இந்திய வாக்காளர்கள் இனி வரும் தேர்தல்களில் நம்பிக்கையுடன் வாக்களிப்பார்களா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக எழந்துள்ளது.
இந்திய அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் சுடும் வாயில வடை வாக்குறுதிகளை அடுத்த தேர்தல் வரை நிறைவேற்றாமல் தவிர்த்து விட்டு , புதிய தேர்தலுக்கு புதிய வாயில வடை சுடுவது வழக்கமாகி வருகிறது.
தேர்தல் அறிக்கையில் வரும் வேலைவாய்ப்பு , விலைவாசி குறைப்பு போன்ற வாக்குறுதிகளை எந்த அரசியல் கட்சியும் தங்கள் அதிகாரம் இருக்கும் வரை செய்ய முன்வருவதில்லை.
நகர்புறத்தில் இருக்கும் பெரும்பான்மையான வாக்காளர்கள் தேர்தல் நாள் அன்று வாக்களிக்காமல் பொறுப்பில்லாமல் எங்காவது பிக்னிக் சென்றுவிடுவது அல்லது வீட்டில் டிவி பார்த்து ரெஸ்ட் எடுப்பது என்பது வாடிக்கையாகி விட்டது.
வாக்காளர்களுக்கு மது விருந்து முதல் பணவிருந்து வரை வேட்பாளர்கள் கவனிப்பதால் நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் இதனால் எரிச்சலடைந்து தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வருவதில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
புலம் பெயர்ந்து வெளியூர்களில் இருப்பவர்கள் தேர்தல் நாள் அன்று தங்கள் ஊர்களுக்கு சென்று வாக்களிக்க அதிக செலவு ஆகும் என்பதால் அவர்களும் வாக்களிக்க செல்வதில்லை. இருக்கும் இடத்தில் இருந்து வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி தருவதையும் திருவாளர் அரசியல்வாதிகளும் ஏற்காமல் பிரச்சனை செய்து இந்த திட்டத்தினை தவிர்த்து வருகின்றனர்.
மிஸ்டர் பொதுஜனம் நாளுக்கு நாள் தேர்தல் நாள் என்றால் விட்டமின் ப மற்றும் மதுபோதை விருந்து என்ற நிலைமை மாறிவிட்டதால் வாக்களிக்க செல்லாமல் ஜனநாயக தேர்தல் திருவிழா கேலிகூத்தாக மாறிவிட்டது.
எம்.எல்.ஏ தேர்தலுக்கு வேட்பாளர் 6 கோடி ருபாய் குறையாமலும், எம்பி தேர்தலுக்கு வேட்பாளர் கிட்டதட்ட 50 கோடி ருபாய் வரை தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளதால் பல நல்ல தரமான வேட்பாளர்கள் அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டோம் என்று பிரபலமான அரசியல் தலைவர் ஒருவர் நம்மிடம் சொன்னார்.
நடுத்தர வர்க்கத்தினர் பலர் இனி வரும் காலங்களில் தேர்தலில் வந்து வாக்களிப்பது பெரிய விஷயமாக இருக்கும் .அத்துடன் வெறுப்பு அரசியல் , ஊழல்வாதிகள் ,மக்கள் பற்றிய கவலையில்லாமல் அரசியல்வாதிகளின் சுயநலபோக்கும் இனி வாக்கு சாவடிகளில் வந்து வாக்களிப்பது குறைந்து விடும் என்ற தகவலும் உள்ளது.
இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்ததும் ஒரு சிலரை தவிர தங்கள் சொத்துக்களை சேர்க்கும் தொழிலாக மாற்றி விடுகின்றனர். இந்திய அரசியல்வாதிகள் அனைவரின் சொத்துக்களையும் நாட்டுடமை ஆக்கினால் இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்று இளைஞர்களின் கருத்தாக உள்ளது.
பல ஆண்டுகளாக வெளிநாட்டில் கருப்பு பணம் உள்ளதை இந்தியாவிற்கு கொண்டு வருவோம் என்று சொன்ன அரசியல் கட்சிகள் வாய்முடி ஊமையாக மாறிவிட்டது.
1962 வருடம் இருந்த இந்திய வாக்காளர்களை விட தற்போது நான்கு மடங்கு உயர்ந்து 94.5 கோடி வாக்களர்கள் உள்ளனர். அதில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் ஓரு பகுதியினர் அதாவது 30 கோடி பேர் வாக்களிக்கவில்லை .இதில் இளைஞர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற அதிர்ச்சி தகவலை இந்திய தேர்தல் ஆணையம் கவலையுடன் தெரிவித்துள்ளது.
ரிமோட் வோட்டிங் இயந்திரம் அமைந்ததால் வெளியூர்களில் இருக்கும் வாக்காளர்கள் அவர்கள் இடத்தில் நிற்கும் வேட்பாளர்களுக்கு தங்கியிருக்கும் இடங்களில் இருந்து எளிதாக வாக்கு அளிக்க முடியும் என்பது தேர்தல் ஆணையத்தின் கருத்தாக உள்ளது.
இன்றைய தேதிக்கு ஸ்மார்ட் போனில் பல விஷயங்கள் நடக்கிறது. ஹாங்காங் போன்ற நகரங்களில் ஐஅம் ஸ்மார்ட் என்ற செயலி ஒவ்வொருவரும் தன் அடையாளத்தை அரசுக்கு ரிமோட்டாக காட்டும் வகையில் இயங்குகிறது. நேரில் செல்ல வேண்டிய பல விஷயங்கள் ஸ்மார்ட் போனிலேயே வந்து விட்டது. (ஆனால் அங்கும் தேர்தலுக்கு இது உபயோகப்படவில்லை இன்னமும்) இப்படி ஏதேனும் ஒரு யோசனை செய்தாலாவது இந்த நகர்ப்புற தேர்தல் பிக்னிக் பார்ட்டிகள் வரிசையில் நிற்காமல் ஓட்டுப் போடவைக்க முடியுமா என்று யோசிக்க வேண்டிய தருணம் இது.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக வரும் இந்திய தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க செல்லாமல் ஜனநாயகத்தில் கேலி கூத்தாகும் நிலை நெஞ்சை சுடும் நிஜம்!
Leave a comment
Upload