தொடர்கள்
வலையங்கம்
வேண்டவே வேண்டாம்

20240813181949810.png

கடந்த வாரம் விழுப்புரம் அருகே கழுப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மது போதையில் பள்ளியில் ஆட்டம் போட்டு உள்ளனர். பள்ளிக்குப் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் சில மாணவர்கள் மாணவிகள் கூட்டம் கூட்டமாக புகைப்பிடிப்பதும் மது அருந்துவதுமாக இருந்துள்ளனர். அதில் சில மாணவிகளுக்கு போதை ஏறி பள்ளிக்குள் வந்து ஆட்டம் ஆடுவதை பார்த்து ஆசிரியர்கள் மற்ற மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளிக்கு அவமானம் என்று நினைத்து அதை மூடி மறைக்கும் வகையில் ஆசிரியர்களை வாகனத்தை ஏற்பாடு செய்து அந்த மாணவிகளை அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். பள்ளி மாணவிகள், மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதை தடுக்க வேண்டியது யார் அரசாங்கமா ? பொதுமக்களா ? பெற்றோர்களா ? என்ற கேள்வியும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஆனால், டாஸ்மாக் விதிப்படி மதுபான கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், அதை டாஸ்மாக் விற்பவர்களே கடைபிடிக்கவில்லை என்பதற்கு ஆதாரம் தான் இந்தப் பள்ளி சம்பவம். ஏற்கனவே 2022-ஆம் ஆண்டு சீருடையில் மாணவிகள் மதுபானம் அருந்தும் வீடியோ வைரலானது. இது சம்பந்தமான பொது நல வழக்கில் நீதிமன்றம் இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது. பள்ளி சீருடையில் மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்தார்கள். ஆனாலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

எனவே ஒரு தலைமுறையை சீரழிக்கும் இந்த மது வேண்டவே வேண்டாம். இந்த மது விற்பனையில் தரும் இலவசங்களும் வேண்டாம்.