உக்ரைன் நாட்டின்மீது ரஷ்யா பல்வேறு வகைகளில் கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உக்ரைன் ராணுவமும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இப்போர் குறித்து இருதரப்பு நாடுகளும் ஒருவர்மீது ஒருவர் சரமாரி குற்றம்சாட்டி வருகின்றனர்.
பாதிப்பு தலைவர்களுக்கு எப்போதும் இல்லை. பரிதாபப்பட்ட மக்களுக்குத் தான்.
இந்நிலையில், உக்ரைன் நாட்டின் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மிகப்பெரிய சுக்கோவ்கா அணையின் ஒரு பகுதி, கடந்த 2 நாட்களுக்கு முன் இருதரப்பினரிடையே நடைபெற்ற போர் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் அந்த அணையில் இருந்து சுமார் 18 மில்லியன் கனஅடி நீர் வெளியேறியதால், அந்த அணையை சுற்றியுள்ள கெர்சன், சுக்கோவ்கா உள்பட 29 கிராமங்கள் அணைநீரில் மூழ்கி கிடக்கின்றன. அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலர் வெள்ளநீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில், ‘‘இந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை அமெரிக்காவால் உறுதியாக கூறமுடியாது. ஆனால், உக்ரைனில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா இறுதி முடிவுக்கு வரவில்லை. நாங்கள் தகவல்களை சேகரித்து, உக்ரைன் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரையில் இருக்கும் உயிரியல் பூங்கா வெள்ளநீரில் மூழ்கியதில், அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே ‘‘சுக்கோவ்கா அணைமீது நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் கண்ணிவெடிகள் மிதப்பதாகவும், மேலும், அதிகளவு நோய்தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த அணையில் ஏற்கெனவே போடப்பட்ட கண்ணி வெடிகள் நீரில் மிதந்தபடி வெடித்து சிதறுகின்றன!’’ என்று உக்ரைன் நாட்டின் துணை பிரதமர் ஓலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்தார்.
இந்த உக்ரேன் கொடுமை ரஷ்ய போர் என்று முடிவுக்கு வரும்??
உலகமே அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கிறது.
மாலாஸ்ரீ
Leave a comment
Upload