ஒருவர் தன்னுடைய கடின உழைப்பு மற்றும் ஈடுபாடு கொண்டு செயல்பட்டால் நிச்சயம் மிளிர்வார்கள் என்பதில் ஐயமில்லை. அதிலும் அது கலை சார்ந்த துறை என்றால் அந்நிகழ்வு கலைஞனோடு சேர்ந்து காண்போருக்கும் ஒரு மனநிறைவை தருவதாக அமையும். அத்தகையதொரு அனுபவம் "பவன் 50" என்னும் சிறப்பு நிகழ்ச்சியில் எனக்கு ஏற்பட்டது. "சம்க்யா" என்னும் தலைப்பில் திருமதி. ஸ்ரீநிதி ராகவன் அவர்கள் தன்னுடைய பரதக் கலையின் மூலம் பலவித உணர்வுகளை, அனுபவங்களைக் காண்போருக்கு அளித்து அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினார். ஆண், பெண் இணைந்து செயல்படுவதை புருஷ், ப்ரக்ருதி என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு அதை மிகவும் அற்புதமாக தன்னுடைய நடனம் மூலம் வெளிக்கொணர்ந்தார். அர்த்தநாரீஸ்வரர், பீஷ்மர் மற்றும் அம்பை, ஐயப்பன் என அவரது தலைப்பை ஒட்டிய கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு பாடல் தேர்ந்தெடுத்து அமைந்திருந்தது இவரது பல்வேறுபட்ட திறமைகளை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. இவரது பாவம், மிகக் கச்சிதமான அபிநயமும் அங்கு குழுமியிருந்த அனைவரையும் அவரது கட்டுக்குள் கொண்டு வந்ததில் ஆச்சரியம் இல்லை. நியூயார்க் நகரில், நிதி தொழில்நுட்பம் சார்ந்த துறையில் எப்பொழுதும் பரபரப்போடு இருக்கும் இவர் விகடகவிக்காக அளித்த பேட்டி இங்கே...
பரதநாட்டியத்தில் தங்கள் பயணம் எங்கிருந்து எவ்வாறு தொடங்கியது?
நடனக் கலைஞர்கள் நிறைந்துள்ள குடும்பத்தில் பிறந்தது என்னுடைய அதிர்ஷ்டம் மற்றும் பாக்கியம் என நான் கருதுகிறேன். என் அம்மா மற்றும் பெரியம்மா எனக்கு நடனம் கற்பித்தவர்கள், என்னுடைய குருவும் கூட. சிறு வயதிலிருந்தே என்னை சுற்றி நடனம் மட்டுமே பார்த்து நான் வளர்ந்தேன். எனது சிறு வயது ஞாபகம் நான் க்ரீன் ரூமில் தூங்கி கொண்டிருக்கும் பொழுது எனது தாயார் மேடையில் பரதம் ஆடியதை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். எனவே அது நம் வாழ்வின் ஒரு அன்றாட பழக்கம் என்றே நான் எண்ணினேன். பள்ளி செல்வதைப் போன்று அனைவரும் நடனமும் கற்றுக் கொள்வார்கள் என்றே எண்ணி இருந்தேன். மற்றும் அனைத்து புகைப்படங்களும் நான் அபிநயம் மற்றும் நடனம் போன்று தான் அமைந்திருக்கும். அப்போது மட்டும் தான் நம்மை புகைப்படம் எடுப்பார்கள் என எண்ணியிருந்தேன். பரதம் என்பது என்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. நடனம் கற்பிப்பதை பார்ப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று, நடன வகுப்பில் கூறப்படும் கதைகளை திரும்பத் திரும்ப கேட்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும். என்னை பொறுத்தவரை மகிழ்ச்சியாக இருப்பதற்கு இது ஒன்றே வழி என நினைக்கிறேன். சிறு வயதில் நான் பல நாடுகளில் வசித்திருந்தாலும் பரதம் என்பது என் வாழ்வில் வேரூன்றி இருந்திருக்கிறது. என்னுடைய இந்த பயணம் வார்த்தைகளால் விளக்கமுடியாத ஒரு உணர்வு பூர்வமான தொடர்புடையது என்றே கூற வேண்டும், மிகவும் மகிழ்வாகவும் உணர்கிறேன்.
ஒரு நிகழ்ச்சிக்கு முன்னர் நீங்கள் மேற்கொள்ளும் அடிப்படை தயாரிப்புகள். நுட்பங்கள் பற்றி?
எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அதன் தயாரிப்பிற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின்பும் கூட அது தொடர்கிறது. அடுத்த நிகழ்ச்சியை இன்னும் சிறப்பாக மெருகேற்றி நிகழ்த்தும் பொறுப்பு இருப்பதாகவே நான் உணர்கிறேன். எனவே இது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும் ஒரு செயல்முறையாகும். உதாரணமாக தற்பொழுது லண்டனில் நடைபெற்ற "சம்க்யா" ஆண், பெண் இணைவதை மையமாகக் கொண்டு, அவர்கள் இணைவதன் மூலம் உண்டாகும் தெய்வீகத்தன்மை, அழகு என்ற அடிப்படையில் அமைந்த நிகழ்ச்சிக்கு, யோசிப்பதற்கு எனக்கு மிகுந்த நேரம் தேவைப்பட்டது. முதன் முதலில் இந்த கருத்தை மேற்கொண்டு ஒரு நடன நிகழ்ச்சி யூஸ்டனில் போன வருடம் நிகழ்த்தினேன். அப்பொழுது அர்தநாரீஸ்வரரை மட்டும் மையமாக கொண்டு நடனம் நிகழ்த்தி இருந்தேன். ஆனால் இம்முறை கொஞ்சம் விரிவாக அதாவது ஆண், பெண் மட்டுமல்ல மனித சமூகத்தின் உணர்வுகள், நம்மை ஆழமாக இணைக்கும் அந்த சக்தி இவை அனைத்தையும் நடனம் மூலம் கொண்டுவருவது என்பது முதல் படி. அதனை தொடர்ந்து இது சார்பாக நான் நிறைய படிப்பேன், நிறைய வாசிப்பேன். மஹாபாரதம் சார்ந்த கதைகள் வாசிப்பதோடு இதைப்பற்றி பல அறிஞர்களிடமும், ஆராய்ச்சியாளர்களிடமும் உரையாடல் நிகழ்த்துவேன். இந்த நிகழ்ச்சியில் நான் பீஷ்மர், அம்பை பற்றிய நடனத்திற்கு பேராசிரியர் திரு.ரகுராமன் அவர்கள் தான் பாடல் இயற்றி தந்தார். பிறகு நான் இந்த கதை, வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு எனக்குள் யோசிக்கத் தொடங்கி விடுவேன். நான் இதன் மூலம் என்ன சொல்லப்போகிறேன் என்பதைப் பற்றி சிந்திப்பேன். அடுத்தபடியாக இசைக்கலைஞர்களுடன் கலந்தாலோசித்து, இசையின் மூலம் இதை எவ்வாறு வெளிக்கொணர்வது என்று முடிவு செய்வோம். எனவே வாசிப்பு, அதன் மூலம் நான் சொல்ல விழைவது, அறிஞர்கள் இசைக்கலைஞர்களுடன் உரையாடுதல் மற்றும் என்னுடைய குருவிடம் இதைப் பற்றி பகிர்ந்து கொள்வது. என்னுடைய குருவிடம் உரையாடுதல் என்பது மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் கூறும் பின்னூட்டம் மிகவும் உறுதுணையாக அமையும். சரியாக செய்கிறேனா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் அமையும். ஒரு ரதம் ஒட்டுகிறவர் பீஷ்மராகவோ , கிருஷ்ணராகவோ அல்லது அர்ஜுனனாகவோ இருக்கும் பொழுது ஒவ்வொருவரையும் நான் வேறு விதமாக நடனம் மூலம் கண் முன்னே கொண்டு வர வேண்டும். இது போன்ற நுட்பமான விஷயங்களில் கவனம் செலுத்தி தயாராகுவேன்.
நீங்கள் எவ்வாறு உங்கள் உடல் நிலையை பலப்படுத்துகிறீர்கள் - ஆங்கிலத்தில் ஸ்டாமினா என்று கூறுகிறோமே?
ஆண்டுகள் ஆக, ஆக வயது ஆகும்பொழுது இன்னும் அதற்கான மெனக்கெடல்கள் தேவைப்படுகிறது. சிறுவயதில் அரைமண்டி போடும்பொழுது அது எளிதாக வந்து விடும். ஆனால் இப்பொழுது அது சிறிது கடினம். இருப்பினும் பரத நாட்டிய நிகழ்ச்சி குறித்து சிந்திப்பதன் மூலம் ஒரு ஊக்கம் வந்துவிடுகிறது. இது கற்றல், அதற்கு தயாராகுதல், அதற்கான பயிற்சி, அந்த நிகழ்ச்சியை சிறப்பாக செயல்படுத்த அதை பற்றியே சிந்திப்பதன் மூலமும், அது எளிதாகிறது. பயிற்சி தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும், இது போதும் என்று நிறுத்தாமல் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டே இருக்க வேண்டும். இதோடு கூட வார்மிங் அப், கூலிங்க் டௌன், ஸ்ட்ரெட்சிங் போன்றவற்றோடு உடம்புக்கு அடிபடாதபடி நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி நம்மை நிச்சயம் வெற்றி அடைய செய்யும்.
எந்த வயதில் அல்லது எப்பொழுது நீங்கள் நடனக் கலையை தீவிரமாக எடுத்துக்கொள்ள தீரமணித்தீர்கள்?
என்னுடைய கல்லூரி படிப்பின் போது தீர்மானித்தேன். அமெரிக்காவில் நான் நிதி சார்ந்த மேற்படிப்பு படிப்பதற்காக சென்ற பொழுது நடனமும் என்னுடன் தொடர்ந்து வந்தது. என்னால் இரண்டையும் செய்ய முடியும் என நான் அப்பொழுது தீர்மானித்தேன்.
