மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பரகலா வாங்மயிக்கும் குஜராத்தை சேர்ந்த பிரதீக் ஜோஷி என்பவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கடந்த 7-ம் தேதி பெங்களூரில் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மயியின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் யாரும் பங்கேற்கவில்லை.
நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மருமகன் யார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா..?
நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மயியை திருமணம் செய்து கொண்ட குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதீக் ஜோஷி, மத்திய அரசின் வணிக ஒதுக்கீடு விதிகள், 1961-ன் அடிப்படையில் பிரதமர் அலுவலகத்தின் செயலக ஆராய்ச்சி மற்றும் வியூகங்களை வகுக்கும் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2019-ம் ஆண்டு இணை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் மேலாண்மை பள்ளியில் பட்டம் பெற்ற பிரதீக் ஜோஷி, குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, அவரது அலுவலகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது பிரதமர் அலுவலகத்தின் ஆராய்ச்சி மற்றும் வியூகப் பிரிவை பிரதீக் ஜோஷி கவனித்து வருகிறார். இதன்மூலம் பிரதமர் மோடிக்கு தேவையான உள்ளீடுகளை சேகரித்து கொடுப்பதில் வல்லவராகவும் திகழ்ந்து வருகிறார். மேலும், பிரதமரின் நிழலாகவும் செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக, அதிகாரிகளின் நியமனங்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு தேவையான உள்ளீடுகள், கருத்துகளையும் பிரதீக் ஜோஷி வழங்கி வருகிறார் என்பது பின்னணி தகவல்.
அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மயி மட்டும் சும்மாவா..?! இவர் ‘மின்ட்’ லவுஞ்சின் புத்தகங்கள் மற்றும் கலாசாரப் பிரிவின் சிறப்பு எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
அது சரி. மத்திய அமைச்சர் என்பதால் எளிமை, அருமை என்றெல்லாம் சொல்கிறோம். நம்மூட்டு கல்யாணத்திற்கு ஓன்னு விட்ட பெரியப்பா பையனின் மனைவியின் அண்ணனை கூப்பிடலைன்னா கூட மண்ணை வாரி தூற்றி விடுவார்கள்.
எளிமையாக கல்யாணம் பண்ணுவதற்கும் மிகப் பெரிய நிலைமையில் இருக்க வேண்டும்.
Leave a comment
Upload