தொடர்கள்
கவர் ஸ்டோரி
தமிழக மக்களின் ஆயிரம் ரூபாய் கோபம்  ! -விகடகவியார்

20240305161334167.jpeg

விகடகவியார் உள்ளே வந்ததும் ஆபீஸ் பையன் இளநீர் தனியாக வழுக்கை தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்து 'சாப்பிடுங்கள் 'என்று சொன்னதும் ஆபீஸ் பையனை பார்த்து ' நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று ' என்று சொன்னதும் ஆபீஸ் பையன் நம்மைப் பார்த்து ' அவர் உங்களுக்கு தான் ஏதோ மெசேஜ் சொல்கிறார் கவனமா கேட்டுக்கோங்க ' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

நாம் விகடகவியாரிடம் என்ன அது நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று ''என்று கேட்க விகடகவியார் ...முதலமைச்சர் மகளிர்க்கு உரிமை தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் ஒரு கோடி பேருக்கு மேல் தருகிறோம். மகளிர் வாக்கு வங்கி நமக்கு அதிகரிக்கும் என்று நம்பினோம். ஆனால், நடந்தது வேறு என்கிறார் என்று சொன்னதும் நாம் 'அது என்ன நடந்தது. அதை சொல்லும் 'என்று கேட்டதும் 'முதலில் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் என்று சொன்னார்கள். ஆனால், அந்த திட்டத்தை செயல்படுத்தும் போது தகுதி வாய்ந்த என்று சொல்லி நிறைய பேருக்கு கிடைக்காமல் போனது.

முதல்வர் காலை நடைபயிற்சியின் போது ஈரோட்டில் குடும்பத் தலைவிகளிடம் வாக்கு கேட்டபோது ஒரு குடும்பத் தலைவி சொந்த வீடு சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் கூட ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால், அவர்களை விட வருமானம் குறைந்தவள் நான் எனக்கு கிடைக்கவில்லையே என்று கேட்க அந்த வீடியோ வைரலானது.

இதே அனுபவம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்பட்டது, கனிமொழிக்கு ஏற்பட்டது, நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஏற்பட்டது,. இதெல்லாம் வெற்றி வாய்ப்பை பாதிக்குமோ என்ற பயம் தற்சமயம் முதல்வருக்கு எனவே தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டதும் எல்லோருக்கும் தருவோம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் திமுக தலைவர்கள்.

சரி பொதுவாக தேர்தல் நிலவரம் எப்படி என்று நாம் கேட்க ,,,

முதல்வர் முதலில் நாற்பதும் நமக்கு தான் என்று பெருமையாக சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது 30 இடங்கள் நமக்கு கிடைத்தால் அதுவே நமக்கு மிகப்பெரிய வெற்றி என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்.

எடப்பாடிக்கு எல்லா இடங்களிலும் நிறைய கூட்டம் வருகிறது.. இந்த முறை அண்ணா திமுக நான்கு ,ஐந்து இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு என்று உளவுத்துறை தகவல் சொல்லி இருக்கிறது.

இதன் நடுவே கூட்டணி கட்சிகள் திமுக ஒத்துழைப்பு தருவதில்லை என்று புகார் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் 'என்று சொன்னதும், 'கூட்டணி கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லையா... திமுக தயவில் தான் வெற்றி பெற முடியுமா? ' என்று நாம் கேட்டதும் அவர்கள் இதுவரை திமுக தயவில்தானே வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்தப் பழக்கத்தில் கேட்கிறார்கள்' என்று விகடகவியார் சொல்ல சரி எந்த கூட்டணி கட்சி எந்த பஞ்சாயத்து அதை சொல்லுங்கள் ' என்று நாம் கேட்க ...

காங்கிரஸ் பஞ்சாயத்து சோனியா காந்தி வரை போய்விட்டது 'என்று விகடகவியார் சொன்னதும், 'என்னது சோனியா காந்தியா' ? என்று நாம் கேட்க 'எல்லாம் திருநெல்வேலி சமாச்சாரம் தான்.

திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டி போடுகிறவர் ராபர்ட் ப்ரூஸ். இவர் கன்னியாகுமரிகாரர் சிஎஸ்ஐ கிறிஸ்துவர்.

