அதானி + மோடி + ராகுல் காந்தி = பாராளுமன்றத் தேர்தல்
அதானி குழுமம் மீதான ஹிண்டன் பார்க் குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்றத்தில் உள்ளேயும் சரி வெளியேயும் சரி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சனையை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. முதல் மூன்று நாட்கள் இதே பிரச்சனைக்காக எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தைத் நடத்த விடாமல் முடக்கியது. ஆம் ஆத்மி கட்சி, பாரதிய ராஷ்டிரிய சமிதி ஆக இரண்டு கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று பாராளுமன்ற நடவடிக்கை புறக்கணிக்கின்றன.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ராகுல் காந்தி பேசினார். தனது நடைப்பயண அனுபவங்கள் மக்கள் கருத்து இவற்றையெல்லாம் குறிப்பிட்டு விட்டு அதானி குழுமம் பிரச்சனைக்கு முக்கியத்துவம் தந்து ராகுல் காந்தி பேசினார். அவரது பேச்சு பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற திட்டத்துடன் இருந்தது என்பது தான் உண்மை. பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு போனால் அந்த நாட்டில் அதானிக்கு கடன் கிடைக்கும் ஒப்பந்தங்கள் கிடைக்கும் அதானிக்கு மோடிக்கும் என்னதான் தொடர்பு என்று கேட்டார் ராகுல் காந்தி.
அதானி குழுமம் எட்டு முதல் பத்து துறைகளை இயக்குகின்றன. 2014-இல் 8 பில்லியன் டாலராக இருந்த அதானி குழுமத்தின் மதிப்பு இப்போது 140 பில்லியன் டாலராக எப்படி உயர்ந்தது என்று கேட்டார் ராகுல் காந்தி. தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை அதானி… அதானி… அதானி தான் இவர்கள் செய்யாத தொழிலே இல்லை எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு தோல்வி இல்லை இது எப்படி சாத்தியம் என்பது ராகுல் காந்தி கேள்வி.
2014-இல் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு விமான போக்குவரத்தில் அனுபவம் உள்ளவருக்கு மட்டுமே விமான நிலைய மேம்பாட்டு பொறுப்பு வழங்கலாம் என்ற விதியை தளர்த்தி ஆறு விமான நிலையங்கள் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தியாவில் அதிக லாபத்தை ஈட்டி தரும் விமான நிலையமாக மும்பை விமான நிலையம் இருந்தது. அதை நிர்வகித்த நிறுவனத்திடம் சிபிஐ , அமலாக்கத்துறை மூலம் மிரட்டி அவர்களிடமிருந்து அந்த விமான நிலையத்தை அதானியிடம் கொடுத்தது மத்திய அரசு. இது இந்த நாட்டின் பிரதமரால் அதானிக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதி.
2014- ஆம் ஆண்டு உலகப் பணக்காரர் பட்டியலில் 609-வது இடத்தில் இருந்தார் அதானி, பிரதமர் மோடியின் நண்பர் ஆனார். இப்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் அதானி காரணம் பிரதமர் மோடி.
நான் நடைபயணம் சென்ற இடங்களில் எல் ஐ சி மற்றும் வங்கிகளின் பணத்தை அரசு ஏன் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்கிறது என்று மக்கள் என்னிடம் கேட்டார்கள் அதானி நிறுவனத்தில் முதலீடு பாதுகாப்பானது தானா என்பது மக்கள் கேள்வி இதற்கு மத்திய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்.
அதானியும் நீங்களும் எத்தனை முறை வெளிநாட்டுக்கு பயணம் செய்திருக்கிறீர்கள் அல்லது நீங்கள் வெளிநாட்டுக்கு போன போது உங்களை எத்தனை முறை அதானி சந்தித்தார் எத்தனை வெளிநாட்டில் வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு பிரதமர் சிபாரிசு செய்தார் கடந்த 20 ஆண்டுகளில் அதானி பாரதிய ஜனதாவுக்கு எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார் ராகுல் காந்தி.
இந்தியாவின் வெளியுற கொள்கையே அதானியின் வசதிக்காக மாற்றப்பட்டது என்றார் ராகுல் காந்தி.
அதானி குழுமம் ட்ரோன் தயாரிப்பு கம்பெனி எதுவும் வைக்கவில்லை.பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றார் உடனே அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் கிடைக்கிறது அதுபோன்று ஆஸ்திரேலியா சென்றார் உடனே எஸ் பி ஐ வங்கி ஒரு பில்லியன் கடன் வழங்குகிறது .பிரதமர் மோடி வங்கதேசம் சென்றார் வங்கதேசம் ஒப்பந்தங்கள் அதானிக்கு கிடைக்கிறது என்று இப்படி பட்டியல் போட்டார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு இந்தக் கேள்வியுடன் தனது உரையை முடித்தார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி பேசும் போது பாரதிய ஜனதா அவர் பேச விடாமல் தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுத்த வண்ணம் இருந்தது. ஆனாலும்,அவர் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு தான் அமர்ந்தார் ராகுல் காந்தி.
