தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் - மழை நீர் சேகரிப்பு

பேரபாயம்

நிலத்தடி நீர் ஆய்வு குழு சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் நிலத்தடி நீர் படிப்படியாக சரிந்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. அதே சமயம் வானிலை அதிகாரிகள் தமிழ்நாட்டில் 74% மழை கூடுதலாக பெய்திருக்கிறது என்ற ஒரு தகவலையும் பதிவு செய்கிறார்கள். ஆனால், நிலத்தடி நீர் குறைந்து போவதற்கு காரணம் மழைநீர் சேமிப்பை நாம் கண்டுகொள்ளாமல் போனதுதான். மீண்டும் மழை நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் தந்து அதை அரசாங்கம் செயல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும். இல்லையென்றால் நிலத்தடி நீர் சரிவு தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

தமிழகம் முழுவதும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கிறது. ஆனால் வருங்காலத்தில் நிலத்தடி நீர் சேமிப்பு கேள்விக்குறியாகிவிட்டால் நாம் காசு கொடுத்து தான் தண்ணீரை வாங்க வேண்டும் என்ற பேரபாயம் நமக்காக காத்திருக்கிறது. ஏற்கனவே நம் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. அந்தத் தண்ணீரின் சுகாதாரமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

எனவே நிலத்தடி நீர் ரொம்பவும் அவசியம் அதற்கு மழைநீர் சேகரிப்பு மிக மிக அவசியம். இதை அரசாங்கமும் பொதுமக்களும் உணர்வது நல்லது.