மருத்துவ சுற்றுலா................- கேபிஎஸ்
பதவியில் இருந்து ஓய்வு பெற்று பத்து வருஷம் ஆகிவிட்டது.என்னுடன் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்த பக்கத்து வீட்டு சுந்தரேசனும் எனக்குப் பிறகு ஐந்து வருடம் கழித்து வேலையில் இருந்து ரிட்டயர் ஆனவன் தான்.தெனாலி பட கமல் போல எதைப் பார்த்தாலும் அவனுக்கு பயம்தான்.
வருமுன் காத்தல் என்ற கொள்கையையும் தாண்டி,வராத முன் காத்தல் என்று ஒரு புதிய கொள்கையைக் கடைப்பிடிப்பவன் தான் சுந்தரேசன்.சுருக்கமாகச் சொன்னால் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவுக்கு மூத்த அண்ணன்.
அன்று மாலை என் வீட்டில் சுந்தரேசனு டன் பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தபோது என் மார்பில் ஏதோ சுருக் என்று குத்துவதைப் போல் உணர்ந்தேன்.லேசாக மார்பைத் தடவி விட்டுக்கொண்டே பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் பேச்சை நிறுத்திய சுந்தரேசன்" ஏன் மார்பை தடவி கிட்டே பேசுற?" என்றான், உண்மையான கரிசனத்துடனும், கவலையுடனும்.
" சும்மா ஏதோ வாயுப் பிரச்சனை" என்றேன்.
"அப்படியெல்லாம் அஜாக்கிரதையாக விட்டு விடக்கூடாது." என்று கூறிவிட்டு
"சிவகாமி மாமி! உடனே ஓடி வாங்க. இவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்தாலும் வரலாம் உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு போகணும். " என்று அலறினான்.
இருப்பதெல்லாம் அப்படியே போட்டுவிட்டு ஓடோடி வந்தாள் என் மனைவி சிவகாமி.
"இத பாருங்க சிவகாமி மாமி.என்னோட சகலை இப்படித்தான் அலட்சியமா இருந்துவிட்டு 24 மணி நேரத்துக்குள் பயங்கர நெஞ்சடைப்பால் செத்தே போனான்.ஏண்டா உனக்கு பயங்கரமாக வேர்க்கஆரம்பிக்குமே? இடது கை தூக்க முடியாமல் வலிக்குமே?எங்கே மூச்சை நல்லா இழுத்து விடு பார்க்கலாம்."என்று படபடத்தான் சுந்தரேசன்.
சிவகாமிக்குமயக்கமே வந்துவிட்டது. அவள் கண்களில் கண்ணீர் முட்டியது.
இவனை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள் ." என்றான் சுந்தரேசன் படபடப்பு சற்றும் குறையாமல்.
நான் அவசர அவசரமாக அவனைத் தடுத்தேன். "சுந்தரேசா இது ஏதோ வாய்வு சம்பந்தமான பிரச்சனை. ஆம்புலன்ஸ் எல்லாம் வேண்டாம் ஒரு டாக்ஸி போதும். "என்றேன்.
சுந்தரேசன் அலறியதால் எனக்கு உண்மையாகவே குப் என்று வேர்ப்பது போல ஒரு பிரம்மை. இடது கையை மேலேயும் கீழேயும் தூக்கி பார்த்தேன்.
லேசாக படபடப்பு இருந்தது உண்மைதான். ஆனால் அது சுந்தரேசனின் எச்சரிக்கையால் ஏற்பட்டதா,அல்லது உண்மையிலேயே இதயப் பிரச்சனையால் வந்ததா என்று என்னால் கணிக்க முடியவில்லை.
ஒரு வழியாக ஆனால் வேண்டா வெறுப்பாக,டாக்ஸி ஒன்றைப் பிடித்து கார்ப்பரேட் மருத்துவமனைக்கு மூவரும் சென்றோம்.
