தொடர்கள்
மகளிர் ஸ்பெஷல்
நேர்மையே பெண்மை- ஜி ஏ பிரபா

20240207172205394.jpg

இந்தப் பிரபஞ்சமே சக்தி வடிவம். அந்த சக்தியின் அம்சமாக திகழும் பெண்களால்தான் இந்த உலகில் வாழ்க்கைப் பயணம் இனிமையாக, மகிழ்சியாக அமைகிறது. அவர்களின் அன்பு கருணை விட்டுக் கொடுத்தல் இவையே உலகை வாழ வைக்கிறது. ஒரு உயிரை பூமிக்குக் கொண்டு வரும் சக்தி அவளிடம்தான் உள்ளது.

எனவேதான்

“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல

“மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”- என்றார் கவிமணி.

தன்னை விரும்பாத பெண்ணை அழிக்கும் ஆவேசம் இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால் வாழ்வின் சுமைகளை சுமந்து சென்று, அனைவரையும் நேசிக்கும் குணம் பெண்களிடம் இருக்கிறது.

வேத காலத்தில் இருந்து பார்த்தோமானால் பெண்களின் வாழ்க்கை பிரமிக்க வைக்கிறது. சத்தியமே பேசி அதன்படியே வாழ்ந்த அவர்கள் சமூகத்தில் சரிசமமாக நடத்தப்பட்டார்கள். உண்மையைச் சொல்ல வெட்கப்படவில்லை. தன் தந்தை யார் என்ற சத்தியக்காமனின் கேள்விக்கு தெரியாது என்று பதில் சொன்ன ஜபாலா முதல் ஆச்சரியம். இதை சொல்வதால் தனக்கு அவமானம் என்று தெரிந்தும் உண்மையே பேசினார்.

அந்த சத்தியம்தான் நேர்மை. அதுதான் வாழ்க்கை. வேதகாலத்தில் மிகப்பெரிய அறிஞர்கள் நிறைந்த சபையில் ஆண்களுக்கு இணையாக அவர்களை எதிர்த்து வாதிடவும், பேசவும் அவர்கள் தயங்கியதில்லை,

அவர்களிடம் தோற்றுப் போவதை ஆண்களும் இழிவாக நினைக்கவில்லை. அறிவுக்கு, சத்தியத்திற்கும் மட்டுமே மதிப்பு தந்து மனித நேயம் மிகுந்த சமுதாயமாக பெண்கள் இருந்திருக்கிறார்கள்.

காலப்போக்கில் அவர்கள் அடக்கப் பட்டாலும், வீறு கொண்டு எழும் வேங்கையாக எழுந்து இன்று சாதனை செய்கிறார்கள். தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் பெண்ணும் தன் திறமைகளால் ஜொலிக்கிறாள்.

எனக்கான உரிமையை தா என்று வேதகாலப் பெண்கள் கெஞ்சவில்லை. இது என் உரிமை, உங்களைப் போலவே இந்த பூமியில் உள்ள இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கும் உரிமை எனக்கு உள்ளது என்று வாழ்ந்து காட்டியவர்கள் அவர்கள். காதலை மென்மையாக மறுத்து அறிவுரை கூறிய விஸ்வவரா, வாழ்வில் சுமைகளை சுமந்து செல்லாதீர்கள் என்ற மமதாவாகினி, முதல் விதவை திருமணம் நடத்தி வைத்த வாகம்பரினி.உலகின் பாவங்களை தான் ஏற்றுக் கொண்டு நதியாக மாறிய, யமி என்று நம்மை அசத்தும் பெண்கள் நிறைந்து இருக்கிறார்கள் வேத காலத்தில்.

வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. இதில் வாழும் நாள் வரை வெறுப்பை சுமந்து செல்லாதீர்கள். இனிமையுடன் வாழுங்கள் என்று அறிவுறுத்துவது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. முழு சுதந்திரம் பெற்ற பெண் சமுதாயமாக வேதகாலம் இருந்ததற்குக் காரணம் நேர்மையே பெண்மை என்று அவர்கள் உணர்ந்து, அதன் படி நடந்ததால்.

குடும்பம், சமூகம் என்று எதில் பெண்கள் ஈடுபட்டாலும் அதை சிரத்தையாகவும், நேர்மையாகவும் உண்மையாகவும் எடுத்துச் செல்லக்கூடிய தகுதி அவர்களுக்கே உண்டு. தொடர்ந்து வந்த காலங்களிலும் அறிவும் ஆற்றலுடன் ஒரு போராட்டம் நடத்தி அவற்றில் ஜெயிக்கும் அந்த தீவிரமும் அவர்களிடமிருந்து.

வீர மங்கைகள் வேலுநாச்சியார், சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட், இந்திராகாந்தி, எழுத்தாளர்கள், இசையரசிகள், விண்வெளிக்குச் சென்ற கல்பனா சாவ்லா என்று எத்தனை சாதனைப் பெண்கள்! தங்கள் இருப்பை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்ற தீவிரமும், ஆர்வமுமே அவர்களை இயங்க வைத்தது.

காப்பிய நாயகியர்கள், பெண்பாற் புலவர்கள் மட்டுமல்ல சேக்கிழார் நாயன்மார்களுக்கு இணையாக வாழ்ந்த பெண்களையும் குறிப்பிடுகிறார். சிவனுக்காக பிள்ளைக்கறி சமைத்த சிறுத்தொண்டரின் மனைவி, மனையறத்தின் வேராகி என்று அவரால் புகழப்படுகிறாள்.

பெண்களின் திறமையை, தனித்துவத்தை அடக்கி வைக்கவே முயன்று வந்திருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி தங்களுடைய துணிவு, தைரியம் திறமை இவற்றின் மூலம் சாதனை புரிந்தார்கள் பெண்கள். எந்த ஒரு சூழ்நிலைகளையும் உண்மை நேர்மை என்பதை விட்டு விலகாமல் நல்லது செய்ய வேண்டும் என்று ஒரே எண்ணத்தோடு பெண்கள் நடந்தால் அவர்களுக்கு என்றும் வெற்றிதான்.

முதலில் தங்களின் தனித்துவத்தை அவர்கள் உணர வேண்டும். பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று உணர்ந்து, உண்மையே சத்தியம், அதுவே பெண்மை என்று நடந்தால் அவளை யாராலும் ஜெயிக்க முடியாது.

பெண்ணை மதிப்பதில்தான் இந்த மண்ணின் பெருமை இருக்கிறது. மதிப்பது போல் நடக்க அவளால்தான் முடியும். ஏனென்றால் சத்தியம், நேர்மையை எப்போதும், யாராலும் தோற்கடிக்க முடியாது.