திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்கள் சமுதாயத்தை சேர்ந்த 51 பேருக்கு ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல், கடந்த 6-ம் தேதி திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேலும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 10 பேருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சான்றிதழ் வழங்கினார்.
அப்போது அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மெய்விழி என்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கினார். அதை பெற்றதும் மாணவி மெய்விழி கண்ணீர் மல்க நன்றி கூறினார். மேலும், அவர் கலெக்டரிடம் பேசுகையில், ‘‘இந்த சான்றிதழ்தான் எனக்கு பெரிய சொத்தாக உள்ளது. இதை வைத்து நன்றாக படித்து, நரிக்குறவர் இனத்தை சேர்ந்த முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாகவும், இம்மாவட்ட கலெக்டராகவும் வருவேன்!’’ என்று உற்சாகமாக தெரிவித்தார்.
இதில் நெகிழ்ந்துபோன கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்து, மாணவி மெய்விழியிடம் ‘‘நீ ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்கு முன், எனது சேரில் அமரவேண்டும்…’’ என்று தெரிவித்தார். மேலும், அந்த மாணவியை தனது இருக்கையில் அமரவைத்து பாராட்டினார். இதை பார்த்ததும் அங்கு கூடியிருந்த நரிக்குறவர் இன மக்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
மேலும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகரன், கோட்டாட்சியர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் பவளமணி, பாசிமணி மாலைகளை பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தனர்.
அனைத்து நரிக்குறவர் சமுதாயமும் படித்துப் பட்டம் பெற்றால் அந்த இனத்திற்கே ஒரு விடிவு காலம் பிறக்கும்.
கடைசி நரிக்குறவரும் தெருவில் வசிக்காமல் நல்ல வீடுகளில் வசிக்கும் நாள் தான் உண்மையிலேயே நம்மூரில் சமூக நீதி நிலை நாட்டப்படதற்கான அடையாளம்.
Leave a comment
Upload