திருநெல்வேலியில் தன் மகனுக்கு வாய்ப்பு கேட்டு முதல்வருக்கு தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருந்தார். பேரவைத் தலைவர் அப்பாவு தனது மகனுக்கு வாய்ப்பை தட்டிப் பறித்து விட்டார் என்ற கோபத்தில் காங்கிரஸ் வேட்பாளருக்கு சரிவர ஒத்துழைப்பு தரவில்லை. உடனே ராபர்ட் ப்ரூஸ் கன்னியாகுமரி சிஎஸ்ஐ மறை மாவட்ட தலைவரிடம் புலம்பி தீர்க்க அவர் தனக்குத் தெரிந்த பெரிய சிஎஸ்ஐ தலைவர் ஒருவரை தொடர்பு கொண்டு சொல்ல அவர் இந்த விஷயத்தை சோனியா காந்தியின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல உடனே சோனியா காந்தி முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு ராபர்ட் ப்ரூஸ் காங்கிரஸ் வேட்பாளர் திருநெல்வேலியில் உங்கள் கட்சிக்காரர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்று வருத்தப்படுகிறார். நீங்கள் அவர் வெற்றி பெற ஏதாவது செய்ய வேண்டும் இது என் அன்பு கட்டளை என்று சோனியா காந்தி சொன்னதும் ஒரு மாதிரி உருகிப் போய் பேரவை தலைவர் அப்பாவுவை தொடர்பு கொண்டு கடுமையாக கடிந்து கொண்டார்.

அதன் பிறகு கனிமொழிக்காக தூத்துக்குடியில் தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு முதலமைச்சர் சோனியா காந்தி வரை பஞ்சாயத்துக்கு போன விஷயத்தை சொல்லி நீங்கள் உடனே திருநெல்வேலி போய் தேர்தல் வேலை பாருங்கள் என்று சொல்லிவிட்டார். பேரவைத் தலைவர் இப்போது பயந்து போய் என் மகன் சமீபத்தில் தான் திமுகவில் இணைந்தார். அவருக்கு போய் எம்பி வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பேனா இதெல்லாம் வதந்தி நம்பாதீர்கள் என்று பேட்டி தந்து, வரிந்து கட்டிக்கொண்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு தேர்தல் வேலை செய்கிறார் 'என்றார் விகடகவியார்.

'வைகோ பிரச்சனை வேறு மாதிரி' என்று அடுத்த விஷயத்திற்கு தாவினார் விகடகவியார். நாம் உடனே 'வைகோவுக்கு என்ன பிரச்சனை அவர் கேட்டபடி திருச்சி தொகுதி தந்தாகிவிட்டது அப்புறம் என்ன ? 'என்றோம்.

தொகுதி தந்தாகிவிட்டது ஜெயிக்க வேண்டுமே துரை வைகோ பிடிவாதமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட மாட்டேன், மதிமுக சின்னம் பம்பரம் சின்னத்தில் தான் போட்டி போடுவேன் என்றார். அத்துடன் நின்றால் பரவாயில்லை பொது மேடையில் நான் சுயமரியாதைக்காரன் நான் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட மாட்டேன் என்று பேசினார்.

இதை மேடையில் இருந்த அமைச்சர் நேரு ரசிக்கவில்லை. அவர் கூட்டம் முடிந்ததும் முதலமைச்சரை தொடர்பு கொண்டு துரை வைகோ பேச்சை குறிப்பிட்டு அவர் சுயமரியாதைக்காரன் என்றால் எங்களுக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா திமுக சின்னத்தில் போட்டி போட மாட்டேன் என்று சொன்னதை ஒப்புக்கொண்டு அவருக்கு தொகுதி தந்தாகிவிட்டது. அப்புறம் எதற்கு சுயமரியாதைக்காரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போட மாட்டேன் என்ற டயலாக் எல்லாம் என்று கோபமாக முதல்வர் ஸ்டாலினுடன் சண்டை போட்டார் நேரு. இதனைத் தொடர்ந்து பெரம்பலூரில் தன் மகன் போட்டி போடும் தொகுதியில் தேர்தல் வேலை பார்க்க போய்விட்டார் நேரு.

நேரு இல்லை என்றவுடன் திமுககாரர்களும் கண்டுகொள்ளவில்லை. இதனால் பயந்து போய் துரை வைகோ அப்பா வைகோவிடம் புலம்ப அவர் முதல்வர் ஸ்டாலினிடம் கெஞ்ச அதனைத் தொடர்ந்து நேருவிடம் முதல்வர் சமாதானமாக பேசி திருச்சி தொகுதியில் தேர்தல் வேலை பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

வைகோவும் நேருவிடம் என் மகன் ஏதோ ஆர்வக்கோளாறில் பேசி விட்டார். மனதில் ஏதும் வைத்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்ல உடனே மனம் உருகிப்போன நேரு. இப்போது தீவிரமாக தீப்பெட்டிக்கு வாக்கு சேகரிக்க தொடங்கி இருக்கிறார் என்று சொன்ன விகடகவியார் இளநீர் மிகவும் சுவையாக இருந்தது ஆபீஸ் பையனுக்கு தேங்க்ஸ் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.