இறுதியாக பிரபாஸ் பாடனில் 2017ம் ஆண்டு ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை மூலம் கட்டப்பட்ட ஸ்ரீராம் மந்திரில்
சிறப்பான தரிசனமும் பெற்றோம். இங்கு குபேர தரிசனமும், பரசுராமர் தரிசனமும் கிடைத்தது. ஆலயம் இரு தலங்கள். தரைத்தளத்தில் ஸ்ரீஇராம பிரானின் வாழ்க்கை வரலாற்றை திரையிட 260 இருக்கைகள் கொண்ட அரங்கம் உள்ளது. முதல் தளத்தில் ஆலய தரிசனம். இங்கு தெய்வத் திருமேனி பளிங்கு கற்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் தள உப்பரிகையில் இருந்து சோம்நாத் பாடனின் அனைத்து ஆலய கோபுரங்களையும் காண முடியும். இந்த ஆலய தோரண வாயிலே ஸ்ரீ இராமரின் வில்-அம்பு தோற்றம் கொண்டது. ஆலயம் பான்சி பஹன்புல் இளஞ்சிவப்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவை இயற்கையான நிறமுடையவை. இதே கற்கள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீஇராம் லல்லா ஆலயத்திலும் பயன்படுத்தப் படுகிறது என்பது கூடுதல் தகவல். அதை நாங்கள் காசி தமிழ் சங்கமத்தின் அயோத்தியா பயணத்தின் பொழுது வழங்கப்பட்ட விளக்கவுரையின் மூலம் அறிந்து கொண்டோம்.
பிரபாஸ் பாடனில் உள்ள தீர்த்தகட்டங்களோடு பல சிறப்பான ஆலயங்களையும் தரிசித்துப் பின்னர் மீண்டும் விழா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்நாடு மட்டும் குஜராத் மாநிலங்களின் ஒருங்கிணைந்த பல்வேறு கலாச்சாரக் கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து, மீண்டும் ஒரு இசைநிகழ்ச்சியோடு இராஜ விருந்துடன் ஐந்தாம் நாளை (19-04-2023) நிறைவு செய்து தங்கும் விடுதியை அடைந்தோம். அப்போது நடந்த நிகழ்வுகள், மருத்துவர் வந்து பரிசோதித்து மருந்துகள் வழங்கியதைப் பற்றி தான் முன்னரே பார்த்தோம்.
சங்கம நிகழ்வின் ஆறாம் நாள், இரயில் பயணம் தவிர்த்து எங்கள் நிகழ்ச்சி நிரலின் மூன்றாம் நாள் (20-04-2023) அதிகாலையே கிளம்பி காலை உணவையும் முடித்து சுமார் 7.30மணிக்கு புறப்பட்டு, சுமார் 4மணி நேரம் சாலை வழியாக குளிர்சாதனப் பேருந்தில் பயணித்து துவாரகையை அடைந்தோம். துவாரகையிலும் எங்களுக்கு இராஜ உபச்சாரம், சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் சிறப்பான சுவாமி தரிசன ஏற்பாடுகளுடன் ஏராளமான ஆச்சரியங்களும், காத்திருந்தன.
நாங்கள் பேருந்தில் இருந்து இறங்கும் போதே, துவாரகையில் மாவட்ட ஆட்சியர், முக்கிய அரசு அலுவலர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மலர் தூவி பரிவட்டம் கட்டி, இன்முகத்தோடு வரவேற்று, மேள தாள வாத்திய முழக்கங்களுடன் எங்களை பகவான் கிருஷ்ணர் ஆண்ட துவாரகாதீஷ் ஆலயத்திற்கு,
அழைத்துச் சென்றனர். அங்கு சீரும் சிறப்புடன் பகவானின் தெய்வீக தரிசனம் கிடைத்தது. துவாரகை கிருஷ்ணர் வாழ்ந்த புராண காலத்திற்கு மாபெரும் சாட்சியாகத் திகழும் புனித பூமி. அங்கு கோம்தி படித்துறையும் உள்ளது.
