திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயிலின் சடாவர்மன் சுந்தரபாண்டியன், இராசநாராயண சம்புவராயர், விஜய நகர மன்னன் காலக்கல்வெட்டுகள்:
திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயிலின் வெளியே மேல் திசையிலுள்ள மடுவிற்கு தற்போது திருத்தேர்த்துறை என்று பெயர் வழங்கப்படுகின்றது. ஆனால் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் திருப்பாலைவனம் என்ற இவ்வூர் திருத் தேரத்துறை என்ற பெயரால் அழைக்கப்பட்டதற்குக் கல்வெட்டுச் சான்று உள்ளது.
இக்கோயில் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் எடுக்கப்பட்டு பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் மீண்டும் சரிசெய்து கட்டப்பட்ட இறைவன் சன்னதியையும், பின்னர் இராசநாராயண சம்புவராயன் காலத்தில் பழுது பார்க்கப்பட்ட அம்மன் சன்னதியையும் கொண்டுள்ளது. நடராஜர் மண்டபம், கல்யாண மண்டபமும், அம்மன் சன்னதியின் முன் மண்டபமும் விஜயநகரர் காலத்தியது. மொத்தக் கோயிலையும் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்றுமதில் சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவையாகும். முதல் திருச்சுற்றில் காணப்படுகின்ற ஆலாலசுந்தரன் திருநந்தவனம் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் உருவாக்கப்பட்டது.
திருப்பாலீஸ்வரர் கருவறைச் சுவர், அம்மன் சன்னதி, கருவறை சுவர், நடராஜர் மண்டபத்தின் வெளிப்புறச் சுவர், நடராஜர் மண்டபத்தூண் ஆகிய இடங்களில் கல்வெட்டுகள் உள்ளன.
கருவறை முன் உள்ள நடராஜர் மண்டபத்தினை மகா மண்டபம் என்று அழைக்கின்றனர். அம்மண்டபத்தூணில் காணப்படுகின்ற ஒரு தெலுங்குக் கல்வெட்டு, இம்மண்டபத்தைக் கட்டியவனின் பெயரைக் குறிபிடுகிறது. மேலும் இரண்டு தமிழ்க்கல்வெட்டுகள் மகாமண்டபம் கட்டப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
ஓபுல ராஜய்ய மகன் ரெட்டிராஜா கட்டிய மண்டபம்
தெலுங்கு வருடமான காளயுக்தியில் மேக இராம நமோ மண்டலேஸ்வர மந்திர மீசர கண்டர் ஹரி ஹர்பரோர் ஓபுல ராஜய்ய மகன் ரெட்டிராஜா கட்டிய மண்டபம் என்பது இம்மண்டபத்தூணில் காணப்படுகின்ற தெலுங்கு கல்வெட்டின் தமிழாக்கமாகும். எனவே ஒபுல ராஜய்ய என்பவரின் மகனான ரெட்டிராஜா என்பவனால் இம்மண்டபம் கட்டப்பட்டது என்று தெரிகிறது.
கோயிலிலுள்ள ஒரு தமிழ்க்கல்வெட்டு இக்கோயிலின் மகா மண்டபமும், கோயிலின் படிகளும், பையூர்கோட்டத்தைச் சார்ந்த ஆமூரிலுள்ள ஒருவரால் கொடையாகக் கொடுக்கப்பட்டவை என்று தெரிவிக்கிறது. மற்றொரு கல்வெட்டு, இக்கோயில் மண்டபமும். கோயில் படிகளும் அண்ணப்பிள்ளை என்பவரால் கட்டி கொடுக்கப்பட்டவை.
மேற்கூறப்பட்ட மூன்று கல்வெட்டுகளும் குமாரவீரசாயன உடையார் என்ற தெலுங்கு மன்னனின் காலத்தைச் சார்ந்தவை. இரண்டு தமிழ்க் கல்வெட்டுகளில் ஒன்றில் மன்னனின் 10ஆம் ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு தமிழ்க் கல்வெட்டுகளில் ஒன்று மகாமண்டபம் கொடையளித்தவன் பெயரும், மற்றொரு தமிழ் கல்வெட்டில் அவனது ஊரையும் குறிக்க மண்டபத்தூணில் உள்ள தெலுங்கு கல்வெட்டு அம்மண்டபத்தைக் கட்டினவன் பெயரையும் குறிப்பிடுகின்றன.