மறுநாள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசினார். அவர் ராகுல் காந்தி என்று பெயரை குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக கடுமையாக தாக்கினார். நேற்று ஒரு உறுப்பினர் பேசிய போது எதிர்க்கட்சிகள் துள்ளி குதித்து உற்சாகமாக இருந்ததை நான் பார்த்தேன் இதனால்,அவர்கள் இன்று காலதாமதமாக தான் எழுந்திருந்து இருப்பார்கள் என்றார் பிரதமர். எதிர்க்கட்சிச் சார்பாக பேசியவர்கள் யாரும் குடியரசுத் தலைவர் உரையை பற்றி எதுவுமே பேசவில்லை இதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை மக்கள் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பார்கள். குடியரசுத் தலைவர் உரையை 140 கோடி மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேச்சு அவர்கள் தரத்தை காட்டுகிறது.
2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்தது அவர்கள் ஒவ்வொரு வாய்ப்பையும் பிரச்சனையாக மாற்றியது தான் அவர்கள் சாதனை 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதுதான் பெரும்பாலான ஊழல்கள் நடந்தது. அந்தப் பத்து ஆண்டுகளும் ஊழல் ஆட்சிதான் இந்த பத்து ஆண்டுகளில் நமது பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சி அடைந்தது என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.
நாங்கள் நிர்பந்தத்துக்காக எந்த சீர்திருத்தங்களையும் செய்யவில்லை ஜனநாயக நாட்டில் விவாதம் என்பது ஒரு முக்கியமான விஷயம் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல் சிலர் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளை குற்றமாக சொல்கிறார்கள். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக அரசு நிறுவனங்கள் அவமானப்படுத்தப்பட்டன. பாதுகாப்பு படைகள் மீது அவதூறு பரப்பப்பட்டன. நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமாக இல்லாத போது நீதிமன்றங்கள் மீது சிலர் அவதூறு சொல்கிறார்கள். தேர்தலில் தோற்றபோது தேர்தல் ஆணையத்தையும் மின்னணு இயந்திரத்தையும் அவதூறு செய்தனர். எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் அமைப்பாக இன்று அமலாக்கத்துறை இருக்கிறது இதற்காக எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறைக்கு நன்றி சொல்ல வேண்டும்என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார் மோடி.
மோடியை விமர்சித்தால் மட்டுமே தங்களால் அரசியலில் பிழைக்க முடியும் என சிலர் நினைக்கிறார்கள். 22 ஆண்டுகளாக எதிர்க்கட்சியினர் என்னை விமர்சித்து வருகிறார்கள் அது பற்றி நான் கவலைப்படவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்தவித தீவிரவாதமும் நடைபெறவில்லை இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது என்று பேசினார் பிரதமர் .அதானி பற்றிய ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதானி பற்றிய சர்ச்சைக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது என்கிறார்கள் சில பொருளாதார நிபுணர்கள். கார்ப்பரேட் கம்பெனி என்பதை தாண்டி அதானி குழுமம் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு விரிவு என்கிறார் ஒரு பொருளாதார நிபுணர் .கூகுள் ட்விட்டர் பேஸ்புக் மைக்ரோசாப்ட் போன்ற கம்பெனிகள் எப்படி அமெரிக்க வெளியுறவு கொள்கை நீட்ச்சியோ அப்படி இந்தியாவுக்கு அதானி குரூப் கம்பெனிகள் என்கிறார்கள்.
இந்தியா உலக அளவில் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் துணை நிற்கிறார்கள் இந்தியா வளரக்கூடாது. அதற்கு ஒரே வழி அதானி போன்ற நிறுவனங்களை ஒழிப்பது தான் மிகவும் முக்கியம் அதனால்தான் அதானி குழுமம் மீது இந்த தாக்குதல் உலக அளவில் இதுவரை முடிவு எடுக்கும் இடத்தில் அமெரிக்கா இருந்தது இப்போது அதன் பிடி மெல்ல நழுவுகிறது இந்தியா சொல்வதை உலக நாடுகள் கேட்கிறது இதுதான் அமெரிக்காவுக்கு எரிச்சல் அதற்காகத்தான் ஹிண்டன் பார்க் நிறுவனத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது என்ற பேச்சும், இப்போது வரத் தொடங்கி இருக்கிறது.