அங்கிருந்து சுதாமா சேது என்று சொல்லப்படும் இணைப்புப் பாலத்தைக் காணலாம். மதியவேளை என்பதால் நடை சாற்றும் வரை நாங்கள் ஆலயத்தினுள் இருந்தோம். ஆலயத்தில் இருந்து பகவானுக்கு படைக்கப் பட்ட நைவேத்திய பிரசாதத்துடன் சுவாமி படமும் எங்களுக்கு வழங்கப்பட்டது. பின்பு மதிய உணவு மற்றும் சிறு ஒய்விற்காக எங்களுக்கு பேருந்து எண் வரிசைப்படி, ஒரு பேருந்து பிரதிநிதிகளுக்கு ஒரு விடுதி என்ற கணக்கில் நட்சத்திர விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கேயே எங்களுக்கு சிறப்பான அறுசுவை மதிய உணவும் வழங்கப்பட்டன. உணவுக்குப் பின் ஒரு மணி நேர ஒய்விற்காக எங்களுக்கு வழங்கப்பட்ட அறையில் நாங்கள் புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் பேருந்தில் பயணிக்கலானோம்.
துவாராகையில் சௌராஷ்டிர தமிழ் சங்கமத்திற்காக அமைக்கப்பட்ட மாபெரும் அரங்கில், முதலில் மொழி சார்ந்த பயிற்சிபட்டறை சுமார் ஒரு மணி நிகழ்ந்தது. பின்னர் நாங்கள் 4மணியளவில் புறப்பட்டு நாகேஸ்வர் ஜோதிர்லிங்கத்தை
சென்றடைந்தோம். இங்கும் எங்களுக்கான சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு மூலவர் மூன்று முக ருத்திராட்ச வடிவம் உடைய சுயம்புவானவர். மேலும் எண்பது அடியில் பரம்பொருள் ஈஸ்வரரின் பிரம்மாண்ட திருவுருவத்தையும் இங்கு தரிசிக்கலாம்.
இவ்வாலயத்தில் சனீஸ்வர பகவான் வில்லேந்திய கோலத்தில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.
அங்கிருந்து புறப்பட்டு அடுத்ததாக நாங்கள் ருக்மிணி துவாரகையின் ஆலயத்தை வந்தடைந்தோம்.
இந்த ஸ்தல வரலாறு நீரின் முக்கியத்துவத்தை நமக்கு அறிவுறுத்துகிறது. இங்கு ‘ஜல் தீர்த்’ என்ற பெயரில் ஆலயத்தில் பிரசாதமாக நீர் தான் வழங்கப் படுகிறது. அன்னதானம் செய்வது போல இங்கு நீர் தானம் செய்வதன் மூலம் இங்கு வரும் பக்தர்களுக்கு தாக சாந்தி ஏற்படுவதால், நமது பித்ரு தோஷ நிவர்த்தியாகும் என நம்பப்படுகிறது. அதற்கான கட்டணத்தை நாம் QR பரிவர்த்தனை மூலமும் செய்யலாம்.
இங்கு நாம் வழங்கும் நீர் தானம் நம் பல தலைமுறைகளையும் காக்கும்.
அடுத்ததாக ஷிவ்ராஜ்பூர் கடற்கரையில் கயிறு இழுத்தல், இசை நாற்காலி, தேங்காய் எறிதல், கடற்கரை கைப்பந்து எனப் பலவித விளையாட்டுகளிலும் பங்கேற்று, அங்குள்ள பெண்களுடன் குஜராத்தின் க’ர்பா நடனத்தையும் தமிழகத்தின் கும்மியையும் ஆடி முடித்து ஒரு சிறப்பான சூரிய அஸ்தமனத்தைக்
கண்டுகளித்து விழா அரங்கிற்கு வந்தோம். அங்கு கலை நிகழ்ச்சிகளோடு உணவு தயாராக இருந்தது. இரண்டையும் சுவைத்துவிட்டு, சங்கம பிரதிநிதிகள் கலைஞர்களோடு இணைந்து நடனமாடி உற்சாகமாக துவாரகையில் சங்கமத்தை நிறைவு செய்து அங்கிருந்து புறப்பட்டு இரயிலில் இரவு முழுவதும் பயணித்து 21-04-2023 அன்று வடோதராவை அடைந்தோம். அதே இரயிலில் எங்களுக்கு முந்தைய குழு அவர்கள் ஏழாம் நாள் ஏக்தா நகரில் நிறைவு செய்து, சென்னை திரும்ப வடோதராவில் காத்திருந்தனர்.
