சென்னை மாநகரில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், போலீசாரின் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்தவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெருநகர சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் பகுதிளுக்கு தனித்தனியே காவல் ஆணையரகங்கள் துவங்கப்பட்டன. சென்னையில் சந்தீப்ராய் ரத்தோர், ஆவடியில் கி.சங்கர் மற்றும் தாம்பரத்தில் அமல்ராஜ் ஆகிய 3 பேரும் காவல் ஆணையர்களாக செயலாற்றி வருகின்றனர்.
ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டு பகுதிகளில் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி ஃபண்ட் மூலம் பணமோசடி, போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி, ஆன்லைனில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி, கஞ்சா உள்பட பல்வேறு போதை பொருள் கடத்தல், விற்பனை உள்பட பல்வேறு ‘சைலண்ட் கில்லர்’ குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், படப்பை உள்பட பல்வேறு சென்னை புறநகர் பகுதிகளில் அடிதடி, வெட்டு, குத்து மற்றும் படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
பெருநகர சென்னை பகுதிகளான அண்ணாநகர், அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளில் ஒரே நாளில் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. கொசுறாக, காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட வாலாஜாபாத்தில் நகைக்காக ஒரு மூதாட்டி படுகொலை என வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே நாளில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
முதல் சம்பவம்: தாம்பரம் அருகே குரோம்பேட்டையை சேர்ந்த தாமஸ் என்பவர், அப்பகுதி தனியார் தொழிற்சாலைகளில் இருந்து தோல் கழிவுகளை ஏற்றி செல்லும் தொழில் செய்து வந்துள்ளார். இவர், தன்னிடம் ஏற்கெனவே வேலை பார்த்த சபரி என்பவருக்கு ₹30 ஆயிரத்தை கடனா க கொடுத்துள்ளார். எனினும் அப்பணத்தை சபரி திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதற்கிடை யே கடந்த மாதம் 27ம் தேதி இரவு பணத்தை திருப்பி தருவதாக தாமசை செல்போனில் சபரி அழைத்துள்ளார். அதை நம்பி சென்ற தாமசை கத்தியால் சரமாரி வெட்டி சபரி படுகொலை செய்துள்ளார். பின்னர் குரோம்பேட்டை காவல்நிலையத்தில் சபரி சரணடைந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2வது சம்பவம்: தாம்பரம் அருகே இரும்புலியூரை சேர்ந்த ராஜா (எ) கார்த்திக் ராஜா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். திருமணத்துக்கு பிறகு குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் கார்த்திக் ராஜா ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். எனினும், அவர் அப்பகுதியில் எந்த ஓட்டுநர் சங்கத்திலும் இணையாமல், அனைத்து பகுதிகளிலும் தனியே ஆட்டோ ஓட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அப்பகுதி ஆட்டோ சங்கத் தலைவர் ஆனந்தன் உள்பட சிலர், இப்பகுதியில் நீ ஆட்டோ ஓட்டக்கூடாது என கார்த்திக் ராஜாவுக்குத் தடை விதித்துள்ளனர். எனினும் அவர், நான் இங்குதான் விருப்பப்படி தனியே ஆட்டோ ஓட்டுவேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக கடந்த மாதம் 27ம் தேதி இரவு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே கார்த்திக்ராஜா மற்றும் எதிர்தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
அங்கு தனியே சென்ற கார்த்திக்ராஜாவை ஆட்டோ சங்கத் தலைவர் ஆனந்தன் உள்பட 5 பேர் அரிவாளால் சரமாரி வெட்டியதில் பரிதாபமாக பலியானார். இதைத் தொடர்ந்து, கடந்த 28ம் தேதி இவ்வழக்கு தொடர்பாக சங்கத் தலைவர் ஆனந்தன் உள்பட 5 பேரும் தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
3வது சம்பவம்: தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட குன்றத்தூர் அருகே மலையம்பாக்கத்தில் ஒரு தனியார் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்தவர், ராஜேஷ். கடந்த 27ம் தேதி இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரை வழியாக தனியே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து, ராஜேஷை கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் தர மறுக்கவே, ராஜேஷை கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு, மர்ம நபர்கள் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ், மறுநாள் (28ம் தேதி) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இக்கொலை வழக்கு தொடர்பான குற்றவாளிகளை குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுபோன்ற கொலை சம்பவங்களில் பெரும்பாலான முக்கிய குற்றவாளிகள் ஏதேனும் நீதிமன்றங்களிலோ அல்லது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் சரணடைவது வழக்கம். இல்லையேல், நிலுவையில் இருக்கும் கொலை வழக்குகளில் சம்பந்தம் இல்லாத, ஏதேனும் பழைய குற்றவாளிகளை போலீசார் ஆஜர்படுத்தி, வழக்கை முடித்து வைப்பதும் நடப்பதாக கூறப்படுகிறது.
4வது சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே
கட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர், மறைந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி சுகுணா. இவரது மகளுக்கு திருமணமாகி, வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் இக்கிராமத்து வீட்டில்சுகுணா தனியே வசித்து வந்துள்ளார். இவரது வீட்டின் கீழ்த்தளத்தில் ஏற்கெனவே வடமாநிலத்தை சேர்ந்த 5 பேர் வாடகைக்கு குடியிருக்கின்றனர். அதே வீட்டில், கடந்த 2 மாதங்களுக்கு முன் வடமாநில தம்பதியும் வாடகைக்கு இருந்துள்ளனர்.
கடந்த 27ம் தேதி வழக்கம் போல் மகள் தொடர்பு கொண்டபோது, செல்போனை சுகுணா எடுத்து பதிலளிக்கவில்லை. இதில் சந்தேகமான மகள், அருகிலுள்ள தனது உறவினரிடம் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் சுகுணா படுகாயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த 10 சவரன் நகைகளும் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
நகைக்காக மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம், பெருங்களத்தூர், குன்றத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்து வழிப்பறி கொள்ளை, செயின் பறிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுவதில்லை.இதனால் தாம்பரம் காவல் ஆணையரகப் பகுதிகளில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளி ட்ட பல்வே று குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனினும், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு மட்டுமே போலீஸ் கமிஷனர் அதிக முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் பலர் தானாகவே காவல் நிலையங்களில் சரணடைகின்றனர். அவர்களை போலீசார் பெயளரவுக்கு கைது செய்ததாக அறிவிக்கின்றனர். எனினும், ஒருசில கொலை, கொள்ளை வழக்குகளில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடாவிட்டால், ஏற்கெனவே திருந்தி வாழும் பழைய குற்றவாளிகளை போலீசார் ஆஜர்படுத்தி வழக்கை முடித்து வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.
இப்பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கும் போலீஸ் கமிஷனர் அதிக முக்கியத்துவம் கொடுத்து, போலீசாரின் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி, ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்...’’ என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
“சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுப்பதில் போலீசார் சுணக்கம் காட்டுவது ஏன் என்பதுதான் புரியவில்லை.
ஆனால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று மார்தட்டும் போது திகைப்பு மேலிடுகிறது!
Leave a comment
Upload