தொடர்கள்
கலை
புலிகளே ஜாக்கிரதை !! - மாலா ஶ்ரீ

20240807081218128.jpeg

கொஞ்சம் புள்ளி விவரமாக இருந்தாலும் இந்த கட்டுரையை தம் கட்டி படிக்க வேண்டியது அவசியம். உணவுச் சுழற்சியில் இப்படி ஒவ்வொரு ஜீவராசியாக மனித இனம் கொன்று கொண்டு வந்தால் பேரழிவில் கொண்டு போய் விடும்.

கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (என்டிசிஏ) சமர்ப்பித்த பதில் அறிக்கையில், ‘இந்தியாவில் கடந்த 103 நாட்களில் 47 புலிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. ஒட்டுமொத்தமாக மத்தியப்பிரதேசம் 17, மகாராஷ்டிரா 11, கர்நாடகா 6, உத்தரப்பிரதேசம் 3, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 1, கேரளாவில் 2 என மொத்தம் 47 புலிகள் இறந்துள்ளன. கடந்தாண்டு நாடு முழுவதும் 181 புலிகள் இறந்துள்ளன. இதில் 44 புலிகள், இயற்கை மரணங்கள் இறந்தவை.

கடத்தல் கும்பலின் வேட்டையில் 9 புலிகள் இறந்துள்ளன. மற்ற 128 புலிகளின் இறப்புக்கான காரணங்கள் தெரியவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு நடத்தி கணக்கெடுப்பின்படி, நாட்டில் மொத்தம் 3,167 புலிகள் உள்ளன. கேரளாவை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு 981 புலிகள் இருந்தன. ஆனால், 2022-ம் ஆண்டில் 157 புலிகளே இருந்துள்ளது. கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசம் 43, மகாராஷ்டிரா 45, கேரளாவில் 14 புலிகள் இறந்துள்ளன. தற்போது கேரள காடுகளில் மொத்தம் 213 புலிகள் உள்ளன.

கேரள வனப்பகுதியை ஒட்டிய கர்நாடகாவில் 563, தமிழகத்தில் 306 புலிகள் உள்ளன. புலிகள் குறித்த கணக்கெடுப்பானது, சிசிடிவி காமிராக்களின் செயல்பாடுகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இவை வேட்டையாடும் விலங்குகள், புலியின் கால்தடங்கள், எச்சங்கள் மற்றும் மரங்களில் புலிகள் செய்த அடையாளங்களை ஆகியவற்றின் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகிறது. புலியின் உடலில் உள்ள கோடுகளில் உள்ள வித்தியாசத்தை கண்டறிந்தும் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது’ என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.