நாங்கள் மீண்டும் பேருந்தில் சுமார் இரண்டரை மணி நேரம் பயணித்து ஏக்தா நகர் சென்றடைந்தோம். ஏக்தா நகர் நுழைந்ததில் இருந்து நர்மதை ஆற்றின் கரையோரம் இயற்கை அழகை இரசித்தபடியே பயணித்து தங்குமிடத்தை அடைந்தோம். அங்கு நாங்கள் தங்குவதற்காக நர்மதையில் டெண்ட் சிட்டி என்று சொல்லப்படும் காட்டேஜ் வகையிலான ஐந்து நட்சத்திர குடியிருப்புகளில் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அங்கும் எங்களுக்கு ஏகபோக வரவேற்பு அளிக்கப்பட்டது. எங்களுக்கு ஏழாம் நாள் ஏக்தா நகரில் மதிய உணவு முடிந்து உள்நாட்டு பொருட்கள் விற்பனைக்காக மட்டும் பிரத்யேகமாகக் கட்டப்பட்டுள்ள ஏக்தா மாலைப் பார்வையிட்டோம். பின் சர்தார் சரோவர் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு முக்கிய பிரமுகர்கள் மட்டும் பார்வையிடக் கூடிய பகுதியில் நின்று அணையை இரசித்ததோடு, நான்கு மாநிலங்களின் ஜீவ நதியான நர்மதையில் கட்டப்பட்டிருக்கும் சர்தார் சரோவர் அணையின் முக்கியத்துவம் குறித்தும், சர்தார்ஜி கண்ட கனவை மோடிஜி நினைவாக்கியது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அங்கிருந்து நாங்கள் அடுத்ததாக உலகிலேயே மிக உயரமான சிலையான, நம் பெருமைமிகு பாரதத்தின் ஒற்றுமையின் அடையாளமான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் திருவுருவச் சிலையை தரிசித்தோம்.
இங்கு எங்களுக்கு புகைப்படம் எடுத்து அதை Statue of Unity நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த பிரமாண்ட சிலையைப் பற்றியும் சிலை அமைந்துள்ள இடத்தைப் பற்றியும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். முதலில் சிலையின் அமைப்பை வெளியிலிருந்து பார்த்து இரசித்தோம். பின்பு சிலையின் உட்புறம் பயணித்து சர்தார்ஜி உடையின் இரண்டாவது பொத்தான் உள்ள இடத்தில் இருந்து நர்மதை, அணை மற்றும் சிலையின் வெளிப்பக்கத்தையும் கண்டுகளித்தோம். அத்துடன் சிலையின் கட்டுமான நுட்பங்களையும் கண்ணாடி வழியாகக் கண்டு பிரமிப்படைந்தோம். அடுத்ததாக சிலையின் அடித்தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்திலும், அங்கிருக்கக் கூடிய திரையரங்கத்திலும் நம் தேசம் ஒன்றுபடுத்தப்பட்ட வரலாற்றைக் கண்டோம். வேற்றுமையில் நாம் கண்ட ஒற்றுமை தாண்டி, இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ள வேறென்ன வேண்டும் என்பதை ஒற்றுமையின் சிலை நன்கு உணர்த்தியது. அங்கேயே எங்களுக்கு பிரமாண்ட சிலை மீதே காணும் ஒளி ஒலி காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கிருந்து அடுத்ததாக நர்மதை ஆரத்தியை தரிசித்து,
பின் ஆற்றின் நடுவிலேயே ஒளி-ஒலி வடிவில் சிவ தாண்டவத்தையும்
கண்டு மகிழ்ந்தோம். முதலைகள் நடமாடும் பகுதி என்பதால் நர்மதையில் இறங்கி தீர்த்தம் எடுக்க தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் நவ கன்னியர்களில் ஒருவரான நர்மதா தேவியை வீட்டிற்கு எடுத்து வந்தே ஆக வேண்டும் என்று ஈஸ்வரனிடம் வேண்டினேன். அங்கு ஒரு அதிகாரி நின்றுகொண்டிருந்தார். அவரிடம் இதை ஒரு குறையாக சொல்லி, நர்மதை ஆரத்தியை தரிசித்தும், நர்மதை நீர் மேலே படவில்லை, என்று வேதனை தெரிவித்தேன். மீண்டும் டெண்ட் சிட்டியை வந்தடைந்து அங்கு இரவு உணவு பின் கலைநிகழ்ச்சிகள் முடிந்து அங்கேயே தங்கி ஓய்வெடுத்தோம்.