அதுவும் ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தான்.அழகான வரவேற்பறை.அதைவிட அழகான பெண் ஊழியர்கள், மற்றும் அதே 100 ரூபாய் பதிவு கட்டணம்.
மூன்றாம் மாடியில் இதய சிகிச்சை நிபுணரின் அறை.அவருடைய உதவியாளர் ஒரு பெண் "சார் 800 ரூபாய் கட்டிவிட்டு அங்கே போய் உட்காருங்கள்." என்று கூறிவிட்டு உடனே அதற்கு ரசீதும் கொடுத்து விட்டாள். அங்கு நான்கு அல்லது ஐந்து இதய நோயாளிகள் கவலையுடனும் சோர்வுடனும்அமர்ந்திருந்தனர்.எல்லோருக்கும் ஏறக்குறைய என் வயது தான்.
சோகமே உருவாகி என் கையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள் மனைவி.
அதைவிட சோகமாக இருந்த சுந்தரேசன், 'உனக்கு எப்போது வேண்டுமானாலும்,என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.' என்றுகண்களால் கூறுவது போல இருந்தது.
என் முறை வந்ததும் மூவரும் மெல்ல டாக்டரின் அறைக்குள் சென்றோம்.
டாக்டர் புன்முறுவலுடன் வரவேற்றது மனதுக்குள் கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது. "என்ன பிராப்ளம்?" என்று டாக்டர் கேட்டு முடிப்பதற்குள் என் மனைவியும்,சுந்தரேசனும்,மாறி மாறி எனக்கு எப்படி 'நெஞ்சு வலி' ஏற்பட்டது என்பதை விளக்கினர்.
இதுதான் சாக்கு என்று என் மனைவி "டாக்டர்! இவர் வீட்டில் நான் சொல்வது எதையுமே கேட்பதில்லை. வாக்கிங் போவதில்லை.அப்பப்ப நொறுக்கு தீனி.
உட்கார்ந்த இடத்தை விட்டு அசையக் கூட மாட்டார்.அவருக்கு உருளைக்கிழங்கு வேணும். நான் உடம்பு முடியாமல் கஷ்டப்பட்டாலும் ஏன் என்று ஒரு வார்த்தை கூடக் கேட்க மாட்டார்."என்றாள்.
அடுத்து சுந்தரேசன்" டாக்டர் இவன் ஆபீஸில் கூட இப்படித்தான்." என்று ஆரம்பிக்க டாக்டர் இடை மறித்து
"சரி!முதல்ல ஒரு இசிஜி எடுத்து பார்க்கலாம். அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்." என்றார்.
அதே தளத்திலிருந்த இசிஜி அறைக்கு சென்றோம். பத்து நிமிடங்களுக்கு பின்இசிஜி ரிப்போர்ட்டுடன் டாக்டர் அறைக்கு வந்தோம். ரிப்போர்ட்டை டாக்டர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது சுந்தரேசன் கண்ணில் ஒரு பீதி தெரிந்தது.
மனைவி மனசுக்குள் கந்த சஷ்டி கவசம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
டாக்டர் எங்களைப் பார்த்து "இசிஜி நல்லாதான் இருக்கு. கவலைப்பட ஒன்னும் இல்ல. ஆனா இசிஜியை மட்டும் நம்பி ஒரு முடிவுக்கு வர முடியாது.நீங்க போய் ஒரு எக்கோ எடுத்துட்டு வந்துருங்க. இதய சம்பந்தமான சில பிரச்சனைகளுக்கு எக்கோ தான் சிறந்தது."என்றார்.
மீண்டும் அதே தளத்தில் இருந்த எக்கோ எடுக்கும் அறைக்கு சென்றோம்.
சுந்தரேசன் என் மனைவியை கரிசனத் துடன் பார்த்து "எதுக்கும் திருப்பதிக்கு காசு முடிஞ்சு வச்சு வேண்டிக்கோங்க ம்மா."என்றான் ஆழ்ந்த கவலையுடன்.