விஜய நகர மன்னனின் 10ஆம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு
எனவே, இம்மண்டபம் வீரசாயன உடையார் என்ற விஜய நகர மன்னனின் 10ஆம் ஆட்சி ஆண்டில், பையூர் கோட்டம் ஆமூரைச் சார்ந்த அண்ணபிள்ளை நாயக்கரால் எடுப்பிக்கப்பட்டது என்றும் ஓபுல ராஜய்யாவின் மகனான ரெட்டிராஜா என்பவரால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் இக்கோயில் படிகளும் இவராலேயே எடுப்பிக்கப்பட்டது. மகா மண்டபத்தில் நடராஜருக்கென்று தனிக்கருவறையொன்று அமைக்கப்பட்டுள்ளது,
நடராஜர் மண்டப பகுதியில் தூண்கள்
நடராஜர் மண்டப பகுதியில் எட்டு முழுத்தூண்கள் காணப்படுகின்றன. வாயிலை அடுத்துள்ள படிகளின் இருபுறங்களிலும் இரண்டு அரைத்தூண்கள் உள்ளன.
பல மன்னர்களின் உருவங்கள் இத்தூண்களில் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அமைப்புடையவை. சில தூண்களில் விஜய நகர மன்னர்களின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு தூணில் வீரபத்திரர் உருவம் காணப்படுகிறது. மேலும் முருகன் மயில் மீதமர்ந்து இருக்கும் காட்சி, வீர ஆஞ்சநேயர் உருவம், புலியுடன் சண்டையிடும் வீரனின் தோற்றம், நாகலிங்கம், நர்த்தன விநாயகர். சிம்மக்கொடி, பெண் அடியார், நாட்டியமங்கை, திறந்த வாயுடைய மகரம், நர்த்தன காளி, நர்த்தனமாடுகின்ற குள்ள பூதம் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலின் தல புராணத்தைச் சித்திரிக்கும் வண்ணம், பாலைவன நிழலில் லிங்கம் அமைந்திருக்கும் காட்சி இரு துண்களில் செதுக்கப்பட்டுள்ளது.
அம்மன் கோயில் கட்டப்பட்ட காலம்
இக்கோயில் இறைவன் சன்னதியின் தென்புறம் கிழக்கு நோக்கி அம்மன் சன்னதி அமைந்துள்ளது.
"அம்மனுக்குப் பிற்காலத்தில்தான் கோயில் எடுக்கப்படிருக்க வேண்டும். ஏனெனில் மூன்றாம் இராசராசன் காலத்திலிருந்துதான் கல்வெட்டில் அம்மன் கோயில் பெயர் இடம் பெற்றுள்ளது. அதற்கு முந்திய சோழமன்னர்கள் கல்வெட்டுகள் எதுவும் இதனைப்பற்றிக் குறிப்பிடவில்லை. திருப்பாலைவனமுடையார்க் கோயிலிலுள்ள பெரிய நாச்சியார் சன்னதிக்கு விளக்கு எரிப்பதற்கு ஒரு வணிகன் பணம் கொடுத்தான் என்று மூன்றாம் இராசராசனின் கல்வெட்டுக் குறிப்பிலிருந்து, இம்மன்னன் காலத்தில்தான் அம்மன் சன்னதி கட்டப்பட்டது எனக் கூறலாம். இவனுக்குப் பின்னர் வந்த சடாவர்ம சுந்தர பாண்டியன், இராசநாராயண சம்புவராயர் ஆகியோர் காலக்கல்வெட்டுகளும் அம்மன் சன்னதியைக் குறிப்பிடுகின்றன", என்று தெரிவிக்கிறார் எழுத்தாளர் தமிழி.
அம்மன் சன்னதியில் விளக்கு எரிப்பதற்காக, தேவன் என்பவன் பணம் கொடுத்துள்ளான் என்று சடாவர்ம சுந்தர பாண்டியனின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு அம்மன் கோயில் கருவறை தென்புறச்சுவரில் உள்ளது.
பழுது பார்க்கப்பட்ட அம்மன்கோயில் -- கல்வெட்டு செய்தி
சடாவர்மன் சுந்தரபாண்டியனுக்குப் பின்னர் இப்பகுதியை ஆண்ட திருவண்ணாமலை மாவட்ட படவேட்டினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சம்புவராயர் காலத்துக் கல்வெட்டில் அம்மன் கோயில் பற்றிய குறிப்பு வருகிறது. சம்புவராய மன்னர்களில் சிறந்த அரசனாக விளங்கிய இராசநாராயண சம்புவராயரின் 3ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் இக்கோயில் பழுது பார்க்கப்பட்டது என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. இக்கோயில் பழுது பார்க்கப்படுவதற்க திக்கமநாயக்கர் என்பவரின் பிரதிநிதியால் ஏற்பாடு செய்யப்பட்டது என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டும் அம்மன் கோயில் கருவறையின் தென்புறச் சுவரில்தான் காணப்படுகிறது. எனவே மூன்றாம் இராசராசன் காலத்தில் எடுக்கப்பட்ட அம்மன் சன்னதி இராசநாராயண சம்புவராயர் காலத்தில் மீண்டும் பழுது பார்க்கப்பட்டது என்று தெரியவருகிறது.
