தொடர்கள்
பொது
காட்டுத் தீ !! மஞ்சளாக மாறிய நியூ யார்க் நகரம் - மாலா ஶ்ரீ

20230510074746928.jpeg

(சேபியா என்ற ஃபில்டரை உபயோகப்படுத்தி எடுத்த படமல்ல இது. )

கனடா நாட்டில் கடந்த சில நாட்களாக காட்டுப் பகுதிகளில் தீ வேகமாக பரவி, கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அவற்றை அணைக்கும் பணிகளில் கனடா அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் கனடாவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும், அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமாக காற்றில் மாசு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த காட்டு தீ பரவலால், மான்ஹட்டன் நகரில் உள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் மஞ்சள் நிற புகைமூட்டம் சூழ்ந்திருக்கிறது. இதனால் கனடாவின் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த காட்டுத் தீ அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து சிகாகோவின் மேற்கு பகுதி, தெற்கு அட்லாண்டா மற்றும் நியூயார்க் நகரம் வரை மஞ்சள் நிறமாக மாறி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது வரை இந்த காட்டுத் தீயால் சுமார் 3.8 ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

‘கனடா நாட்டு வரலாற்றிலேயே இது மிக மோசமான காட்டுத் தீ’ என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ தெரிவித்துள்ளார். ‘கடந்த 1960-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஏற்பட்ட தீ விபத்திலேயே இது மிக மோசமான காற்று’ என நியூயார்க் நகர சுகாதாரத்துறை ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். ‘இந்நிலை இன்னும் பல நாட்களுக்கு நீடிக்கும். இது அவசரகால நெருக்கடி’ என்று நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சூல் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நியூயார்க் நகரில் வசிக்கும் பலர் மஞ்சள்நிற சுற்றுச்சூழலை பார்த்து பயந்துபோய் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கத் துவங்கிவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலாஸ்ரீ