தொடர்கள்
ஆன்மீகம்
சநாதன தர்மம் - வினை மற்றும் வினைப்பயன்-ஆர் சங்கரன்

2023919230052557.jpg

உலகிலேயே மறுபிறவி என்ற கொள்கையைத் தெளிவுறச் சொல்லி அதனை வினைப்பயனுடன் சேர்த்து நோக்கி, மனித வாழ்க்கையைச் செப்பனிட்டது சநாதன தர்மம் மட்டும்தான்.

நாம் இப்போது எடுத்துள்ள மனிதப் பிறவி ஒரு தனித்த பிறவி அல்ல. பல்வேறு உயிரினங்களாகப் பலப்பல பிறவிகள் எடுத்து ஏதோ ஒரு நல்ல வினைப்பயனால் இந்த மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. அதன் நோக்கம் மரணமில்லாத மோட்சம் என்பது சநாதன தர்மத்தின் அடித்தளம்.

மறுபிறவி என்பதை எப்படி நம்புவது?

சென்ற பிறவியின் நினைவுகள் எதுவும் நமக்கோ மற்றவர்க்கோ இல்லை. அடுத்த பிறவி என்ன என்பதும் தெரியாது. ஆதலால் ஒரு பிறவியையும் மற்றதையும் தொடர்பு படுத்தும் வழி நமக்குத் தெரியவில்லை. ஆனால், மறுபிறவி என்பதை நாம் அறிந்துகொள்ள அனுமானம் என்ற அறிவியல் முறை கைகொடுக்கின்றது.

ஒரே நாளில் ஒரே இடத்தில் (மருத்துவமனையில்) பல குழந்தைகள் பிறக்கின்றன. அவை எல்லாம் ஒரே போல இருப்பதில்லை. அவற்றின் நிறம், எடை, ஆரோக்கியம் முதலியவை மிகவும் வேறுபடுகின்றன. வெவ்வேறு தாய்தந்தையர்கள் இருப்பதால் அவை வேறுபடும் எனலாம். ஆனால் அவற்றின் வாழ்க்கையுமே வேறு படுகின்றது. இதுதான் அவற்றின் முதல் பிறவி என்றால் அவற்றுள் ஏற்றத் தாழ்வு ஏன்? பிறந்து வளர்ந்தபின் நமது செயல்களுக்குள்ள வினைப் பயனை நாம் அனுபவிக்கலாம். ஆனால் பிறக்கும்போதே உள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு எது காரணம்?

அதுவே அவற்றின் முன்பிறவி வினைப் பயன்கள்.

என்றும் நல்ல செயல்களையே செய்யும் பலர் துன்பப்படுகிறார்கள். சுய நலம் மட்டுமே உள்ள பலர் எந்தத் துன்பத்தையும் அனுபவிக்காமல் இன்பமாக வாழ்கிறார்கள். இந்தப் பிறவியின் செயல் மட்டுமே நமக்கு முக்கியம் என்றால், இந்த வேற்றுமையை விளக்க வழி இல்லை. முன்வினைப் பயன் என்பது நம் கண்முன்னால் நிகழ்ந்துகொண்டு இருக்கின்றது. நாம்தான் அதனைக் காண மறுக்கின்றோம்.

இன்றைய விஞ்ஞானம் இதற்கு ஒரு நல்ல உதாரணம் தருகிறது. நேராக உள்ள ஒரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலான நேரத்தில் நாம் ஒரு வண்டியில் இருக்கிறோம். நமக்கு முன்னால் வண்டிகளின் பெரும் வரிசை. பச்சை விளக்கு நமது கண்முன்னால் தெரிகிறது ஆனால் வண்டிகள் நகரவில்லை. சிறிது நேரம் கழித்து வண்டிகள் நகர்கின்றன ஆனால் அப்போது விளக்கு சிவப்பாகி விட்டது. விளக்கின் நிறத்திற்கேற்ப நம்மால் போக முடியவில்லை ஆனால் அந்த விளக்கின் நிறம்தான் நமது போக்கை நிர்ணயிக்கிறது. அதுபோல முன்வினையே நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது ஆனால் அதை நம்மால் காணமுடிவதில்லை.

அதெல்லாம் சரி, முன்வினைக்கும் இந்த வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? இப்போது என் இன்ப துன்பங்கள் எனது முன் பிறவியின் வினைப்பயனால் அமைகிறது. எனது அடுத்த பிறவியில் இன்பம் மட்டுமே வேண்டும் என்று நினைத்தால் எனது இந்தப் பிறவியின் நடவடிக்கைகள் அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும். எனது இந்தப் பிறவியின் நல்ல மற்றும் தீய செயல்களின் வினைப் பயனாகவே எனது அடுத்த பிறவி அமையும். இதுவே சநாதன தர்மத்தின் அடித்தளம்.

இன்பமான வாழ்வை விரும்பாத மனிதன் உண்டோ?

ஒரு சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் அறத்தின் வழியில் செல்ல விரும்பும்போது, அங்கே வளமையும், அமைதியும், நட்பும் பரவி நிற்கும். தேவைகளுக்கு மட்டும் ஆசை வைத்து, ஆடம்பரத்திற்கும் அகம்பாவத்திற்கும் ஆசைப்படாத ஒரு சமுதாயத்தில் எல்லாவர்க்கும் இனிமையான வாழ்க்கை அமையும். கற்றதும் கேட்டதும் உண்டதும் உடுத்ததும் சேர்த்ததும் செலவழித்ததும் எல்லாம் இந்த பிறவியிலும் நல்ல பெயரைக் கொடுக்கவில்லை அடுத்த பிறவிக்கும் நல்ல வழி அமைக்கவில்லை எனும்போது மக்களின் மன நிலை அறம் சார்ந்ததாகவே அமைந்தது. ஒருவனின் பெருமை அவனது அறச் செயல்களால் சொல்லப் பட்டதே தவிர செல்வத்தாலும் செல்வாக்காலும் அல்ல.

கர்மா, மறுபிறவி, வினைப்பயன், முன்வினைப் பயன் என்ற சநாதன தர்மத்தின் கொள்கைகள் தவிர இந்த உலகியலில் உள்ள வேறுபாடுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும், இன்பதுன்பங்களின் கலவைக்கும் வேறு எந்த காரணமும் யாராலும் சொல்ல இயலவில்லை. இந்த வாழ்வே உண்மை இதில் இன்பம் காண்பதே குறிக்கோள் என்று இருப்பவரும், செய்வதெல்லாம் செய்து விட்டு அவற்றிற்கு மன்னிப்பைக் கேட்டுவிட்டால் சுவர்கம் கிடைக்கும் என்று இருப்பவரும் அவை உண்மை இல்லை என்பதை உணரும்போதுதான் இந்த உலகம் அமைதியும் ஆனந்தமும் பெறும்.

அடுத்த வாரம் அடுத்த கேள்விக்கு பதிலுடன் இணைவோம்.

தங்களுக்கும் இந்த தலைப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் எம்முடன் பகிருங்கள. நமது சங்கரனிடம் பதில் பெறலாம்.