தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு – 19- பரணீதரன்

‘மாறுதலை’ மாறி மாறி விளக்கியுள்ளார் காளமேகப்புலவர்.

ஒரு பொருள் குறித்த பல திரிசொல் - செய்யுள்

யானையை குறிப்பதற்கு பல்வேறு பெயர்களை கீழே உள்ள செய்யுளில் அழகாக கையாண்டுள்ளார் ‘அந்தகக் கவி’ வீரராகவ முதலியார்.

20230501225227947.jpg

“இம்பர் வான் எல்லை இராமனையே பாடி

என் கொணர்ந்தாய் பாணா நீ“, என்றாள் பாணி

வம்பதாம் களபமென்றேன் – பூசுமென்றாள்

மாதங்கமென்றேன் - யாம் வாழ்ந்தோமென்றாள்

பம்பு சீர் வேழமென்றேன் - தின்னுமென்றாள்

கம்பமா என்றேன்-நற்களியாமென்றாள்

கைம்மா என்றேன்-சும்மா கலங்கினாளே !

மனைவி (பாணி): ‘இராமன் என்கிற வள்ளலின் புகழ் பூமியெங்கும் வானமெங்கும் பரந்திருப்பதாகச் சொல்வார்கள், அப்படிப்பட்ட இராமனைச் சந்தித்துப் பாடச் சென்றாயே, அங்கே என்ன நடந்தது? என்ன பரிசு பெற்றுவந்தாய்? எங்களூக்கு என்ன கொண்டுவந்தாய்?

பாணன்: வம்பதாம் களபம் (கயிறு அணிந்த யானை)

பாணி: ஓ, வாசனை உடைய சந்தனத்தைப் பெற்றுக்கொண்டுவந்தாயா? நல்லது, அதை நீயே பூசிக்கொள்!

பாணன்: சந்தனம் இல்லை, மாதங்கம் (யானை)

பாணி: ஓ, மா தங்கம், உயர்ந்த தங்கத்தைப் பரிசாகப் பெற்றுவந்தாயா? இனி நம் துன்பம் தீர்ந்தது, நாம் மகிழ்ச்சியாக வாழலாம்

பாணன்: தங்கம் இல்லை, பம்பு சீர் வேழம் (நிறையப் புகழ் உடைய யானை)

பாணி: ஓ, செழிப்பான கரும்புதான் பரிசாகக் கிடைத்ததா? சரி, அதைக் கொண்டு வா, முறித்துச் சாப்பிடலாம்

பாணன்: கரும்பு இல்லை, பகடு (யானை)

பாணி: ஓ, வள்ளல் உனக்கு எருமைக்கடாவைக் கொடுத்தாரோ? பரவாயில்லை, நம் வயலை உழுவதற்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

பாணன்: எருமை இல்லை, கம்பமா (அசைகின்ற யானை)

பாணி: ஓ, கம்ப மா, கம்பினால் செய்யப்பட்ட மாவு பரிசாகக் கிடைத்ததோ? கொண்டு வா, அதை வைத்து நல்ல களி கிண்டித் தின்னலாம்

பாணன்: கம்பு மாவு இல்லை, கைம்மா (கையை உடைய விலங்கு)

பாணி: அடடா, யானையா? அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்வது? (கலங்கி நிற்கிறாள்)

சந்தனம் – பூசும்
கரும்பு – தின்னும்
எருமைக்கடா – உழும்

ஒருமையில் வருகிறது மறுமொழிகள். ஒரு எரிச்சல்.

ஓ சந்தனமா குடுத்தான்… பூசிக்கோ. கரும்பா, நீயே தின்னு. எருமைக்கடா வாங்கீட்டு வந்திருக்க. போய் வயல்ல உழு. ஒரு எருமைமாடு வாங்கீட்டு வந்திருந்தா பால் வித்துப் பொழச்சிருக்கலாம். தன்னுடைய எரிச்சலை அழகாக வெளிப்படுத்துகிறாள் அந்தப் பாணி.

பல பொருள் குறித்த ஒரு திரிசொல் - செய்யுள்

‘மரம்’ என்ற ஒரு சொல்லை வைத்து பல்வேறு விதமான பொருள்களை விளக்கி உள்ளார் சுந்தரக் கவிராயர்.

20230501225343934.jpg

மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,

மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது

மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்

  • மரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.
  • மரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.
  • மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்). அதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான். அப்போது,
  • மரமது - மீண்டும் அரசு
  • மரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.
  • மரத்தினால் - மீண்டும் வேல் -
  • மரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை. அதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,
  • மரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,
  • மரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,
  • மரமுடன் - ஆல் மரம்
  • மரமெடுத்தார் - அத்தி மரம்

அதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி (ஆரத்தி) எடுத்தார்.

இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:

அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.