கி.பி. 1094இல் நந்தவனம் - கல்வெட்டுக் குறிப்பு
சாத்தனூர் கிராமத்திலுள்ள இந்தம்பேட்டு என்ற ஊர்த் தலைவனால் திருப்பாலைவனமுடைய நாயனார் கோவிலுக்காக ஆலாலசுந்தரன் என்ற பெயரில் ஒரு திருநந்தவனம் ஏற்படுத்துவதற்காக நிலம் விலைக்கு வாங்கிக் கொடுக்கப்பட்டது என்று முதலாம் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இது அம்மன்னனின் 24ஆம் ஆட்சியாண்டைச் சார்ந்தது. முதல் குலோத்துங்கன் கி.பி. 1070 இல் அரசு ஏற்றதால் இக்கல்வெட்டுக் குறிப்புப்படி இந்த நந்தவனம் கி.பி. 1094இல் ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
"கி.பி. 1094இல் முதல் குலோத்துங்கன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்நந்தவனம் சமீப காலம் வரை சிறந்த பராமரிப்புடன் இருந்து வந்தது. சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பழவேற்காட்டில் வாழ்ந்திருந்த ஒரு செட்டியார், இந்த நந்தவனத்தின் பராமரிப்புக்குப் பணம் அனுப்பி, புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார். விசாகத்தன்று நந்தவனத்து மலர்களை எடுத்து ஆறுமுக சுவாமிக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யவும் ஏற்பாடு செய்திருந்தார். மற்ற நாட்களில் அனைத்து இறைவருக்கும் இம்மலர்களைப் பயன்படுத்தினர். தற்போது இந்த நந்தவனம் பராமரிக்கபடாமல் உள்ளது", என்கிறார் தமிழி.
சுந்தரபாண்டியன் திருமதில்
கல்வெட்டுக் குறிப்புப்படி இக்கோயிலின் திருச்சுற்று மதில் சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் எடுப்பிக்கப்பட்டது. அளி நல்லூரைச் சார்ந்த நிலங்களை பையூர்க் கோட்டத்தார் ஊர்ச்சபையோர் இக்கோயில் திருமதில் எடுப்பதற்காக விட்டுக் கொடுத்தனர் என்றும், அம்மதில் பின்னர் சடாவர்மன் சுந்தர பாண்டியனின் பெயரால் அழைக்கப்பட்டது என்றும் அக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இது சுந்தர பாண்டியனின் 14ஆம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டது. எனவே இக்கோயிலின் திருச்சுற்று மதில் சடாவர்மன் சுந்தரபாண்டியனின் 14ஆம் ஆட்சியாண்டில் கட்டப்பட்டது என்பது தெரிகிறது.
பெயரற்ற நந்தவனம்
"கோயில் குளத்திற்குக் கிழக்கே ஒரு நந்தவனம் காணப்படுகிறது. இது சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவு உடையது. முன்னர் குறிப்பிட்ட ஆலால சுந்தர நந்தவனத்தைத் தவிர வேறு இரண்டு நந்தவனங்கள் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளது.
1. பக்தர் சித்தத்துறைவன் திருநந்தவனம் 2. ஐம்பத்தெழுவர் திருநந்தவனம்
இவ்விரண்டில் ஒன்றாக அது இருக்கக்கூடும். ஆனால் தற்போது அதற்கு எந்தப்பெயரும் வழங்கப்படாத காரணத்தாலும் அதன் தோற்றம் பற்றி அறிய முடியாததாலும் குறிப்பாக ஒன்றினைச் சுட்டிக்காட்ட முடியவில்லை", என்று கூறுகிறார் தமிழி.
நன்றி: 'திருவள்ளூர் மாவட்ட தடயங்கள்':
(தொடரும்)
-- ஆர் . ரங்கராஜ், தலைவர், சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை,
9841010821 rangaraaj2021@gmail.com)
Leave a comment
Upload