சமீபத்தில் வெளியாகி மிகவும் பிரபலமடைந்த மலையாள திரைப்படம் மஞ்சுமேல் பாய்ஸ் கொடைக்கானலில் உள்ள குணா குகைகளை மீண்டும் பொது வெளியில் ஒரு பேசுபொருளாக ஆகியிருப்பது என்னவோ உண்மைதான்.
ஆனால் அதற்காக பலரும் இந்த குகை ஒன்றுதான் மிகப்பழமையான ஒன்று என்று நினைப்பது தவறு. கடந்த வருடம் திருவள்ளூர் மாவட்ட வன அதிகாரிகள் பாறை குடியிருப்புகளை குடியம் பகுதியில் கண்டுபிடித்தனர். அவற்றில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய சில ஆயுதங்கள் இருப்பது கண்டெடுக்கப்பட்டது.
அகழ்வாராய்ச்சியாளர் டி கே வீ ராஜன் இந்த பாறை குடியிருப்புகள் குறித்து கூறும்போது நான் பட்ட மேற்படிப்பு படித்து கொண்டிருந்த பொழுது இந்த குடியம் பகுதியில் உள்ள பாறை குடியிருப்புகளுக்கு சென்றுள்ளேன். அந்த பாறை குடியிருப்புகளில் இரண்டரை லட்சம் வருடங்களுக்கு முன் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கூரான ஆயுதங்கள் சிலவற்றை இந்த பகுதியில் இருந்து இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஆராய்ச்சியாளர்கள் சேகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்கிறார் அவர்.
சென்னையில் இருந்து என்பது கிலோமீட்டர் தொலைவில் இந்த பாறை குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதன் மற்றொரு சிறப்பு இந்த குடியிருப்புகள் கொசஸ்தலயாற்றிற்கு மிக அருகில் உள்ளது. எனவே நாகரீகம் தோன்றாத காலத்திலேயே மனிதன் ஆறுகளின் அருகில் வசித்து வந்ததற்கு இது ஒரு முக்கிய சான்று என கூறினார் ராஜன்.
தமிழக வானம், காலநிலை மாற்றம், மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு கூறுகையில் மொத்தம் பதினாறு பாறை குடியிருப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றில் வனத்துறை இரண்டு பாறை குடியிருப்புகளை தேர்ந்தெடுத்து சுற்றுச்சூழல் உலா சென்றிட ஏற்பாடுகள் செய்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த பாறை குடியிருப்புகள் திருவள்ளூரில் முக்கியமானதொரு சுற்றுலா மையமாக மாறும் என்றார் அவர்.
இந்த பாறை குடியிருப்புகள் புலி குன்றம் காப்புக் காடுகள் உள்ளே அமைந்துள்ளன. பிரதான சாலையில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் நடந்தால்தான் இந்த பாறை குடியிருப்புகளை சென்றடைய முடியும். இந்த வகை காடுகளுக்கு தக்காண முள் புதர் காடுகள் என்று பெயர். கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் இந்த வகை காடுகளில் சற்று அதிகமாகவே காணப்படும் என்கின்றனர் வனத்துறையினர். எனவே இந்த பாறை குடியிருப்புகளுக்கு செல்ல உகந்த காலம் மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்கள்.
உலகளவில் குகைகளும் இது போன்ற பாறை குடியிருப்புகளும் மனித இனத்திற்கு பெரிய பொக்கிஷம். புவியியல் மற்றும் அகழ்வாராய்ச்சி ஆகியவற்றின் வழியே பார்க்கும்போது இந்த பாறை குடியிருப்புகள் ஆச்சரியம் ஏற்படுத்துவது இயல்பே. இந்த இடத்தில் இருந்து கொண்டே மனிதன் ஆயுதங்களை செய்து வேட்டைக்கும் தற்காப்புக்கும் பயன்படுத்தியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் குகைகள் மற்றும் குடைவரை கோயில்கள் உள்ளது நம்மில் பலருக்கு தெரியும். இந்தப் பட்டியலில் இப்போது குட்டியம் பாறை குடியிருப்புகளும் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது, என்கிறார் முதன்மை வனத்துறை தலைவர் ஐ அன்வாருதீன்
மாவட்ட வன அலுவலர் வ சுப்பையா கூறுகையில் வெயில் காலம் முடிந்தவுடன் இந்த பாறை குடியிருப்புகளில் மலை தேனீக்கள் கூடு கட்ட ஆரம்பித்துவிடும். எனவே அந்த நேரத்தில் உள்ளே செல்லும் பொழுது மிகவும் ஜாக்கிரதையாக சென்று வர வேண்டும் என எச்சரிக்கிறார் அவர்.
கடைசியாக, குணா திரை படம் எடுக்கப்பட்டதால் பிரபலமடைந்த அந்த பகுதி குகைகள் என்று சொல்வதே தவறு என்கிறார் வனத்துறை அதிகாரி ஒருவர். அந்த பகுதிக்கு பாறை பிளவுகள் அல்லது பள்ளத்தாக்கு போன்று உடைந்த பாறைகள் என்று கூறுவதே சரி. ஏனெனில் அந்த குணா பாறை பிளவுக்குள் சென்று வெளியில் திரும்பாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருபது. அங்கு உள்ளே இருட்டாக இருக்கும். நடக்க வழி உள்ளதா அல்லது பிளவுண்ட பகுதியா என கண்டறிவது மிகவும் சிரமமான விஷயம் என்கிறார் அந்த வனத்துறை அதிகாரி.
மேலும் கொடைக்கானலில் உள்ள தொப்பி தூக்கி பாறைகள் இந்த வகை பாறைகளை சேர்ந்தவை. அவற்றை சுற்றுலா பயணிகள் பிரதான சாலையில் இருந்து கண்டுகளிக்க முடியும். ஆனால் உள்ளே செல்ல முடியாது என்பது மட்டுமே இந்த இரண்டு இடங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்கிறார் அவர்.
Leave a comment
Upload