இஸ்ரேலில் உள்ள ஹைபா துறைமுகம் தனக்குத்தான் என்று சீனா குறி வைத்தது. ஆனால், அதானி அதைத் தட்டி பறித்து விட்டார். அந்த துறைமுகம் சீனாவிடம் இருந்தால் இந்தியாவின் வர்த்தகத்துக்கு அது ஒரு மிகப்பெரிய தடையாக இருந்திருக்கும். அதே போல் தான் இலங்கை துறைமுகம் அதனால்தான் சீனா அதானி குழுமத்தை அழிக்க பார்க்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து நிலக்கரி சுரங்கங்களும் இப்போது அதானி வசம் இந்த நிலக்கரி சுரங்கங்கள் மீதும் சீனாவுக்கு ஒரு கண் ஆனால் சீனா ஆஸ்திரேலியா உறவு சுமூகமாக இல்லை இதைப் பயன்படுத்தி தான் அதானி முந்திக்கொண்டார். ஒரு ஏற்றுமதி நிபுணர் ஒரு கருத்தை சொல்கிறார் அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் நிலக்கரி இந்திய நிலக்கரியாகத்தான் கருதப்படும் ஏனெனில் இந்திய நிறுவனத்தில் தான் நாம் அந்த நிலக்கரியை வாங்குகிறோம் இதன் மூலம் நமக்கு நிறைய சலுகை கிடைக்கும் என்கிறார் .
ராகுல் காந்தி சொல்லும் அதானி மோடி தொடர்பு இதுதான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள் அதானி வளர்ச்சிக்கு மோடி அல்லது இந்திய அரசுமறைமுக காரணமாக இருக்கலாம்.ஆனால், அதானி வளர்ச்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்று தான் பார்க்க வேண்டும் அதுதான் உண்மை என்கிறார்கள்.
உதாரணத்திற்கு சீனாவின் தூதரகங்கள் அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவில் இருக்கும் சீன தூதரகங்கள் தங்கள் நாட்டு வியாபார நிறுவனங்களின் விற்பனை அலுவலகமாக செயல்படுவதையே சொல்லலாம். உதாரணத்திற்கு ஒரு நாட்டில் கார் டயர்களுக்கு நல்ல கிராக்கி இருந்தால் சீன தூதரக அதிகாரிகளே அந்த நாட்டு வியாபாரிகளிடம் சென்று சீன பொருட்களை / நிறுவனங்களை அறிமுகப்படுத்துவது சர்வ சாதாரணம். இதற்கு காரணம் தங்கள் நாட்டுக்கு இந்த ஏற்றுமதி ஆர்டர்கள் வருமானம் வரவேண்டும் என்ற ஒரே உந்துதல் தான்.
ராகுல் காந்தி பிரதமராக இருந்தாலும்,அதானிக்கு இப்படிப்பட்ட உதவிகளை நிச்சயம் செய்திருப்பார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இன்று ராகுல்காந்தி சொன்ன அதே குற்றச்சாட்டை மோடி சொல்லி இருக்கக்கூடும் என்கிறார்கள்.
மோடி இன்னொரு விஷயத்தையும் அடிக்கடி சொல்கிறார். இந்தியா காலணி ஆதிக்கத்தில் இருந்து எல்லா விஷயத்திலும் நாம் வெளியே வர வேண்டும் என்கிறார் நாம எந்த நாட்டிடமும் கை கட்டிக் கொண்டு உதவி கேட்கும் நிலை வரக்கூடாது என்றும் குறிப்பிடுகிறார். அதானியைப் போல் அம்பானி மீதும் ஏதாவது வெளிநாட்டு நிறுவனம் இதே குற்றச்சாட்டை விரைவில் சொல்லும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
நன்றி : தினமணி
ராகுல்காந்தி அதானி குழுமம் மோடி தொடர்பு என்ற குற்றச்சாட்டுக்கு காரணம் வரும் பாராளுமன்றத் தேர்தல் என்பதுதான்…. மோடி என்ற பிம்பத்தை உடைத்தால்தான் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம்.
இப்போது மாநிலங்கள் அவையிலும் காங்கிரஸ் கட்சிச் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து விட்டது ஏற்கனவே மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தேவையான உறுப்பினர்கள் இல்லாததால் காங்கிரஸ் கட்சி ஒரு குழுவாக தான் கருதப்படுகிறது.
ராகுல் காந்தியின் பாதயாத்திரை அதானி குழும பிரச்சனை இவையெல்லாம் ராகுல் காந்திக்கு எந்த அளவு கை கொடுக்கும் என்று தெரியவில்லை ராகுல் காந்தியின் பாதயாத்திரை காஷ்மீரில் நிறைவுபெறும் நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி 27 எதிர்க்கட்சிகளை காஷ்மீரில் கலந்து கொள்ளுமாறு அழைத்ததில் 12 கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டது.
இன்று வரை ஆம் ஆத்மி பாரதிய ராஷிட்ரிய சமிதி ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளவில்லை மம்தா பானர்ஜி பாரதிய ஜனதாவுக்கு மாற்று திரிணாமுல் காங்கிரஸ்தான் என்கிறார். நிதீஷ் குமார் எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அங்கீகரிக்கவில்லை. அகிலேஷ் யாதவ் கருத்தும் இதுதான் இந்த விஷயம் எல்லாம் ராகுல்காந்திக்கு தெரியுமோ தெரியாதோ மோடிக்கு தெரியும். அதனால் தான் ராகுல்காந்தி விமர்சனத்திற்கு அவரது கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.
அதானியை சுற்றி வரும் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் அமையலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
Leave a comment
Upload