தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் தடுத்து நிறுத்த வேண்டிய மோசடி

2023921091741327.jpeg

சுங்கத்துறையில் ஓட்டுநர் உள்ளிட்ட நான்கு துறையில் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு சென்னையில் நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் காதில் ப்ளூடூத் கருவி பயன்படுத்தி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த 28 பேர்களும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டார்கள். தேர்வு எழுதும் போது அவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமாக இருந்தபோது அதிகாரிகள் அவர்களை சோதனை செய்த போது இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே 2022-இல் பாதுகாப்பு துறைக்கான பணி தேர்வில் இதேபோல் ப்ளூடூத் பயன்படுத்தி சென்னையில் முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானவை சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

மத்திய அரசு பணிக்கான எழுத்து தேர்வுக்கான இடங்களை இந்தியா முழுவதும் தேர்வு எழுதுபவர்கள் எங்கு வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சலுகை தவறாக பயன்படுத்தி இந்த முறைகேடில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. தவிர தமிழ்நாட்டில் முறைகேடு செய்வதற்கான வசதியான இடம் என்று முடிவு செய்து தான் வட இந்திய இளைஞர்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் போலும் அப்படி என்றால் முறைகேட்டுக்கு உறுதுணையாக இருக்கும். அந்த அதிகார மையம் எது என்றும் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசுக்கான போட்டித் தேர்வில் பெரும்பாலும் வட இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் பணிபுரிகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அஞ்சலகப் பணிக்கான தமிழ் மொழி போட்டி தேர்வில் கூட தமிழர்கள் வெற்றி பெறவில்லை. பெரும்பாலும் ஹரியானாவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றார்கள்.எனவே முறைகேடுகளின் தலைமையகம் தமிழ்நாடு என்று வட இந்திய இளைஞர்கள் நினைக்கிறார்கள் போலும். எனவே எதிர்வரும் காலங்களில் மத்திய அரசிற்கான போட்டித் தேர்வுகளில் அந்தந்த மாநிலத்தில் தான் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் எழுத வேண்டும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என்பதே மத்திய அரசு கொள்கை முடிவாக எடுத்தால்தான் இந்த முறைகேடு தடுக்கப்படும். இப்போதிருக்கும் சூழ்நிலையில் தமிழர்களுக்கான வாய்ப்பை பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தட்டிப் பறித்ததாக தான் இதை பார்க்க வேண்டும்.