தொடர்கள்
ஆரோகியம்
விரல்களில் விந்தை 10. - ரஜனி சுப்பிரமணியம்

சமான முத்திரை

20230501211643394.jpg

மனித உடலில் பஞ்ச பூதங்கள் சரிவர இயங்கும்போது மட்டுமே, நாம் எந்த நோயுமின்றி ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வருகிறோம். இதற்கு நமக்கு உதவி புரிவது, யோக முத்திரைகள் என்பதும் தெரிந்ததே.

உடலில் உள்ள தச வாயுக்களில் ஒன்றான சமானன் வாயுவானது, தன்னையும், பிராணன், அபானன், உதானன் ஆகிய மூன்று வாயுக்களையும் சமப்படுத்தும் வல்லமையைப் பெற உதவும் முத்திரையே சமான முத்திரை. இது நாளமில்லா சுரப்பிகளான பீனியல், பிட்யூட்டரி ஆகியவைகளை தூண்டி நம்மை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் இயல்புடையது.

முத்திரைகளை செய்வதற்கான விதிகளை நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே வருகிறோம் அல்லவா?

இப்போது, சமான முத்திரையை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். பெருவிரல் நுனியுடன், படத்தில் காட்டியுள்ளது போல மற்ற விரல் நுனிகளை லேசாக தொட்டு ஒரு வட்ட வடிவத்தை ஏற்படுத்த வேண்டும். கைவிரல்கள் குவித்தபடி இருக்க வேண்டும். குவித்த கைவிரல்களை மேல்நோக்கியபடி, கைகளை தொடைமீது வைத்துக் கொள்ள வேண்டும்.

எவ்வளவு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் குணப்படுத்த முடியாத, என்னவென்று கண்டுபிடிக்க முடியாத நோயைக்கூட 15 நிமிடங்களில் குணப்படுத்தும் சுலபமான முத்திரை இது. இதற்கு "முகுள முத்திரை" என்ற பெயரும் உண்டு. வலி எங்கு இருக்கிறதோ, அந்த இடத்தில் இந்த முத்திரையை வைத்தால் வலி உடனடியாக குறைவதை உணரலாம். உதாரணமாக கழுத்தில் வலி இருந்தால், அங்கு இந்த முத்திரையை 5 நிமிடம் வைத்தால் அந்த இடத்தில் ஒரு சக்தி மையம் உருவாகி வலி உடனே குறைவதை உணரலாம்.

ஓட்டப்பந்தய வீரர்கள், குத்துச்சண்டை போடுபவர்கள், நீச்சல் பயிற்சியாளர்கள், பளு தூக்கும் வீரர்கள் ஆகியோர் இந்த முத்திரையை தினமும் 20 நிமிடங்கள் செய்துவந்தால் அவர்களது உடலும், மனமும் உறுதியாகி வெற்றிக்கு வழிவகுத்துக் கொள்வார்கள் என்பது திண்ணம்.

வேலைச்சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகுவலி, கழுத்துவலி, உடல் வலிகள் போன்றவை சரியாகும்.தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் இதை பயிற்சி செய்தால், ஆண்களுக்கு விந்தணு வீரியதன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.

இந்த முத்திரை, பஞ்சபூதங்களையும் சமமாக இயக்குவதால் மூளை செல்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை பாய்ச்ச உதவுகிறது. எதிர்மறை எண்ணங்களை குறைத்து, நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துகிறது.

இந்த சமான முத்திரைக்கு "சங்கல்ப முத்திரை" என்ற பெயரும் உண்டு. வாழ்க்கையில் எதை அடையவேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை ஆழ்மனதில் நிறுத்தி இம்முத்திரையை வைத்துக்கொண்டு கண்களை மூடி பயிற்சி செய்யும்போது சங்கல்பம் என்று சொல்லக்கூடிய நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு வேண்டிய ஆற்றல் நமக்கு கிடைக்கும்.

இது, சுக்ரி முத்திரை, திரிதோஷ நாஷக் முத்திரை மற்றும் கொக்கு கை முத்திரை என்ற பெயர்களையும் கூட கொண்டுள்ளது. பெயருக்கேற்ப இந்த முத்திரை வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சமநிலைப்படுத்துகிறது. தியானத்தில் அமரும்போதும், பிராணாயாமம் செய்யும்போதும் இந்த முத்திரையை பயன்படுத்துவது மிக்கபலனைத்தரும்.

தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சில நிமிடங்கள் இதை செய்வதால் துணிவும், விடாமுயற்சியும் அதிகரித்து, நல்ல சிந்தனைகள் பெருகி, மனஅமைதி நிலைபெறுவதை உணர்வுபூர்வமாக அனுபவிக்கலாம்.

மனத்தை ஒடுக்கி, தன்னையும் தன்னுள் இருக்கும் மெய்ப்பொருளையும் உணரவைக்கும் இந்த சமான முத்திரையை பயிற்சி செய்து வளமாகவும், நலமாகவும் வாழ்வோம். "தன்னை அறிந்தால் தனக்கொரு கேடில்லை" என்பது திருமூலர் வாக்கு அல்லவா?

தொடரும்