கூவம் என்னும் தலத்தை அடுத்துள்ளது மெய்ப்பேடு என்ற மப்பேடு -- சிங்கிஸ்வரர் கோயிற்கலை
7
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் ஞானசம்பந்தரால் பாடல்பெற்ற கூவம் என்னும் தலத்தை அடுத்துள்ளது மெய்ப்பேடு என்ற மப்பேடு, திருவள்ளூர் வட்டத்தில் காஞ்சி செல்லும் பெருவழியில் கூவத்தை அடுத்துள்ளது.
சிங்கீச்சுவரர் கோயில் சிற்பக்கலை
இக்கோயிலில் உள்ள சிற்பங்களை அவை அமைந்துள்ள பகுதிகளைக் கொண்டு தேவகோட்டச் சிற்பங்கள், அர்த்த மண்டபச் சிற்பங்கள், மகா மண்டபச் சிற்பங்கள். முகமண்டபத் தூண் சிற்பங்கள், அம்மன் கோயில் முன் மண்டபச் சிற்பங்கள், விமானச் சிற்பங்கள், கோபுரச் சிற்பங்கள் எனப் பல வகையாகப் பிரிக்கலாம்.
தேவகோட்டச் சிற்பங்கள்
சிங்கீச்சுவரர் கோயில் கருவறைப் புறச் சுவரில் உள்ள தேவகோட்ட மாடங்களில் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் முறையே தட்சிணாமூர்த்தி திருமால், பிரம்மன் ஆகியோரின் தெய்வ உருவங்கள் அமைந்துள்ளன.
தட்சிணாமூர்த்தி
"இவ்வுருவம் சிவபெருமான் கொண்டருளிய இருபத்தைந்து மூர்த்தங்களில் ஒன்று உமையம்மை தக்கன் மகளாய்ப் பிறந்த பழி நீங்குமாறு, அருள்புரிய வேண்டுமென்று சிவபெருமானைப் பணிய
பெருமான் மகிழ்ந்து உமையம்மையை நோக்கி மலையரசனாக இமவான் உன்னை மகளாகப் பெறத் தவம் புரிகின்றான். அவன் மகளாகப் பிறந்து வளர்த்து நம்மை அடைக என்று அருளிச் செய்தார். அம்மை மகிழ்ந்து இமயமலை அடைந்து தாமரைத் தடாகத்தில் குழந்தையாய்த் தோன்றி இமவான் மகளாய் வளர்ந்து பார்வதி என்னும் பெயர் தாங்கித் தவம் இயற்றிச் சிவபெருமானை மணம்புரிந்து மகிழ்ந்தார்.
சிவபெருமான் உமையமமையைப் பிரிந்து கல்லால் மரநிழற்கீழ் தென்திசை நோக்கி யோகியாய் எழுந்தருளி இருந்தார். அப்போது பிரம்ம புத்தர்களாகிய சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் நால் வேதம், ஆறு அங்கங்களைக் கற்றும் அவற்றின் உட்கிடையை அரிய இயலவில்லை. அதனை உணர்த்தியருள வேண்டும் எனப் பிரார்த்தித்தனர். பெருமான் அவர்கட்குத் தம் வலது திருக்கையை மார்பின் நடுவே நிறுத்தி மோன முத்தரையால் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் இயல்புகளையும் பசு, பாசத்தின் நீங்கிப் புதியை அடைதலே முத்தி என்பதையும் உணர்த்தி அம்முனிவர்கட்கு அருள்புரிந்தார். இவ்வாறு கல்லால் மரநிழற்கீழ் தென் திசை நோக்கி சனகாதி முனிவர்கட்கு அறம் உரைக்கும் அண்ணலாகத் தோன்றும் சிவபெருமான் இங்கு வியாக்கியான தட்சிணாமூர்த்தியாக காட்டப்பட்டுள்ளார். இச்சிற்பம் எழில்மிக்கது", என்கிறார் க.ஆ. கவிதா, ஆய்வியல் நிறைஞர் மாணவி (எம்.பிஃல்), வரலாற்றுத் துறை, மீனாட்சி மகளிர் கல்லூரி, சென்னை.
கைலை மீது உள்ள ஆலின் கீழ் தட்சிணாமூர்த்தி வீராசனத்தில் அமர்ந்தவாறு நான்கு கைகளுடன் தோற்றமளிக்கிறார். மேல் வலக்கை ஆடும் நாகத்தைப் பிடித்துள்ளது. இடக்கை அக்கினித் தண்டை கொண்டுள்ளது. சின் முத்திரைக் காட்டும் கீழ் வலக்கை உடைந்துள்ளது. இது சிற்ப நூல்கள் கூறுவவதைப் போன்று சின் முத்திரையில் அமைந்திருத்தல் வேண்டும்.
கீழ் இடக்கை ஏடு ஏந்தும் கரமாக அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்தியின் தலையை விரிந்த ஜடாபாரம் அலங்கரிக்கிறது. ஜடாபாரத்தில் இடப்புறம் இளம்பிறை காட்டப்பட்டுள்ளது. முகப்பை பூரிமம் பதித்த மண்டை அலங்கரிக்கிறது. வலது காதில் மகர குண்டலமும், இடது காதில் பத்தர குண்டலமும் அணி செய்கின்றன. கழுத்தில் கண்டசரமும் மணிவடமும், ருத்திராட்சமாலைகளும் அலங்கரிக்கின்றன. மார்பில் பூணுலும் மேல் வயிற்றில் உதரப் பந்தமும் இடுப்பில் தொடைவரை ஆடையும் காலில் மணிகள் கோர்த்த கழலும் அணி செய்கின்றன.
"இவரது வலது திருவடி முயலகன் மீது அமைந்துள்ளது. இடது திருவடி வலது தொடை மீது படிந்துள்ளது. முகத்தில் இளநகை தவழ்கிறது. தலைமீது உள்ள ஆலமரம் பல்வேறு கிளைகளோடு படர்ந்து காட்சி அளிக்கிறது. ஆலின் மேல் குரங்கு ஒன்றும் கீழ்க் கிளைகளில் அக்கமாலையும் கைப்பையும் காட்டப்பட்டுள்ளன. கைலை மலையின் கீழ் சனகாதி முனிவர் நால்வரும் பிற முனிவர்கள் மூவருமாக ஏழு முனிவர்கள் தத்துவம் கற்கும் நிலையில்காட்டப்பட்டுள்ளனர். தட்சிணாமூரத்தியின் இடப்புறம் அவரது வாகனமான நந்தி சிறிய உருவில் காணப்படுகிறது. வலப்புறம் ஆடும் நாகம் ஒன்று இடதுக் திருவடியை ஓட்டியவாறு காணப்படுகிறது. இதன் உருவ அமைதி. ஆடை, அணிகலன், ஆயுதங்கள் யாவும் கொண்டு கி.பி.16ம் நூற்றாண்டைச் சார்ந்த சிற்பமாகக் கருதப்படுகிறது. கால அடிப்படையில் கூவம் திருவிற்கோல நாதர் கோயில் தட்சிணா மூர்த்தியை விட ஒரு நூற்றாண்டு பிந்தியது. உயரம 86 செ.மீ. அகலம் 36 செ.மீ", என்று தெரிவிக்கிறார் கவிதா.
திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் கடம்பத்தூர் புகைவண்டி நிலைத்திலிருந்து வடக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் இவ்வூரை அடையலாம். ஊருக்கு மேற்கே 5 ஏக்கர் பரப்பளவில் விசாலமான இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
(தொடரும்)
-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)
Leave a comment
Upload