எக்கோ சோதனை முடிந்து அதன் அறிக்கையுடன் டாக்டரின் அறைக்கு சென்றோம்.மீண்டும் அந்த திக் திக் நிமிடங்கள்.பாதியில் விட்ட கந்த சஷ்டி கவசத்தை தொடரந்தாள் என் மனைவி.
சுந்தரேசன் முகத்தில் வேறு மாதிரியான கவலையைப் பார்த்தேன்
'இவனை உடனே டாக்டர் அட்மிட் செய்து விட்டால் நாம் எந்த பஸ் பிடித்து வீடு போக வேண்டும்?' என்கிற கவலை அவன் முகத்தில் தெரிந்தது.
நாங்கள் மூவரும் டாக்டரின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம்.அறிக்கையை ஆழ்ந்து படித்துவிட்டு கொஞ்ச நேரம் எங்களையே வெறித்துப் பார்த்து விட்டு "அறிக்கை நார்மலாக தான் இருக்கிறது." என்றார் ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு.(சுந்தரேசன் இதை முழுதாக நம்பவில்லை!)
டாக்டர் விடற மாதிரி இல்லை."சார் எதுக்கும் ஒரு டிஎம்டி (Tread mill test) எடுத்துவிடலாம்.உங்களின் இதய அழுத்தத்தை அது சொல்லிவிடும். " என்று கூறி அதற்கு ஒரு ஆலோசனை சீட்டு எழுதி என் கையில் திணித்தார்.
சுந்தரேசன் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.
இதன் ரிசல்ட் வரும்போது சண்முக கவசம் சொல்ல வேண்டும் என்ற என் மனைவியின் மைண்ட் வாய்ஸ் எனக்கு சத்தமாக கேட்டது.இந்த டெஸ்டயும் சேர்த்து சுமார் 5000 ரூபாய் மருத்துவமனைக்கு கட்டியாகிவிட்டது.
ட்ரெட்மில் டெஸ்டில் என் உடலில் ஒயர்களை இணைத்து ஓடும் எந்தி ரத்தில் என்னை ஓடவிட்டார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக ஓடும்வேகத்தைஅதிகரித்தார்கள்."முடியாத போது சொல்லுங்கள் நிறுத்தி விடுகிறேன். " என்றாள் அதை இயக்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவர்.
மூச்சு வாங்கி வேர்க்க விறுவிறுக்க இருபது நிமிஷம் நான் ஓடினேன்.' இது இதய வலியை உண்டாக்கும் எந்திரமா?' என்ற சந்தேகம் வந்து போகாமல் இல்லை.
என்னை ஆசுவாசப்படுத்தி ரிப்போர்ட்டை கையில் கொடுத்தார்கள்.
என் மனைவி சண்முக கவசம் சொல்லத் தயாரானாள்.
டாக்டர் மீண்டும் அந்த ரிப்போர்ட்டை சற்று உற்று நோக்கினார்.அவர் முகம் வாடியது.
ரிப்போர்ட்டில் பாதகமாக எதுவுமில்லை ஒருவேளை வாயு பிரச்சனையாக இருக்கலாம்.எதற்கும் சில மாத்திரைகளை சிபாரிசு செய்கிறேன். ஒரு மாசம் சாப்பிட்டபின் மீண்டும் வாருங்கள். பிரச்சனை இருந்தால் ஒரு ஆஞ்சியோ பண்ணிடலாம்.டாக்டர் சொன்னதும் என் மனைவியின் கண்களில் கண்ணீர்.
வீட்டுக்கு டாக்ஸியில் திரும்பி வரும்போது சுந்தரேசன் சொன்னான்.
" எதுக்கும் இன்னொரு ஹாஸ்பிடல் போய் ஒரு செகண்ட் ஒப்பினியனும் வாங்குவது நல்லது. "
அதைக் கேட்டபின் எனக்கு லேசாக நெஞ்சு வலி வருவது போல் இருந்தது.
(முற்றும் )
Leave a comment
Upload