கடந்த ஞாயிறன்று சங்கீத ஆர்வலர்களால் இசை உலகின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது பாம்பே ஜெயஸ்ரீக்கு வழங்கப்படப் போவதாக அறிவிப்பு வெளியானது. அவரும் தன்னுடைய twitter பக்கத்தில் அதனை ஏற்று அது குறித்து மிகவும் சந்தோஷமாக பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.
யார் கண் பட்டதோ, வியாழக்கிழமை காலை லிவர்பூல் நகரில் உள்ள அவரது ஹோட்டல் அறையில் மயங்கிய நிலையில் காணப்பட்ட அவரை, அறையின் கதவை உடைத்து திறந்து மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அவரது உடன் இருந்த பக்க வாத்தியக் கலைஞர்கள் சேர்த்தனர். உடனே சிறப்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் இது நிகழ்ந்தது என தெரிவித்த அவர்கள் இது நிச்சயம் சரிசெய்யப்படக்கூடிய தே என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை முடிந்து அவருடைய உடல்நிலை சீரான உடன் அவர் சென்னைக்கு அழைத்துவரப்படுவார் என தெரிகிறது. 24 மார்ச் அன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதனோடு அவருடைய பிரிட்டிஷ் சங்கீத பயண நிகழ்வுகளும் முடிவுக்கு வந்து விட்டது. கடந்த நிகழ்ச்சியை கேட்டவர்கள் அந்த மயக்கத்திலிருந்து இன்னும் விடுபடாத நிலையில், இந்த செய்தி பேரிடியாக இறங்கி பிரிட்டிஷ் சங்கீத ரசிகர்களை மட்டுமல்ல , அகில உலக கர்நாடக சங்கீத ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
மூன்று நாட்களுக்கு முன்னர் அவருடைய பக்கவாத்திய கலைஞர்களில் ஒருவரான கட வித்வான் கிரிதர் உடுப்பா," லிவர்பூல் நகர தெருக்களில் அக்காவுடன் சுற்றி வந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள்" என்று புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
திடீரென எப்படி அவருக்கு மூளையில் ரத்தாகி கசிவு ஏற்பட்டது என்பது அனைவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. கழுத்து வலியிருப்பதாக சொன்ன ஜெயஸ்ரீ காலை உணவுக்கும், மத்திய உணவுக்கும் கதவைதிறக்காததால் சந்தேகப்பட்டு கதவை ஓட்டல் சிப்பந்திகள் உதவியோடு உடைத்து திறந்து மயக்கத்திலிருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
படித்தவர், கர்நாடக சங்கீத குடும்பத்தின் நாலாவது தலைமுறை சங்கீத வித்துவான், இசையமைப்பாளர், எழுத்தாளர், பயிற்சியாளர், சமூக ஆர்வலர் என பல முகம் கொண்டவர் ஜெயஸ்ரீ.
பத்ம ஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர், பல மொழிகளில் பாடும் திறமை பெற்றவர். தமிழர்களுக்கு "வசீகரா" பாடியவர் என்றே அறிமுகமானவர், குறிப்பாக கர்நாடக சங்கீதம் தெரியாதவர்களுக்கு. அதிகம் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியவர். "லைஃப் ஆஃப் பை" படத்தில் இவர் பாடிய தாலாட்டு பாடல் 'சிறந்த அசல் பாடலுக்கு' பரிந்துரை செய்யப்பட்டது. இளையராஜா இசையில் மூன்று பாடல்கள், அதில் "பாரதி" திரைப்படத்திற்காக பாடிய "நின்னை சரண்" அடைந்தேன் பாடல் எல்லா தரப்பு ரசிகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. தமிழக அரசு 2007 ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. உலகின் தலை சிறந்த இசைக்கலைஞர்களோடு இணைந்து பாடியவர். இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கும் சென்று மாணவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்திய செவ்விசையை அறிமுகப்படுத்தியவர்.
மியூசிக் அகாதமியின் விருது அறிவிப்பால் மகிழ்ச்சியில் திளைத்த சங்கீத உலகம் அவரின் உடல் நிலை செய்தி கேட்டு துயரத்தில் ஆழ்ந்துள்ளது. மயங்கிய ஜெய ஶ்ரீ மீண்டும் புத்துணர்வோடு எழுந்து வந்து "சங்கீத கலாநிதி" விருது பெற்று அதே மேடையில் பாடி அவரின் வசீகரக்குரலால் நம்மை மயக்கும் நாளை எதிர்நோக்கி நம் பிரார்த்தனைகளோடு காத்திருப்போம்....
Leave a comment
Upload