உங்களுடைய தொழில் பற்றி கூறுங்கள்? நீங்கள் மிக முக்கியமான முதலீட்டு வங்கியில் பணியாற்றி இருக்கிறீர்கள் , அங்கு வேலை பளு மற்றும் எப்படி இவை அனைத்தையும் சமாளிக்க இயலுகிறது?
எனக்கு இரண்டுமே மிகவும் பிடித்தமான விஷயம். அது மட்டுமல்ல அங்கு வேலை செய்வோர் பலரும் பலவித திறமைகள் கொட்டுவார்கள். அவர்களிடம் இதை பற்றி பேசும் பொழுது நமக்கே ஒரு உத்வேகம் பிறக்கிறது. எனவே எப்பொழுதும் நான் என்னுடைய தொழில் மற்றும் நடனம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து ஆங்கிலத்தில் ஜக்லிங் என்று கூறுவது போன்று செயல்பட்டு கொண்டிருக்கிறேன். இது எளிதான காரியம் அல்ல. ஆனால் இவை இரண்டையும் விடாமல் செய்ய வேண்டும் என்ற உறுதி என்னை வழி நடத்தி கொண்டிருக்கிறது.
தங்களுடைய குரு பற்றி ..?
கலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழும் குடும்பத்தில் தினமும் அவர்களது வாழ்க்கை எவ்வாறு வளப்படுகிறது என்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் மாணவர்களுக்காக உணர்ச்சிபூர்வமாக செலவிடும் நேரமும் ஆற்றலும் மிகவும் பாராட்டுதலுக்குரியது. என் அம்மாவிடம், பெரியம்மாவிடம் பயின்ற அனைவரும் எங்களுடைய குடும்ப உறுப்பினர் என்றே கூற வேண்டும். அவர்களின் நடனம், அர்ப்பணிப்பு பற்றி மட்டுமே நாங்கள் பேசி இருக்கிறோம். இந்தக் கலைக்கு தேவையான அனைத்தையும் வழங்கும் ஆசிரியரோடு நீங்கள் இருக்கும் பொழுது உங்களாலும் கற்க முடிகிறது. இந்த கலைக்கு தேவையான நுட்பம் மட்டும் அல்ல, அதனையும் தாண்டி ஒரு பந்தம், மகிழிச்சி நமக்கு ஏற்படுகிறது. இதற்கு என் குரு மட்டுமே காரணம், அவர்கள் தங்கள் வாழ்க்கையை கலைக்காக அர்ப்பணித்து இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். இந்தியாவில் கலாசாகரா ஐம்பது ஆண்டுகளாக, மற்றும் கலாசாகரா யு.கே இருபத்தைந்து ஆண்டுகளாகவும் பல சிறப்பான மாணவிகள், அந்த மாணவிகளிடம் பயின்றவர்கள் என தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார்கள். நான் இங்கு பயின்றதை மிகவும் பெருமையாக கருதுகிறேன், நன்றியோடு எப்போதும் இருப்பேன்.
அமெரிக்கா மற்றும் லண்டனில் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள், இந்த வெவ்வேறு இடங்கள் இந்த கலையை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருந்ததா?
நிச்சயமாக, லண்டனை பொறுத்தவரை இந்த நகரத்தின் பன்முகத்தன்மை என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் பல வித மொழிகளில் பேசுவார்கள், பலருக்கு குறைந்தது இரு மொழிகள் தெரிந்திருக்கும். நியூயார்க் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இங்கு குடியேறி அதிலிருந்து இப்பொழுது மிகவும் மாறி இருக்கிறது, தொடர்ந்து கலைத்துறையில் வளர்ந்து கொண்டே இருக்கிறது. "பிரவாஹா" என்னும் கருத்தரங்கில் நான் சில நாட்களுக்கு முன்பு கலந்து கொண்டிருந்தேன். இப்பொழுது இங்கு பல இளம் நடனக் கலைஞர்கள் வரத்துவங்கி இருக்கிறார்கள். குயின்ஸ்லேண்ட், கலிபோர்னியா, சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் இந்த காலை பல வருடங்களாக வேரூன்றி இருந்திருக்கிறது. நான் வசிக்கும் நியூயார்க், மன்ஹாட்டன் போன்ற இடங்களில் பரத கலையை வளர்க்கும் தாகம் இப்போது பிறந்திருக்கிறது என்றே கூற வேண்டும். இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது.
உங்களுடைய பொழுதுபோக்கு?
நான் நிறைய எழுதுவேன். பல கவிதைகள் எழுதி இருக்கிறேன். இதுவும் என்னுடைய நடனத்தோடு தொடர்பு கொள்ள ஒரு எளிய வழியாகவும் இருக்கிறது.
உங்களின் குடும்பம் எவ்வாறு உறுதுணையாக இருக்கிறது ?
இதை என்னால் வார்த்தைகளால் சொல்ல இயலாது. என் அம்மா, பெரியம்மா முன்பே கூறியது போன்று என்னை மிகவும் ஊக்குவித்தார்கள், என்னுடைய கணவர் எனது மிகப்பெரிய பலம். இரு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நான், அவர் இல்லாமல் இது எதையுமே செய்திருக்க இயலாது.
Leave a comment
Upload