மறுநாள் காலையில் அதே அதிகாரி நர்மதை நீரை எடுத்து வந்து நாங்கள் கிளம்பும் முன், உணவருந்திக் கொண்டிருந்த இடத்திற்கே வந்து வழங்கினார். பின்பு தான் அறிந்து கொண்டேன், அவர்தான் நர்மதா ப்ரோடோகாலின் தலைமை அதிகாரி. நர்மதா மாவட்ட கூடுதல் ஆட்சியர் திரு.வாசவா அவர்கள் தான் எனக்கு நர்மதை தீர்த்தத்தை வழங்கினார் என்பதே மோடிஜி அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம் என்பதற்கான சாட்சி. இது ஈஸ்வரன் அருள் பரிபூரணமாக இருந்தால் அவன் மேல் முழு நம்பிக்கை வைத்தால் வேண்டுவனயாவும் வழங்குவான் என்பதற்கும் இதுவே சாட்சி. எனக்கு வழங்கப்பட்ட தீர்த்தத்தை இன்னும் சில நண்பர்களுரடன் பகிர்ந்து கொண்டு மீதியை வீட்டிற்கு கொண்டு வந்துசேர்த்தேன்.
அன்று 22-04-2023, எட்டாம் நாள் காலையில் சிற்றுண்டி முடிந்து, நாங்கள் பேருந்தில் பயணித்து வடோதரா இரயில் நிலையம் வந்தடைந்தோம். அங்கு எங்களுக்கு சிறப்பான வழியனுப்பும் நிகழ்வும் மேள தாள ஆரவாரத்துடன் நிறைவாக செய்யப்பட்டது. இரயில்நிலையத்தில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வந்து வழியனுப்பினர். எட்டாம் நாள் 22-04-2023 புறப்பட்டு இரு பகல், இரு இரவுகள் பயணித்து ஒன்பதாவது நாள் 23-04-2023 நள்ளிரவு தாண்டி, பத்தாவது நாள் 24-04-2023 அன்று அதிகாலை 2:30 மணியளவில் சென்னை எழும்பூரை வந்தடைந்தோம். அங்கும் எங்களுக்கு இரயில்வே அதிகாரிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் இரயில் தொடர்ந்து மதுரையை நோக்கி பயணித்தது. சென்னையில் இறங்கிய நாங்கள் சுவையான பற்பல அனுபவங்களைச் சுமந்தபடி அவரவர் இல்லங்களை அடைந்தோம்.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முக்கிய நிகழ்வில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பை வழங்கிய நம் பாரதப் பிரதமர் நரேந்திரமோடிஜி அவர்களுக்கும் அதற்காக ஒருங்கிணைந்து செயல்பட்ட குஜராத் மாநில முதல்வர் பூபெந்திர படெல்ஜி அவர்களுக்கும், இந்த சங்கமத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னணியில் செயல்பட்ட கல்வி நிறுவனங்கள், இரயில்வே நிர்வாகம், மற்றும் அனைவருக்கும் எங்கள் நன்றி. காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்டிர தமிழ் சங்கமம் போல தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் மாபெரும் சங்கம நிகழ்வை ஏற்பாடு செய்து வடக்கிலிருந்து கலாச்சார பிரதிநிதிகளை அழைத்து வர வேண்டும், நாமும் நம் விருந்தோம்பலை செய்ய வேண்டும் என்ற ஆவல் எங்கள் அனைவருக்கும் தோன்றியுள்ளது குறிப்படத்தக்கது.
அடுத்த வாரம் தமிழகத்தில் சௌராஷ்டிரர்கள் வரலாற்றை வாசகர்களுடன் பகிர்கிறேன்.
Leave a comment
Upload