தொடர்கள்
அனுபவம்
நடந்தது - ஜாசன்

2024925122452919.jpg

(ஏ.ஐ.வரைந்த படம்)

குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த எனது மருமகன் "மாமா இது யாரோ பர்சை தவறவிட்டிருக்கிறார்கள். அனேகமாக மோட்டார் பைக்கில் போகும்போது நமது வீட்டு வாசலில் இருக்கும் ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்கும் போது கீழே விழுந்திருக்க வேண்டும். நிறைய பணம் இருக்கிறது நிச்சயம் தேடி வருவார்கள் கொடுத்துவிடுங்கள் "என்று என்னிடம் தந்து விட்டுப் போனார். நானும் பர்சைத் திறந்து பார்த்தேன் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கு அதிகமான பணம் இருந்தது. யார் தேடி வருகிறார்கள் கொடுத்து விடலாம் என்று வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன்.

சாலையில் வருபவர்கள் ஒவ்வொருவரையும் இவராக இருக்குமோ என்று பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்போது ஒரு இளம் பெண் செல்பேசி டார்ச்சை அடித்தபடி சாலையில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். என் கையில் இருப்பது ஆண்கள் பயன்படுத்தும் பர்ஸ். ஆனால், இந்தப் பெண் தேடுகிறாரே என்று என்ன நடக்கிறது என்று பொறுமையாக காத்திருந்தேன். அப்போ என் அருகில் வந்தவர் இங்கே ஏதாவது கொலுசு கீழே இருந்ததா என்று கேட்டார். இவர் கொலுசு காணாமல் தேடுபவர் என்று தெரிந்து கொண்டு இல்லையம்மா என்று பதில் சொன்னேன். அதற்குள் அந்தப் பெண்மணியின் செல்பேசி ஒலிக்க அப்படியா என்று பதில் சொல்லி செல்பேசியை ஆப் செய்து விட்டு கொலுசு என் வீட்டுக்குள்ளேயே விழுந்து கிடக்கிறது கிடைத்துவிட்டது என்று புறப்பட்டாள்.

நான் பர்சைத்தேடி யார் வருகிறார்கள் என்று சாலையை நோட்டமிட்டேன். அதேசமயம் யாரும் வரவில்லை என்றால் இந்த பணத்தை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்த மாசம் எனது பண தேவை பட்டியல் கண் முன்னே வந்து போனது. ஆனாலும் இந்த பணத்தை நான் என் சொந்த செலவுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அப்போது இந்த பணத்தை என்ன செய்வது என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. கோயிலில் அன்னதானத்திற்கு தருவது, அனாதை ஆசிரமத்தில் நன்கொடையாக தருவது அல்லது உண்மையில் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் யாருக்காவது பிரித்து தருவது இப்படி யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என் மனைவி அங்கு வந்து" பர்ஸ் தேடி இன்னும் யாரும் வரவில்லையா ? என்று கேட்டு அவளும் எனக்கு துணையாக நின்று கொண்டிருந்தார். இருவரும் யாராவது வருகிறார்களா என்று தேடிக் கொண்டிருந்தோம். அப்போது மோட்டார் பைக்கில் வந்த ஒரு இளைஞர் என் வீட்டு வாசலில் மோட்டார் பைக் நிறுத்தி விட்டு அங்கும் இங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தார். என் அருகில் வந்தவர் "நான் மோட்டார் பைக்கில் கொஞ்ச நேரத்துக்கு முன்பு இந்த வழியாக என் மனைவியுடன் போகும்போது என் பர்ஸ் இங்கே கீழே விழுந்து விட்டது அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன் "என்றார். நான் மடியில் வைத்திருந்த பர்ஸை எடுத்துக் காண்பித்து "இதுவா பாருங்கள் "என்றேன். அவர் சந்தோஷ மிகுதியில் "ஆமாம் சார் இதுதான் "என்று சொன்னார் ."பணம் சரியாக இருக்கிறதா என்று எண்ணிப் பாருங்கள் "என்றேன் "அதெல்லாம் சரியாகத்தான் இருக்கும் சார் ரொம்ப நன்றி "என்று கை கூப்பினார் நான் "நன்றி எல்லாம் வேண்டாம் நீங்க கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்றால் நிச்சயம் உங்களை தேடி வரும் "என்றேன். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு "இது கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் தான் சார் "பர்சில் இருந்து கத்தையாக பணத்தை எடுத்து என்னிடம் காண்பித்தார் .சரி சந்தோஷமாக போங்கள் என்று அனுப்பி வைத்தேன்.

நேற்று மழையில் நகைக்கடையில் கொடுக்க வேண்டிய பணத்தை தர கடைக்குப் போனேன். அப்போது நகைக் கடைக்காரர்"இந்த மழையில் எதற்கு வந்தீர்கள் என்ன அவசரம் உங்கள் பணம் ஓடியா போகப் போகிறது "என்று என்னிடம் செல்லமாக கோபித்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவர் "மழை அதன் வேலையை பார்க்கிறது அதற்காக நம்ம வேலையை பார்க்காமல் இருக்க முடியுமா சார்"!என்றார்.

அதானே இவர் சொல்வது தான் சரி" என்று சொல்லிவிட்டு கடையை விட்டு புறப்பட்டேன்.