‘திருவாவினன்குடி’ (திரு ஆவினன்குடி) என்ற ஒரு சொல்லை வைத்து பல்வேறு விதமான பொருள்களை விளக்கியுள்ளார் அருணகிரிநாதர். கந்தர் அந்தாதியில் உள்ள 100 செய்யுள்களுமே இவ்வாறு அமைந்தவைகளே.

20230501225435327.jpg

திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச

திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்

திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற

திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே

திரு ஆவி நன்குடி பங்காளர் எண் முது சீர் உரை

(ச) திர் உவாவினன் குடி வான் ஆர் பரங்குன்று சீரலைவாய்

திரு ஆவினன்குடி ஏரகம் குன்றுதோறாடல் சென்று

(அ) திர் உவா இனன் குடிகொண்ட தண்கார்வரை செப்புமினே.

திரு ஆவி - லட்சுமி தேவிக்கு நாயகனாகிய திருமாலும்,

நன்குடி பங்காளர் - நல்ல பெண் தெய்வமாகிய உமையை இடப்பக்கத்தில் வைத்திருக்கும் சிவபெருமானும்,

எண் - மதிக்கும் விதத்தில்,

முது - பழமையான வேதத்திற்கு,

சீர் உரை - சிறந்த பொருளை விளக்கிய,

திர் - சாமர்த்தியம் உடைய,

உவாவினன் - இளங்குமாரனாகிய முருகப்பெருமான்,

குடி - நிரந்தரமாக வாசம் செய்யும்,

வான் ஆர் பரங்குன்று - வானளாவும் திருப்பரங்குன்றம்,

சீர் அலைவாய் - சிறந்த திருச்செந்தூர்,

திருவாவினன் குடி - திரு பழநி,

ஏரகம் - சுவாமி மலை,

குன்றுதோறாடல் - அந்தக் கந்தக் கடவுள் திருவிளையாடல் செய்த பல குன்றுகள்,

சென்று - நடந்து,

திர் - பூமி அதிர்கின்ற,

உவா இனன் - யானைக் கூட்டங்கள்,

குடி கொண்ட - வாழ்கின்ற,

தண் - குளிர்ந்த,

கார்வரை - கருமேகங்கள் சூழ்ந்த பழமுதிர்சோலையையும்,

செப்புமின் - துதி செய்யுங்கள்.

‘மாறுதலை’ என்ற ஒரு சொல்லை வைத்து பல்வேறு விதமான பொருள்களை விளக்கியுள்ளார் காளமேகப்புலவர்.

20230501225531553.jpg

சங்கரர்க்கு மாறுதலை சண்முகர்க்கு மாறுதலை

ஐங்கரர்க்கு மாறுதலை யானதே – சங்கைப்

பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம்

பிடித்தோர்க்கு மாறுதலை பார் !

சங்கரர்க்கும் ஆறு தலை சண்முகர்க்கும் ஆறுதலை

ஐங்கரர்க்கும் மாறு தலை ஆனதே சங்கைப்

பிடித்தோர்க்கு மாறு தலை பித்தாநின் பாதம்

பிடித்தோர்க்கும் ஆறுதலை பார் .

எல்லாருக்கும் ஆறு தலை என்று பாடியது.

சங்கரன் தலையில் கங்கை ஆறு உள்ளது.

சண்முகனுக்கு ஆறு தலைகள் உள்ளன.

ஐந்து கை கொண்ட பிள்ளையார்க்கு மாறுபட்ட யானைத்தலை உள்ளது.

சங்கைப் பிடித்த திருமாலுக்கும் வராக அவதாரம் நரசிம்ம அவதாரம் போன்றவற்றில் மாறுபட்ட தலை இருந்தது.

பித்தா! (சிவனே)

உன் திருவடிகளைப் பற்றிய அடியவர்களுக்கும் ஆறுதல் இருப்பதை நீயே பார்.

‘ஆலங்குடியான்' என்ற ஒரு சொல்லை வைத்து பல்வேறு விதமான பொருள்களை விளக்கியுள்ளார் காளமேகப்புலவர்.

20230501225625279.jpg

ஆலங்குடி யானை யாலால முண்டானை

ஆலங்குடியா னென்றார் சொன்னார் – ஆலங்

குடியானே யாயிற் குவலையத்தா ரெல்லாம்

மடியாரோ மண்மீ திலே

ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை

ஆலங்குடியான் என்று ஆர் சொன்னார் ஆலம்

குடியானே ஆயின் குவலையத்தார் எல்லாம்

மடியாரோ மண் மீதிலே .

திருவாலங்குடியில் கோயில் கொண்டுள்ள சிவன் ஆலாலம் (ஆலகால விடம்) உண்டான். அவனை ஆலம் (விடம்) குடிக்காதவன் என்று ஆர் சொல்லிவைத்தார்கள்? அவன் நஞ்சினைக் குடிக்காவிட்டால் மண்ணுலகில் உள்ள மக்களெல்லாம் அந்த நச்சுக் காற்றை உட்கொண்டு மடிந்துபோவார்கள் அல்லவா?

இன்னும் சொல்லாடுவோம் ......