஆண்டு பிறந்த போது உலகம் முழுவதும் இதே கதைதான்!
கோடிக்கணக்கான பணத்தை அப்போது அரசுகள் செலவழித்தன . இந்த சிக்கலைப் பயன்படுத்தி பணம் பண்ணிய கம்பெனிகள் ஆயிரம். ஒரு ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூனைப் போல Y2K பூதம் நம்மை அச்சுறுத்தியது . ஆயினும் அதை வெற்றிகரமாக கையாண்டோம் என்ற பெருமிதம் ,அப்போது பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நெஞ்சில் நின்றது .
அலைப்பேசி அதிகம் பரவலாகாத காலம் அது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதிகமாக இல்லை . அரசு இயந்திரங்களின் முழு இயக்கத்தில் 2000 ஆண்டு இனிதே பிறந்தது . . தகவல் தொழிற்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு மகத்தான வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் , கால் நூற்றாண்டுக்கு முன்பான இந்த நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்கிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Leave a comment
Upload